சித்திரை 1 ஏன் தமிழ் புத்தாண்டு இல்லை…?
1-சித்திரை புத்தாண்டு முறை கிபி 78க்கு பிறகுதான் சாலிவாகனன் காலத்துக்கு பிறகு மத புராணங்களின் வழி தமிழ் மக்களிடம் திணிக்கப்பட்டது.
2-கிருஷ்ணரும் நாரதரும் 60 ஆண்டுகள் உடலுறவுகொண்டு பெற்றுகொண்ட 60 மகன்கள்தான் பிரபவ தொடங்கி அட்சய வரைக்குமான சமஸ்கிருத ஆண்டுகள் என்கிறது அபிதானசிந்தாமணி.
3 – இந்த 60 ஆண்டுகளில் 15 ஆண்டுகளை சூத்திர ஆண்டுகள் என்கிறார்கள். ஆண்டுகளில் கூட சாதி வர்ண பிரிவினை.
4 – இப்படிப்பட்ட முட்டாள்தனமான அறிவுக்கு புறம்பான யாரோ தமிழரல்லாதவர் உருவாக்கிய கதைகளைக் கொண்ட சமஸ்கிருத திணிப்பு ஆண்டுகணக்கை மாற்ற தமிழறிஞர்கள் முடிவெடுத்தனர்.
5 – 1935ல் திருவிக, மறைமலைஅடிகள், உவேசா, காசுப்ரமணியபிள்ளை, சோமசுந்தரபாரதியார், கிஆபெ விஸ்வநாதம் முதலான தமிழ் அறிஞர்கள் பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி புதிய ஆண்டை உருவாக்க தொடங்கினர்.
6 -தமிழ் மீது பற்றுகொண்ட பெருமக்கள் ஆரியகலப்பையும் சமஸ்கிருத திணிப்பையும் புறந்தள்ளினர். தமிழ் புத்தாண்டுக்கு ஏன் சமஸ்கிருத ஆண்டு பெயர்கள், தமிழ் புத்தாண்டுக்கு ஏன் மத சார்பு கதைகள் என… தமிழர்களுக்கென திருவள்ளூர் ஆண்டுகளை உருவாக்கினர்.
7 – உலகங்கும் ஜனவரியின் வசந்தகால அடிப்படையில்தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில் நமக்கென புத்தாண்டுகள் இருந்தது என்பதற்கான சான்றுகள் இல்லை என்றாலும், மாதங்களில் 80% தை கொண்டாட்டங்களே பிரதானமாக இருந்திருக்கிறது. விவசாய குடிகளான நமக்கு அறுவடைக்காலமே புதிய ஆண்டின் துவக்கமாக இருக்க முடியும் என தீர்மானித்து திருவள்ளுவர் ஆண்டு காலண்டரை உருவாக்கினர்.
8 – அறுவடைக்காலமான தை 1ஐ தமிழ்ப்புத்தாண்டாக கொண்டு சமஸ்கிருத ஆண்டுகணக்கிலிருந்து 31 வருடங்கள் பின்னோக்கி திருவள்ளுவர் ஆண்டினை உருவாக்கினர். இதில் தை 1ஐ முதல் மாதமாக்கி அதையே தமிழ்புத்தாண்டு என அறிவித்தனர் தமிழ் அறிஞர்கள்.
9 – 1935லேயே இதை அறிவித்திருந்தாலும், திராவிடர் முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தபின் 1972ல் கலைஞர் இதனை ஏற்றுக்கொண்டு அரசு பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் திருவள்ளுவர் ஆண்டை பயன்படுத்த ஆணையிட்டார்.
10 – இருப்பினும் பொல்லாத ஆரிய சதி நம்மை விட்டு அகலவில்லை. மீண்டும் மீண்டும் சமஸ்கிருத நாட்காட்டியின் படி உருவாக்கப்பட்ட சித்திரை 1தான் தமிழ் புத்தாண்டு என்கிற பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு வியாழனும் சனி கிரகமும் சூரியனை சுற்ற 60 ஆண்டுகள் ஆகிறது என்றெல்லாம் விஞ்ஞான காரணங்களை புனைந்தன சமஸ்கிருத கூட்டம்.
11 – பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா தமிழர் கூட்டம். 2006ல் முதல்வராக பதவியேற்ற கலைஞர் தை1 தான் இனி தமிழ்புத்தாண்டு என அதிகாரபூர்வமாக அறிவித்து ஆணையிட்டார்
12 – பார்ப்பனர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியுமா… பிரிட்டிஷ் காலத்தில் பிராமின் நியூ இயர் என்று அறிவிக்கபட்ட நாள் ஆயிற்றே. கலைஞர் ஆட்சி அகலும் வரை காத்திருந்தனர். ஜெயலலிதா மீண்டும் 2011ல் ஆட்சிக்கு வந்ததும் அம்மையாரிடம் முறையிட்டு மீண்டும் பழையபடி சித்திரை 1 ஐயே புத்தாண்டாக அறிவிக்க செய்தனர்
13 – நம் சங்க இலக்கியங்கள் எங்கும் நிறைந்திருப்பது தை கொண்டாட்டங்கள் மட்டும்தான். தை கொண்டாட்டங்களுக்கு மத சார்பு கிடையாது.தமிழராக அனைவரையும் ஒன்றிணைக்கிற ஒன்றாக அது இருக்கிறது. ஆனால் சித்திரை புத்தாண்டு மத சார்பு கொண்டது. அது இந்துக்களுக்கு மட்டுமானது என்பதை பறைசாற்றுகிறது. சித்திரை 1 ஒட்டுமொத்த தமிழர்களுக்குமானது அல்ல. தை 1தான் அனைவருக்குமான புத்தாண்டு.
14 – அதனால்தான் நம் கவி பாரதிதாசன் பாடினான்…
“நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் , கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”
15 – ஆரியர்கள் திணித்த சித்திரை திருநாள் நம்முடைய புத்தாண்டு அல்ல… தை 1 தான் தமிழர்களாகிய நாம் நமக்காக உருவாக்கிய புத்தாண்டு. அதை கொண்டாடுதல்தான் நமக்கு பெருமையே தவிர இது அல்ல.
இறுதியாக, கொண்டாட்டத்தில் அரசியல் பார்க்கவேண்டுமா என்று கேட்கலாம். அரசியல் பார்க்காமல் போனதால்தான் சமஸ்கிருத புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என நமக்கே விற்றிருக்கிறது இன்னமும் விற்றுக்கொண்டிருக்கிறது பார்ப்பன கும்பல்!
Athisha Vinod