சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம்: பேருந்து, கார் கவிழ்ந்தன!

சென்னை அண்ணா சாலையில் ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில நொடிகளில் இந்த விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் காயங்கள் எதுவும் இல்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை போலீஸ் சுற்றி வளைத்துள்ளனர். போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

சுமார் 10 அடி பள்ளம் திடீரென ஏற்பட்டதில் அண்ணாசதுக்கத்திலிருந்து சென்னை வடபழனி நோக்கிச் சென்று கொண்டிருந்த தடம் எண் 25ஜி பேருந்தும் ஹோண்டா சிட்டி கார் ஒன்றும் சிக்கியுள்ளது.

தீயணைப்புத் துறையினரும் மீட்புக் குழுவினரும் பேருந்தையும் காரையும் மீட்கும் முயற்சியை மேற்கொள்ளவிருக்கின்றனர். மெட்ரோ நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார்கள்.

மெட்ரோ ரயில் திட்ட பணி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக அண்ணாசாலையில் திடீர்ப் பள்ளம் ஏற்பட்டது. இந்தப் பள்ளம் உடனடியாக மூடப்பட்டது.

தற்போது இந்த இடத்திற்கு அருகில்தான் இன்னொரு திடீர் பள்ளம் முளைத்தது, இதில் பேருந்தும், காரும் கவிழ்ந்துள்ளது.

பேருந்து ஓட்டுநர் தனியார் தொலைக்காட்சியில் கூறும்போது, பேருந்து அந்த நிறுத்தத்தில் நிறுத்தப்பட்ட பிறகு மெதுவாக உள்ளே சென்றதாகத் தெரிவித்தார். அதாவது டயர் பஞ்சர் ஆனால் எப்படி மெதுவாக கீழிறங்குமோ அப்படி இறங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான பேருந்தில் சுமார் 35 பேர் பயணம் செய்தனர் என்றும் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக அண்ணாசாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேனாம்பேட்டை வழியாக செல்லும் பேருந்துகள், வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. போக்குவரத்து சீராக குறைந்தது 2 மணிநேரங்கள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ ரயில் பணிகளுக்காக 2 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பல மாதங்களாக இங்கு செயலில் இருந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பாக சுரங்க நடவடிக்கையினால் தற்போது பள்ளம் ஏற்பட்ட இடமருகே நுரைக் கசிவு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளத்தில் சிக்கிய காரும், பேருந்தும் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் சாலை போக்குவரத்துக்கு திங்கள் மாலைதான் தயாராகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.