காவல் துறையின் வன்முறைக்கு ஆதாரமாக 197 ஒளிப்பதிவுகள்!

பொதுவாக ஆதாரங்களுடன் பேசுவது என்பது தியரிடிகலான தர்க்கத்தை நிறுவும் ஒரு வழி. ‘கில்லிங் பீல்ட்ஸ்’ எனும் இலங்கை பற்றிய ஆவணப்படம் இதற்கொரு உதாரணம்.

சென்னை நிகழ்வுகள் பற்றி 200 ஒளிப்பதிவுகள் வரை பார்த்தேன். தொலைக் காட்சிப் பதிவுகள் மற்றும் செல்லிடத் தொலைபேசிப் பதிவுகள்.

“தீவிரவாதிகள்” வன்முறை தொடர்பாக இருப்பது மூன்று பதிவுகள் மட்டுமே. காவல் நிலையம் எரிந்து முடிந்த பின்னால் அழிவுகள் காட்டப்படும் ஒரு பதிவு. ஒரு அரசு வாகனத்தை இளைஞர்கள் கவிழ்க்கும் பதிவு. காவலரொருவர் தலையில் காயத்துடன் ஆம்புலன்சில் ஏற்றப்படும் பதிவு. இவற்றில் முதலாவதும் மூன்றாவதும் தொலைக் காட்சிப் பதிவுகள். இரண்டாவது செல்பேசிப் பதிவு. ஒன்று மற்றும் மூன்று, நிகழ்வு நடந்து முடிந்த பின் எடுக்கப்பட்ட பதிவுகள்.

இதற்கான காரணம் யார் என்பது தெரியாது. இதற்கான எந்தக் காட்சி ஆதாரமும் கிடையாது.

காவல்துறை வன்முறை குறித்த அனைத்துப் பதிவுகளும் செல்லிடத் தொலைபேசிப் பதிவுகள். அனைத்தும் உயிருள்ள -லைவ் ஒளிப்பதிவுகள். பெண் காவலர் ஆட்டோவில் எரி எண்ணெய் ஊற்ற நிதானமாக ஆட்டோவின் அருகில நடக்கும் ஆண் காவலர் தீ வைக்கிறார். இது ஒரு பதிவு. இன்னொன்றில் முகத்தைத் துணியால் மூடிய பெண் காவலர் ஆட்டோவுக்குத் தீ வைக்கிறார். அதே பந்தத்துடன் ஆண் காவலர் முன்னே வழிகாட்ட நிதானமாக நடந்து ஆடைகள் மூடிய குடிசைக்குத் தீவைக்கிறார் அதே பெண் காவலர்.

இன்னும் மூன்று பதிவுகளில் குடியிருப்புகளில் புகுந்து காவல்துறையினர் அடிக்கிறார்கள். வாகனங்களை நொறுக்குகிறார்கள். கண்ணில் தென்படும் இடங்களில் எல்லாம் தீ வைக்கிறார்கள். கற்களால் வெகுமக்களைத் தாக்குகிறார்கள். மக்களைக் கும்பலாக நின்று அடித்து நொறுக்கிறார்கள்.

“தீவிரவாதிகள்” செய்ததாகச் சொல்லப்படுவதில் வாகனக் கவிழ்ப்பு தவிர, காவல்துறையினர் மீதான தாக்குதல் மற்றும் எரிப்புக்கு எந்த ஆதாரமும் இல்லை. இவை அனைத்தும் மெரீனா காலை நிகழ்வுக்குப் பின்பான அல்லது சமகால நிகழ்வுகள். காலை ஆறு மணிக்கு மாணவர்கள் கேட்கும் ஒரு மணி நேரம் அவகாசம் மறுக்கப்பட்டவுடன் ஆயிரக்கணக்கான காவல்துறை மாணவர்கள் – பொதுமக்களைச் சுற்றி வளைத்து தாக்கத் துவங்குகிறது. இவை அனைத்தும் உயிருள்ள – லைவ் ஆன காட்சிப் பதிவுகள்.

திட்டமிட்ட மெரினா வன்முறையின் காவல்துறை எரிப்புகளின் மிக இயல்பான எதிர்வினையாக இளைஞர்களின் அரசு வாகனக் கவிழ்ப்பை நாம் அவதானிக்க முடியும். இது தமிழக அரசும் காவல் துறையும் திட்டமிட்டு நிகழ்த்திய வன்முறை.

இந்தக் கொடுமையைச் செய்ய ஆணையிட்டது யார்? ஏன்?

YAMUNA RAJENDRAN