“ரஜினி, கமல் இணைந்தாலும் அரசியலில் ஜெயிக்க முடியாது!”: ஏன் சொன்னார் சாருஹாசன்?

“அரசியலில் கமல் ஜெயிக்கவே முடியாது. ரஜினியோடு சேர்ந்தாலும் ஒன்றும் நடக்காது” – சன் டிவியில் கமலின் சகோதரர் திரு.சாருஹாசன்.
..
சில நிஜங்கள் உறுத்தும். அவர் சொல்வதில் கமலோடு உள்ள வெறுப்போ, பகைமையோ தெரியவில்லை. மாறாக, சில உண்மைகளை உணர்ந்ததால் சொல்லியிருக்கிறார். பட்டவர்த்தனமாக சொல்ல ஒரு துணிவு வேண்டும். அதைவிட கமலின் முகம் வெளிறிப்போகுமென்ற அக்கறையும் அதில் தெரிகிறது.

யாரோ தூண்டிவிட,  பட்டென்று அவசரகதியில் இறங்கிவிட்டானே என்ற ஆதங்கம் வெளிப்படுகிறது.
..
உண்மை அதுதான். இதை உணர்ந்தவராக ரஜினி இருந்ததால் தான், பேச்சோடு நிறுத்திக்கொள்கிறார். விமர்சனப் பார்வையோடு நகர்ந்துவிடுகிறார். இருப்பதை இழக்க விரும்பாததாலும், மிக மோசமான விமர்சனங்களும், பதிலடியும், எழுந்திருக்கவே முடியாதவாறு அசிங்கபடவேண்டிவருமென்று அறிந்திருந்ததாலும் தான் அரசியலை அறிந்தும் அறியாதவர் போல பேசி நகர்ந்துவிடுகிறார்.

கமலுக்கு தனக்கு எல்லாம் தெரியுமென்ற மேதாவித்தனம். அதை அப்படி கடைசிவரை பாராமரித்து, பக்குவமாக காப்பாற்றி வந்துவிட்டார். ஆனால், பாருங்கள்… அதுவே அவருக்கு வினையாகிப்போகுமென அறியாமல் போவதுதான் கொடுமை.
..
மூன்று விடயங்களைச் சொல்லி இந்த மண்ணை ஆள முடியாது. மதம் உன்னை சறுக்கிவிடும். ஜாதி உன்னையே எரித்துவிடும். மற்றொன்று, எல்லாம் அறிந்தவன் நான் என்பவனை, அதாவது முற்போக்கு பேசித் திரிபவனைக் கண்டாலே பாமரனுக்குப் பிடிக்காது. ஏட்டுச்சுரைக்காய் கறிக்காகாது என போய்விடுவான். அவனிடம் நம்பிக்கையை ஊட்ட வேண்டும். அதற்கு நீண்ட தூரம் அரசியலில் பயணிக்க வேண்டும்.
..
எல்லாம் அறிவேனெனச் சொல்லி வருகிறார். இன்னும் அரசியலில் பாலபாடமே படித்து முடிக்கவில்லை. எந்த நம்பிக்கையில் வருவதாகச் சொன்னாரோ, அந்த நம்பிக்கையே காலை வாரிவிடும்.

ரசிகர்களோ அல்லது முற்போக்கு பேசுபவர்களோ கடைசிவரை வரப்போவதில்லை; அல்லது தூண்டி விடுபவர்கள், நம்பிக்கையளிப்பவர்கள் திடீரென காணாமல் போவர். திமுகவின் வெற்றியை இயன்றவரை தடுக்க இவரை பயன்படுத்த முயற்சியே தவிர, அதுகூட காலங்கடந்து போய்விட்டது. மக்களின் எண்ணவோட்டம் தளபதியை நோக்குவதாக அமைந்திருக்கிறது.

அதனால் தான் பங்காளிக்கு புத்தி சொல்லியிருக்கிறார்.
..
அரசியல் நீண்ட பயணம். குறிப்பிட்ட காலகெடுவிற்குள் திட்டமிட்டு படப்பிடிப்பை முடிக்க முடியாது. எப்போது எங்கே எப்படி சறுக்குமென அறிந்திருக்க வேண்டும். அதைவிட காலச்சூழல், மக்களின் அப்போதைய மனநிலை, ஆட்சியாளரின் மீதான அதிருப்தி யாருக்கு பலனாகுமென கணித்தல் – இவையெல்லாம் அரசியல் அரிசுவடிகள்.
இதை தான் பெரியவர் சாருஹாசன் சொல்லியிருக்கிறார்.
..
புத்தியுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்..!
..
தோழர். ஆலஞ்சி
(ஆலஞ்சியார்)