“திராவிட கொள்கைகளுக்கு நகரும் காங்கிரஸ் கட்சி!”
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் முக்கியமான கருத்தியல் மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விளிம்புநிலை மக்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அக்கட்சியின் சாசனம் திருத்தப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் அக்கட்சி கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து இது மிகப்பெரிய நகர்வாகும். பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான அரசியலை அக்கட்சி இதற்கு முன் எப்போதும் ஆதரித்ததில்லை. பதிலாக, தனக்கான வாக்கு வங்கிகளாக உயர்சாதிகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோரைத்தான் அக்கட்சி கொண்டிருந்தது. கடந்த வருடங்களில் நேர்ந்த அரசியல் மாற்றங்களும் கட்சியின் பாரம்பரிய வாக்கு வங்கிகள் பலவீனமடைந்ததாலும் இந்த நகர்வு நேர்ந்திருக்கிறது. பாரம்பரிய திராவிட இயக்கக் கொள்கைகளான கூட்டாட்சி, இந்தித் திணிப்பு எதிர்ப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு ஆகியவற்றை ஏற்றுக் கொண்டதன் மூலமாக விளிம்புநிலை சமூகங்களுடன், குறிப்பாக வட இந்திய விளிம்புநிலை சமூகங்களுடன் அணியமாகும் உத்தியை காங்கிரஸ் கட்சி கைக்கொண்டிருக்கிறது. மாநில கட்சிகளுக்கு அதிகமாக வாக்களித்து வரும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் விருப்பங்களுடன் இணைந்து கொண்டு தனக்கான அரசியல் களத்தை மறுநிர்மாணம் செய்ய காங்கிரஸ் கட்சி முயலுவதாக இந்த நகர்வைப் புரிந்து கொள்ளலாம். எனினும் இந்த நகர்வில் சவால்கள் இல்லாமலில்லை. பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கோரிக்கைகளை தொடர்ந்து நிராகரித்து வந்த காங்கிரஸ் கட்சியின் வரலாறே இந்த நகர்வின் உண்மைத்தன்மைக்கு சவாலாக அமையலாம். தொடர்ந்து இக்கொள்கையை வலியுறுத்தி திட்டவட்டமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வழியாகதான் இக்கொள்கையின்பால் அக்கட்சி கொண்டிருக்கும் உறுதியை நிரூபிக்க முடியும்.
சமூகநீதி: காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாட்டின் உறுப்பினர் கூட்டம் பிப்ரவரி 26ம் தேதி ராய்ப்பூரில் நடந்தபோது, காங்கிரஸ் ஒரு முக்கியமான மாற்றத்தை அதன் சாசனத்தில் செய்தது. பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டியில் 50 சதவிகித இடஒதுக்கீட்டை கட்சி உத்தரவாதப்படுத்தியது. மேலும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு அதிகாரமளிக்கவும் நீதிபதி நியமனங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதை உறுதிபடுத்தவும் பிரத்தியேக அமைச்சகம் உருவாக்க உறுதியளித்திருக்கிறது. வரலாற்றுப் பூர்வமாக சமூகநீதி குறித்து காங்கிரஸ் கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து இது முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாகும். நவம்பர் 21, 1925-ல் கட்சியின் பதவிகளிலும் சட்டத்திலும் பிராமணரல்லாதோருக்கான இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டுமென பெரியார் ஈ.வெ.ராமசாமி கொண்டு வந்த தீர்மானத்தை காங்கிரஸ் நிராகரித்தது. 50 ஆதரவாளர்களுடன் கட்சியிலிருந்து பெரியார் வெளியேறினார். 1919ம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததிலிருந்தே கட்சிப் பதவிகளில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் கடைபிடிக்கப்பட வேண்டுமெனக் கோரி வந்தார். ஆனால் தலைமை அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. விளைவாக அவர் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். தமிழ்நாட்டு வரலாற்றின் சமூகப் பொருளாதாரத்தையே மாற்றக்கூடிய தாக்கத்தை அந்த இயக்கம் உருவாக்கியது. காந்திகளின் முழு ஆதரவில் தலித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் தலைமையில் காங்கிரஸ் கட்சி இந்த தீர்மானத்தை தற்போது நிறைவேற்றியிருக்கிறது.
இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி தனக்கான வாக்கு வங்கியாக உயர்சாதிகளையும் சிறுபான்மையினரையும் தலித்களையும் கருதியது. விளைவாக, பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கோரிக்கையை அக்கட்சி ஆதரிக்கவில்லை. ஆனால் மாறி வரும் அரசியல் தன்மைகளாலும் இக்குழுக்களின் வாக்குகள் சரிந்ததாலும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட திராவிடக் கொள்கைகளை ஏற்பது காங்கிரஸ் கட்சிக்கு அவசியமாகியிருக்கிறது.
மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி: பிப்ரவரி 2, 2022 அன்று ராகுல் காந்தி மக்களவையில் கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த 45 நிமிட உரை நகழ்த்தினார். திராவிடக் கொள்கைகளில் முக்கியமானவை மாநில சுயாட்சியும் கூட்டாட்சியும் ஆகும். பாஜக அரசாங்கத்தின் அதிகாரக் குவிப்பு கொள்கையை அவர் கடுமையாக விமர்சித்தார். இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்க முடியாதென்றும் இந்த நாடு மத்தியிலிருந்து ஆளப்பட முடியாதென்றும் அவர் குறிப்பிட்டார். இதே போல 1962ம் ஆண்டில் திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவரும் அக்கட்சியின் முதல் முதலமைச்சருமான சி.என்.அண்ணாதுரை, கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சி குறித்த ஒரு புகழ்பெற்ற உரையை மக்களவையில் வழங்கியிருக்கிறார். அவரும் புது தில்லியில் குவிக்கப்படும் அதிகாரத்தையும் மாநில விவகாரங்களில் தலையிடும் ஒன்றிய அரசின் போக்கையும் விமர்சித்தார். மாநிலங்களுக்கு அவற்றின் வளர்ச்சி மற்றும் வளங்கள் மீது அதிக அதிகாரம் இருக்க வேண்டுமென்றும் மாநிலங்களுக்கு இடையே நிலவும் மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றும் அவர் வாதிட்டார். அவரின் பேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வரவேற்றனர். அண்ணாதுரைக்கு பிறகு முதலமைச்சராக வந்த கருணாநிதி, ஒன்றிய – மாநில உறவுகளை ஆராய மாநில அளவிலான முதல் ஆணையத்தை பி.வி.ராஜமன்னார் தலைமையில் 1969ம் ஆண்டு உருவாக்கினார். 1974ம் ஆண்டில் ஆணயத்தின் பரிந்துரைகளை மாநில சுயாட்சி கோரும் சட்டப்பேரவை தீர்மானத்துடன் ஒன்றிய அரசுக்கு அனுப்பினார். “மாநில சுயாட்சியுடன் கூடிய மெய்யான கூட்டாட்சியை உருவாக்கும் வகையில் இந்திய அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்,” எனக் கோரியது அத்தீர்மானம்.
இந்தித் திணிப்பு எதிர்ப்பு: மொழிக்கொள்கை பற்றிய காங்கிரஸின் பார்வையும் கூட மாற்றத்துக்குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக இந்தி மொழியை பாஜக கட்டாயப்படுத்துவதன் விளைவாக இம்மாற்றம் நேர்ந்திருக்கிறது. ராஜஸ்தானின் அல்வாரில் நடந்த பாரத் ஜோதோ யாத்ரா கூட்டத்தில் பேசும்போது ராகுல் காந்தி, “உலகின் பிற மக்களுடன் பேச நீங்கள் விரும்பினால், இந்தி பயன்படாது. ஆங்கிலம்தான் பயன்படும்,” என்றார். ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் படிப்பதை (இந்தியை கட்டாயப்படுத்தி) தடுக்கும் பாஜகவை அவர் விமர்சித்தார். ஆங்கிலத்துக்கும் ஆங்கில வழி பள்ளிக்கல்விக்கும் எதிராக பேசி விட்டு, தம் குழந்தைகளை ஆங்கில வழி பள்ளிகளில் படிக்க வைக்கும் பாஜக தலைவர்களை அவர் குற்றஞ்சாட்டினார். இந்தி உள்ளிட்ட தாய்மொழிகளின் அவசியத்தை முன் வைத்த அவர், உலகளவில் பேசுவதற்கு ஆங்கிலம்தான் அவசியம் என வாதிட்டார்.
