பத்திரிகை உலகத்தின் தொடர்ந்த வீழ்ச்சியில் இது இன்னொரு பாதாளம்!
செய்திகள் போன்ற தோற்றத்தில் வரும் விளம்பரங்கள் மீது எனக்கு எப்போதுமே ஒவ்வாமை உண்டு. அடிப்படையில் அது ஒரு கீழ்த்தரமான ஏமாற்று வேலை. கடைசியில் பொடியாக விளம்பரம் என்று போடுவார்களாம். இது எப்படியிருக்கிறது என்றால் விஷம் கலந்த பாலைக் குடிக்கக் கொடுத்துவிட்டு அதுதான் டம்ளரின் உள்பக்கம் அடியில் விஷம் என்று ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறோமே என்று சொல்வது போலத்தான்.
தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக வெளிவருவதற்கு முன்பே தெரிந்துகொண்டு இந்த நாளுக்கான விளம்பரத்தை அத்தனை நாளிதழ்களிலும் புக் செய்து வைத்திருப்பார்கள். ஆளுங்கட்சியின் அதிகாரம் இங்கே விளையாடியிருக்கும். என்ன விளம்பரம் என்ற மேட்டரை டம்மியாகக் கொடுத்து வைத்திருந்து பிறகு கடைசி நேரத்தில் மாற்றியிருப்பார்கள்.
பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானால் விளம்பரம் செய்வோம் என்ற நிலைக்கு பத்திரிகைகள் இறங்கி நீண்ட காலமாகிறது. ஆனால் தங்களிடம் வேலை செய்பவர்களுக்குக் கூடத் தெரியாமல் ரகசியம் காப்போம் என்பதெல்லாம் உச்சகட்ட விசுவாசம்.
பத்திரிகை உலகத்தின் தொடர்ந்த வீழ்ச்சியில் இது இன்னொரு பாதாளம், அவ்வளவுதான்.
Shan Karuppusamy