ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினி சந்தித்தார் என்ற செய்தி வெறும் வதந்தியே!

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து நலம் விசாரிப்பது, ஆலோசிப்பது வழக்கம். ஆனால், அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதாலும், தொடர் படப்பிடிப்பில் இருந்ததாலும் இந்த சந்திப்பு கடந்த சில வருடங்களாக நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்குமுன் ரஜினி தனது மாநில மற்றும் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அச்செய்தியுடன் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி உரையாடியபடி இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டு இருந்தது.
இதனால், ரஜினி அரசியலில் ஈடுபடுவது குறித்து மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்ததாக வழக்கமான யூகங்கள் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தன.
இது குறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் விசாரித்ததில், அப்படி ஒரு சந்திப்பு நடைபெறவே இல்லை என்று அவர்கள் திட்டவட்டமாக கூறுகிறார்கள். ரஜினி, ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் உரையாடியபடி இருக்கும் புகைப்படமும், பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது என்றும் கூறுகின்றனர்.
எனவே, ரஜினி இரண்டு நாட்களுக்குமுன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்ததாக வெளிவந்த செய்தி வெறும் வதந்தியே என்று அவர்கள் கூறுகின்றனர்.