காஞ்சிபுரம்: வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல்; கைகலப்பு!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பார்வேட்டை உற்சவத்தின்போது வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

காஞ்சிபுரத்தில் பொங்கல் பண்டிகையின்போது வரதராஜபெருமாள் கோயில் பார்வேட்டை உற்சவம் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த உற்சவத்தின்போது வரதராஜ பெருமாள் பல்வேறு கிராமங்கள் வழியாக புறப்பாடாகி பழையசீவரம் மலைக்குச் செல்வார். வழியில் கிராமங்களில் அவருக்கு பெரும் வரவேற்பு அளிப்பர். பழைய சீவரம் மலை மீதும் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

இதுபோல் இந்த ஆண்டும் பார்வேட்டை உற்சவம் நடைபெற்றது. பெருமாள் பழைய சீவரம் மலைக்குச் சென்ற பிறகு பிரபந்தங்கள் பாடுவது தொடர்பாக வடகலை, தென்கலை பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. யார் முதலில் பாடுவது என்பது தொடர்பாக இரு பிரிவினரும் வாக்குவாதம் செய்து கொண்டனர். ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது. இதனைத் தொடர்ந்து ஒருவரையொருவர் மாறி, மாறி தாக்கிக் கொண்டனர்.

இதனால் அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி பாட வைத்தனர். ஏற்கெனவே இவர்களுக்குள் பிரபந்தம் பாடுவதில் மோதல் நிலவி வருகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக இவர்களுக்குள் அடிக்கடி மோதல் நிலவி வரும் நிலையில் தற்போது ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.