பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் கைது
பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பாஜக சார்பில் இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் போட்டியிட்டு அண்மையில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்தபோது, அங்கிருந்த பெண் காவலர் குல்விந்தர் கவுருடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த பெண் காவலர் குல்விந்தர் கவுர், ரனாவத்தை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, குல்விந்தர் கவுர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காரணம் என்ன:
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் பற்றி தவறான கருத்துகளை கூறியதற்காகவே ரனாவத்தை கன்னத்தில் அறைந்ததாக குல்விந்தர் கவுர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்தின்போது அவர்களுக்கு எதிராக ரனாவத் வெளியிட்ட பதிவுகள் தான் இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம் என்று சிஐஎஸ்எஃப் வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.
ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தபோது, போராட்ட களத்தில் உள்ள வயதான பெண்கள் 100 ரூபாயை வாங்கிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக சமூக ஊடகத்தில் கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து அந்தப் பதிவை நீக்கினார். இது தொடர்பாகத் தான் ரனாவத்துக்கும், பெண் காவலர் குல்விந்தர் கவுர் இடையே தற்போது மோதல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பெண் காவலர் குல்விந்தர் கவுர் கூறுகையில், “ 100 ரூபாய் வாங்கிக் கொண்டு பெண் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக ரனாவத் கூறுகிறார். என் தாயாரும் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றார். விவசாயிகளை இழிவுபடுத்தும் ரனாவத் வந்து அந்த போராட்டத்தை முன்னின்று நடத்துவாரா’’ என்று கூறியிருந்தார்.