பெரியாரின் பாரம்பரியம் இன்னும் தொடர்கிறது என்பதற்கான ஆதாரமாக இந்த மாற்றம் நேர்ந்திருக்கிறது. பள்ளிகளில் கட்டாய இந்தி போதிக்கப்படுவதை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தியவர் அவர்தான். மெட்ராஸ் மாகாணத்தில் முதலமைச்சராக சி.ராஜகோபாலச்சாரி இருந்தபோது ஏப்ரல் 1, 1938 அன்று இந்தி மொழியை பள்ளிகளில் கட்டாயமாக்கி ஆணை வெளியிட்டார். அக்கொள்கையை எதிர்த்த பெரியார், “தமிழ்நாடு தமிழர்களுக்கே” என்ற முழக்கத்தை முன் வைத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு சிறையிலடைக்கப்பட்டார். இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சம் பெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் சிறையிலடைக்கப்பட்டனர். தாளமுத்து மற்றும் நடராஜன் ஆகியோர் காவல்துறையால் மோசமாக தாக்கப்பட்டு பிறகு சிறையில் நிலவிய கொடுமையான சூழ்நிலையால் உயிரிழந்தனர். இரண்டாம் உலகப் போரில் பங்கு பெறும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கையாக அரசாங்கங்களிலிருந்து பதவி விலக வேண்டுமென்கிற காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு உடன்பட்டு 1939ம் ஆண்டில் ராஜாஜி பதவி விலகினார். இறுதியில் அரசாங்கத்தின் கட்டாய இந்தி என்கிற முடிவு ஆளுநர் எர்ஸ்கைனால் 1940ம் ஆண்டு திரும்பிப் பெறப்பட்டது.
அல்வாரில் ராகுல் காந்தி முன் வைத்த அதே காரணத்துக்காகதான் பெரியார் இந்தி மொழி திணிப்பை எதிர்த்தார். இந்தி வழிக் கல்வியை எதிர்த்த பெரியார், ஆங்கில வழிக் கல்வியை முன் வைத்தார். தமிழர்களின் வளர்ச்சி மற்றும் முற்போக்கு கருத்துகளை இந்தி மொழி தடுப்பதோடு நில்லாமல் அவர்களின் பண்பாட்டையே அம்மொழி அழித்து விடுமென அவர் நம்பினார். அண்ணாதுரை மற்றும் கருணாநிதி போன்ற பிற திராவிட தலைவர்கள், 1947ம் ஆண்டுக்கு பிறகு இந்தியை திணிக்க முயன்ற காங்கிரஸை எதிர்த்து போராடியிருக்கின்றனர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் திமுகவின் தலைவராகவும் இருக்கும் மு.க.ஸ்டாலின் இன்றைய சூழலில் இவற்றுக்கான போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஒரே வித்தியாசம் தற்போதைய போராட்டம் பாஜகவை எதிர்த்து என்பதுதான். தெற்கிலிருந்து உருவாகி வந்த திராவிடக் கருத்தியல், தேசிய அளவில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக பாஜகவுக்கு எதிராக வடக்கில் சண்டையிடுவதற்கான முக்கிய ஆயுதமாக திராவிடம் மாறியிருக்கிறது.
திராவிட உத்திகளை நோக்கிய நகர்வு: காங்கிரஸின் தற்போதைய நகர்வு விளிம்புநிலை சமூகங்களை, குறிப்பாக வடநாட்டின் பிற்படுத்தப்பட்ட சாதிகளை நோக்கி நகர்வதற்கான உத்தியாகும். அக்கட்சியின் வாக்கு வங்கி குறைந்ததால், அதை மீட்பதற்கான முயற்சியாக இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகிறது. சஞ்சய் குமாரின் (2013) ஆய்வின்படி, பாஜகவின் செயல்பாடு என்னவாக இருந்தாலும் பிராமணர்களிடமும் உயர்சாதிகளிடமும் அக்கட்சிதான் விருப்பத்துக்குரிய தேர்வாக இருக்கிறது. ஐந்து மக்களவை தேர்தல்களிலும் (1996 தொடங்கி) இக்குழுக்கள் பெருமளவில் பாஜகவின் பக்கமே நின்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி உயர்சாதி வாக்குகளை பெறுவதில் பின்னடைந்திருக்கிறது. இந்த நிலை 2014ம் ஆண்டு மற்றும் 2019ம் ஆண்டு தேர்தல்களிலும் தொடர்ந்து காங்கிரஸின் உயர்சாதி வாக்கு வங்கி முற்றிலும் இல்லாமலாக்கப்பட்டு விட்டது.
இச்சமூகங்களில் உருவாகி வரும் அதிருப்தி மற்றும் பி.ஆர்.அம்பேத்கரை கையகப்படுத்தி தலித் வாக்குகளை வெல்ல முயலும் பாஜகவின் முயற்சிகள் ஆகிய பின்னணியில்தான் காங்கிரஸின் இந்த நகர்வு நேர்ந்திருக்கிறது. உயர்சாதிகளின் ஆதரவை பெறுவதில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் மண்டலுக்கு பிந்தைய காலத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிகள் அதிகமாக மாநில கட்சிகளுக்கு வாக்களித்து ஓர் ‘அமைதிப் புரட்சி’யை நடத்தியிருக்கின்றன. எனவே காங்கிரஸ் கட்சிக்கு இழக்க ஒன்றுமில்லை. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதாலும் சமூகநீதி கொள்கையை ஏற்றுக் கொள்வதாலும் இந்தியாவின் பெரும்பகுதியாக இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கியுடன் அக்கட்சியால் இணைத்துக் கொள்ளவும் முடியும்.
