ஆம்ஸ்ட்ராங் கொலையில் ரவுடி நாகேந்திரன் முதல் குற்றவாளி: போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி, சென்னையில் அவரது வீட்டின் அருகிலேயே, சில ரவுடிகளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேசிய கட்சியின் தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதையடுத்து தீவிர விசாரணையை போலீசார் தொடங்கிய நிலையில், அதில் திடுக்கிடும் திருப்பங்கள் அரங்கேறின.
சிசிடிவி காட்சி அடிப்படையில் முதலில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணை தீவிரமடைந்தபோது பலரது பெயர்கள் இதில் அடிபட்டன. மேலும், ஆருத்ரா மோசடிக்கும் இந்த படுகொலைக்கும் கூட தொடர்பு இருந்ததாகத் தகவல் வெளியானது. போலீஸ் விசாரணையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் சிக்கினர். இந்த கொலை விவகாரத்தில் தப்பியோட முயன்ற திருவேங்கடம் என்பவர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார். மேலும், 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் போலீசார் இன்று எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். மொத்தம் 4892 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிக்கையில் 300 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் உள்ள சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும், ஆள் பலத்தோடு வளர்ந்துவந்த ஆம்ஸ்ட்ராங் அசுர வளர்ச்சியைத் தடுக்கவே கொலை நடந்துள்ளதாக அதில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் ஆருத்ரா கோல்டு மோசடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு போலீசார் 4 முக்கிய முன்விரோதங்கள் காரணமாகப் பட்டியலிட்டுள்ளனர். அஸ்வத்தாமன் நில விவகாரம், சம்போ செந்தில் தலைமைச் செயலக காலனியில் வீடு விவகாரம், ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு, பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி தென்னரசு கொலை விவகாரம் ஆகிய 4 காரணங்களை போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
6 மாதங்கள் திட்டமிட்டு ரெக்கி ஆபரேஷன் நடத்தி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆற்காடு சுரேஷ் மனைவி சபதத்தால் ஒரு ஆண்டுக்குள் கொலை நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மொத்தம் ரூ.10 லட்சம் செலவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியான நாகேந்திரன் அனைவரையும் ஒருங்கிணைத்ததாகவும், இரண்டாவது குற்றவாளியான சம்போ செந்தில் பணம் திரட்டி உதவியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மூன்றாவது குற்றவாளியும், நாகேந்திரனின் மகனுமான அஸ்வத்தாமன், நாகேந்திரன் போட்டுக் கொடுத்த திட்டத்தை வெளியில் இருந்து செயல்படுத்தியுள்ளார்.
கைதான 11 குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட தொழில்நுட்ப ரீதியான விசாரணையே கண்ணுக்குத் தெரியாத மற்ற குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுபோல நடத்தப்பட்ட விசாரணையிலேயே முதல் மூன்று குற்றவாளிகளான நாகேந்திரன், சம்போ செந்தில், அஸ்வத்தாமன் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம் தொடர்பாகக் கைதானவர்களின் 63 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் பணமும் ரொக்கமாக 80 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.