சென்னை சில்க்ஸ் விபத்து தரும் பாடம்: காவல் துறையில் ‘சூழல் குற்றப்பிரிவு’ ஏற்படுத்த வேண்டும்!
சென்னை தியாகராய நகரில் உள்ள பெரிய துணிக்கடை தீவிபத்து அந்த கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. முப்பது மணிநேரம் ஆகியும் தீயை இன்னமும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஊடகங்கள், காவல் துறை, பொது மக்கள் என எல்லோருடைய கவனமும், கட்டிடம் எப்படி விழும், என்ன விதிமீறல்கள், தீயணைப்பு துறைக்கு உள்ள அதிகாரங்கள் என பல்வேறு விசயங்களின் மீது படிந்துள்ளது. இன்னொரு முக்கியமான விசயத்தை நாம் கவனப்படுத்த வேண்டும்,
தீக்கு இரையான அந்த கட்டிடத்தில் இருந்தவை அனேகமானவை பாலிஸ்டர், நைலான் துணி வகைகள். இந்த மாதிரியான செயற்கை நூலிழைகளால் ஆன துணிகள் எரியும்போது, பிளாஸ்டிக் எரிந்தால் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துமோ அதே மாதிரி தான் இருக்கும். டயாக்சின்ஸ் உட்பட பல்வேறு நச்சு வாயுக்கள் வெளியேறும். அவை மக்களுக்கு நுரையீரலை பாதிக்கும். பல்வேறு நோய்களை கொண்டுவரும்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தி.நகர் பகுதியில் காற்றில் உள்ள மாசின் அளவுகளை அளக்கும் கருவிகள் வைத்து இருப்பார்கள் (நம்புவோம்). அந்த கருவிகளில் உள்ள காற்று மாசு குறித்த பதிவுகளை வெளிப்படையாக வைக்க வேண்டும், அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் நுரையீரல் சம்மந்தமாக வரும் நோயாளிகளின் புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும். சூழல் மாசுபாட்டால் ஏற்ப்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தனியாக வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்.
சூழல் குற்றங்கள் (environmental crimes ) கவனிக்கப்படாமல் போனால் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுவும் குறிப்பாக அடுத்த தலைமுறைக்கு.
காவல் துறையில் “பொருளாதார குற்ற பிரிவு” என்று தனியாக இருப்பது போல் “சூழல் குற்றப் பிரிவு” ஏற்படுத்தப்படவேண்டும், அதில் பல்வேறு சூழல் நிபுணர்கள் அறிவுரையாளர்களாக இருக்க வேண்டும்.
செய்வீர்களா?
SUNDAR RAJAN
POOVULAGIN NANBARGAL