சூ மந்திரகாளி – விமர்சனம்
நடிப்பு: கார்த்திகேயன் வேலு, சஞ்சனா புர்லி, கிஷோர் தேவ்
இயக்கம்: ஈஸ்வர் கொற்றவை
தயாரிப்பு: அன்னக்கிளி வேலு
யதார்த்தத்தையும் மாயாஜாலங்களையும் கலந்து மேஜிக்கல் ஃபேண்டசி ரகத்தில் கலக்கல் காமெடிப்படமாக வந்திருக்கிறது ‘சூ மந்திரகாளி’.
பங்காளியூர் என்ற ஊரில் வாழ்பவர்கள் அனைவரும் அண்ணன் – தம்பி உறவுமுறை கொண்ட பங்காளிகள். இருந்தபோதிலும், பொறாமை குணத்தில் உச்சம் தொட்டவர்கள். ஒரு பங்காளிக்கு நல்ல வாழ்க்கை அமையப்போகிறது என்றால் அதை மற்ற பங்காளிகளால் தாங்கிக்கொள்ள முடியாது. அதை சூனியம் வைத்தாவது கெடுத்தே தீருவார்கள்.
இந்த ஊரைச் சேர்ந்தவர் கதையின் நாயகன் முருகன் (கார்த்திகேயன் வேலு). அவர் தனது ஊர்மக்களிடம் இருக்கும் பொறாமை எனும் தீயகுணத்தை ஒழிப்பதற்கு, பக்கத்து ஊரிலுள்ள மாந்திரீகம் தெரிந்த ஒருவரை அழைத்துவரச் செல்கிறார்.
அப்படி சென்ற இடத்தில், மாந்திரீகம் நன்கு கைவரப்பெற்ற இளம்பெண்ணான நாயகி சுந்தரவள்ளியை (சஞ்சனா புர்லி) பார்க்கிறார். அவளது அழகில் மயங்கி காதல் வயப்படும் முருகன், அவளை திருமணம் செய்து தன் ஊருக்கு அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறார். அவரது ஆசை நிறைவேறியதா? அவருடைய ஊர்மக்களின் பொறாமை ஒழிந்ததா? என்பது மீதிக்கதை.
நாயகன் முருகனாக வரும் கார்த்திகேயன் வேலு, புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு நடித்து இருக்கிறார். மாந்திரீகம் தெரிந்த பெண்ணாக சஞ்சனா புர்லி அறிமுகமாகி இருக்கிறார். வசீகர முகம். நடிப்பிலும் பளிச்சிடுகிறார். தேவசேனா என்ற பெயரில் பெண்வேடத்தில் வரும் கிஷோர் தேவ் நடிப்பு அட்டகாசம்.
படத்தின் முதல் பாதியை கலகலப்பாக கதை சொன்ன இயக்குனர் ஈஸ்வர் கொற்றவை, இரண்டாவது பாதியில், ‘கிராபிக்ஸ்’ உதவியை நாடியிருக்கிறார். படம் முழுக்க ஏராளமான புது முகங்கள் நடித்திருந்தாலும் அவர்களை திறம்பட கையாண்டுள்ளார்.
சதீஷ் ரகுநாதனின் பாடலிசை, நவிப் முருகனின் பின்னணி இசை, முகமது பர்ஹானின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
’சூ மந்திரகாளி’ – ரசிக்கத்தக்க காமெடி மந்திரம்!