த்ரிஷா பற்றிய சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகானுக்கு போலீஸ் சம்மன்

நடிகை த்ரிஷா பற்றிய சர்ச்சை பேச்சால் நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்ப்ப்பட்டுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிய படம் ‘லியோ’.

இதில் நடித்தது குறித்து சமீபத்தில் பேசிய மன்சூர் அலிகான், “லியோ’ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது. குஷ்பு, ரோஜாவை மெத்தையில் போட்டது போல் திரிஷாவை போட முடியவில்லை” என்ற பொருள்படும்படி கூறியது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது.

இது பற்றி நடிகை த்ரிஷா, “மன்சூர் அலிகான் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் என் கவனத்துக்கு வந்தது. இதில், பாலியல், பெண் வெறுப்பு, மோசமான ரசனையை நான் காண்கிறேன். அவருடன் இனி ஒரு காலமும் படம் நடிக்க மாட்டேன்” என தெரிவித்திருந்தார்.

இருப்பினும், மன்சூர் அலிகான், “நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது. என் பின்னால் தமிழ்நாடே உள்ளது” என தொடர்ந்து கூறி வருகிறார்.

இதற்கிடையே, தேசிய மகளிர் ஆணையம் சார்பில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது.

இந்த புகாரை தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் மன்சூர் அலிகான் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 354 ஏ, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நாளை நேரில் வந்து விசாரணைக்கு ஆஜராகும்படி மன்சூர் அலிகானுக்கு காவல்துறை சார்பில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நாளை அவர் ஆஜராவாரா? அல்லது காலஅவகாசம் கேட்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.