சிஏஏவுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது தடியடி: சென்னை போலீஸ் அராஜகம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை புதுப்பேட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை தடுக்க முயற்சி செய்தபோது அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் குவிந்த மக்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து கூடுதல் ஆணையர் தினகரன் போராட்டக்காரர்களிடம் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

தடியடிக்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் நேற்று இரவு முஸ்லிம் அமைப்பினர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த திடீர் போராட்டம் காரணமாக, சென்னை கிண்டி, ஆலந்தூர், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய கூட்டமைப்பினருடன் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வைத்தனர்.

அதில் முதற்கட்டமாக கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை ஏற்று கைது செய்யப்பட்ட 147 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களில் ஒரு சிலர் கலைந்து செல்வதாகவும் ஒரு சிலர் அங்கேயே இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வண்ணாரப்பேட்டை மட்டுமல்லாது திருப்பூர், ஈரோடு, தென்காசி, கடலூர், கோவை, திருச்சி, மாவட்டங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக வைக்கப்பட்டுள்ளது.

தடியடி நடத்தியதில் சிலர் காயமடைந்துள்ளதாக இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹிருல்லா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் போலீசார் தடியடி நடத்தியதை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.