செவ்வாய் கிழமை – விமர்சனம்
நடிப்பு: பாயல் ராஜ்புத், நந்திதா ஸ்வேதா, ஸ்ரீதேஜ், அஜ்மல் அமீர், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லக்ஷ்மன் மற்றும் பலர்
இயக்கம்: அஜய் பூபதி
ஒளிப்பதிவு: தசரதி சிவேந்த்ரா
படத்தொகுப்பு: குலப்பள்ளி மாதவ் குமார்
இசை: பி.அஜனீஷ் லோக்நாத்
தயாரிப்பு: ‘ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ்’ அஜய் பூபதி & ‘முத்ரா மீடியா ஒர்க்ஸ்’ சுவாதி ரெட்டி குணுபதி – சுரேஷ் வர்மா.எம்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)
சில நேரங்களில் சில படங்கள் பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எதுவும் யோசிக்காமல் பார்க்க உட்கார்ந்தால், ‘அட… பரவாயில்லையே’ என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவை பிரமாதமாக இருந்துவிடுவது உண்டு. அத்தகைய படம் தான் தமிழில் ‘செவ்வாய் கிழமை’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மங்களவாரம்’ என்ற பெயரிலும் வெளியாகியிருக்கும் இந்த படம்.
மகாலட்சுமிபுரம் என்ற ஊரில், ஒரு செவ்வாய் கிழமை, ஒரு வீட்டுச்சுவரில், இன்னாருக்கு இன்னாரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு என்று எழுதப்பட்டிருக்கிறது. எழுதியது யார் என்று தெரியாமல் ஊர் திகைக்கிறது. அன்றைய தினமே அந்த கள்ளக்காதலர்கள் மர்மமான முறையில் இறந்துபோகிறார்கள். ஊர் அதிர்ச்சியடைகிறது.
அந்த ஊருக்கு புதிதாக வந்திருக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்திதா ஸ்வேதா, இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க நினைக்கிறார். ஆனல், உள்ளூர் ஜமீன்தார் அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறார். எனவே, ஜமீன்தார் சொன்னபடி, அது தற்கொலை என்று வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
அடுத்த செவ்வாய் கிழமை, இன்னொரு சுவரில், இன்னொரு ஜோடியின் கள்ளத் தொடர்பு பற்றி எழுதப்பட்டிருக்கிறது. அன்றே அந்த ஜோடியும் மர்ம்மான முறையில் இறந்துபோகிறது. இது தொடர்பான போலீஸின் தீவிர விசாரணையை ஜமீன்தாரால் தடுக்க முடியவில்லை. ஆகவே புலன் விசாரணை போஸ்ட்மார்ட்டம் வரை செல்கிறது. சாவு தற்கொலை அல்ல, கொலை என முடிவாகிறது.
சுவரெழுத்துக்களும், மர்மச்சாவுகளும் செவ்வாய்கிழமை தோறும் நடப்பதால், அதற்கடுத்த செவ்வாய் கிழமை, ஒருபுறம் போலீசார் ரோந்துப் பணியிலும், மறுபுறம் ஊர்க்காரர்கள் காவல் பணியிலும் ஈடுபட்டு, சுவரில் கள்ளத்தொடர்பு பற்றி எழுதுகிற – கள்ளக்காதல் ஜோடிகளை கொலை செய்கிற – நபரை கையும் களவுமாக பிடிக்க முயல்கிறார்கள்.
இதற்கிடையில், இதெல்லாம் இறந்துபோன ஷைலு என்ற பெண்ணின் (பாயல் ராஜ்புத்) ஆவியின் வேலை என்கிறார் ஒரு மருத்துவர். யார் அந்த ஷைலு? அவர் ஏன் இறந்தார்? அவருக்கும் மர்மமான முறையில் கொல்லப்பட்டவர்களுக்கும் என்ன தொடர்பு? என்பன போன்ற புதிரான கேள்விகளுக்கு எதிர்பாராத விடைகளை அளிக்கிறது ‘செவ்வாய் கிழமை’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகியாக ஷைலு என்ற சிக்கலான – ஆனால், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட – கதாபாத்திரத்தில் பாயல் ராஜ்புத் நடித்திருக்கிறார். பெரும்பாலான நடிகைகள் ஏற்க மறுக்கும் இந்த கதாபாத்திரத்தை துணிச்சலாக ஏற்றதோடு, சிறப்பாக நடித்து அப்பாத்திரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதி முழுவதையும் ஒற்றை ஆளாய் தன் தோளில் வெற்றிகரமாக சுமந்திருக்கிறார். ‘அதீத செக்ஸ் தேவை’ எனும் காமநோயினால் உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய பெண்ணின் (Nymphomaniac) வலி மிகுந்த வாழ்க்கையை அருமையாக பிரதிபலித்திருக்கிறார். பாராட்டுகள்.
நேர்மையும் தைரியமும் உள்ள பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வரும் நந்திதா ஸ்வேதா, தன் அனுபவ நடிப்பை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அஜ்மல் அமீர், ஸ்ரீதேஜ், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லக்ஷ்மன் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
’நிம்போமேனியா’ என்னும் பாலியல் சிக்கலை முக்கியப் பிரச்சனையாக வைத்து, கதை, திரைக்கதை அமைத்து, படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் அஜய் பூபதி. சற்று அசந்தாலும் ஆபாசப் படமாக மாறிவிடும் ஆபத்துள்ள இந்த படத்தை மிகவும் எச்சரிக்கையாக கையாண்டதற்காக இயக்குநரைப் பாராட்டலாம். ’நிம்போமேனியாக்’ பற்றி அப்படியே சித்தரித்தால், இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியில் நெஞ்சுவலி வந்துவிடும் என்பதால், கள்ளக் காதல், காவல் தெய்வம், பேய், கொலை என்றெல்லாம் வெவ்வேறு மசாலாக்களை திரைக்கதையில் தூவியிருக்கும் புத்திசாலித்தனமும் பாராட்டுக்கு உரியது.
தசரதி சிவேந்த்ராவின் ஒளிப்பதிவும், குலப்பள்ளி மாதவ் குமாரின் படத்தொகுப்பும், அஜனீஷ் லோக்நாத்தின் இசையமைப்பும், கிரைம் திரில்லர் வகைப்பட்ட இப்படத்தை ரசிப்புக்குரிய படைப்பாக மாற்ற உறுதுணையாக இருந்துள்ளன.
‘செவ்வாய் கிழமை’ – வயது வந்தோர் கண்டு களிக்கலாம்!