நம்பிக்கை இடைவெளி: ஆனால் தன் அணுகுமுறைக்கான நல்விளைவுகளை காங்கிரஸ் பெறுவதில் சில பிரச்சினைகள் உண்டு. வரலாற்றுப்பூர்வமாக அக்கட்சியின் தலைவர்களில் அதிகமானோர் உயர்சாதியினராக இருந்தமையால், பிற்படுத்தப்பட்டோரின் கோரிக்கைகளை அக்கட்சி நிராகரித்தே வந்திருக்கிறது. அரசியல் சாசன சபை நிகழ்வுகளில் கூட பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான வரையறையை காங்கிரஸ் கட்சி தவிர்த்தது. அக்கட்சியின் சமூகக் கொள்கைகளால் பல நீதிமன்ற தீர்ப்புகள் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுக்கு எதிராக வழங்கப்பட்டன. சட்டப்பிரிவு 340 வலியுறுத்தியபடி பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான வாரியத்தை முதன்முறையாக (காகா கலேல்கர்) அமைக்க காங்கிரஸ் அரசுக்கு மூன்று வருடங்கள் பிடித்தது. ஆனாலும் சாதிவாரியிலான இட ஒதுக்கீடு இந்தியாவின் ஒற்றுமையை பாதிக்கும் என்ற காரணம் சொல்லி, அந்த வாரியத்தின் பரிந்துரைகளை காங்கிரஸ் நிராகரித்தது. மேலும் திட்டங்களின் வழியாக உருவாகும் பொருளாதார நீதியே சமூக நீதியைக் கொடுத்துவிடும் எனவும் காங்கிரஸ் வாதிட்டது. இப்பிரச்சினையை ஆய்வு செய்ய இன்னொரு வாரியம் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்தபோதும் காங்கிரஸ் அத்தகைய வாரியத்தை உருவாக்கவில்லை.
இரண்டாவதாக பி.பி.மண்டல் தலைமை தாங்கிய சமூக மற்றும் கல்வி ரீதியிலான பிற்படுத்தப்பட்ட சமூக வாரியம், ஜனதா கட்சி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. மீண்டும் அதிகாரத்துக்கு வந்த காங்கிரஸ் கட்சியோ அந்த வாரியத்தின் பரிந்துரைகளை வி.பி.சிங் வரும் வரை, பத்தாண்டுகளுக்கு கிடப்பில் போட்டது. திமுக, தெலுகுதேசம் கட்சி மற்றும் அசோம் கனா போன்ற மாநிலக் கட்சிகளின் கூட்டணியில் உருவான வி.பி.சிங் தலைமையிலான காங்கிரஸ் அல்லாத அரசாங்கம் மண்டல் பரிந்துரைகளை அமல்படுத்துவதாக அறிவித்தபோது, பாஜகவுடன் இணைந்து கொண்டு காங்கிரஸ் கட்சி, அந்த ஆட்சியைக் கவிழ்த்தது. காங்கிரஸ் கட்சியின் இத்தகைய கடந்த கால நடவடிக்கைகள் சமூகநீதி குறித்த விஷயங்களில் அதன் நம்பகத்தன்மையை குறைத்திருக்கிறது.
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடுக்கு எதிரான உயர்சாதி எதிர்ப்பு, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் ஆதரவுடன் நேர்ந்ததில், வட நாட்டின் பிற்படுத்தப்பட்ட சாதிகள் அதிருப்தி அடைந்தன. மண்டல் காலத்துக்கு பின் அவை ஒன்றிணைந்தன. விளைவாக, காங்கிரஸின் வாக்கு வங்கி சரிந்து, வட இந்தியாவில் அதிக மாநில கட்சிகள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது.
இத்தகைய பின்னணியில், சமூகநீதியின்பால் காங்கிரஸ் கட்சி கொண்டிருக்கும் பற்றை, பிற்படுத்தப்பட்டோருக்கான உறுதியான நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றின் மூலமாகத்தான் காங்கிரஸ் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. அப்படி செய்தால் மட்டுமே முக்கியமான வாக்கு வங்கியிடமிருந்து ஆதரவையும் நம்பிக்கையையும் அக்கட்சி பெற முடியும்.
மாநில உரிமைகள், கூட்டாட்சி, பாஜகவின் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான ஆங்கில மொழியின் முக்கியத்துவம் போன்றவற்றை வலியுறுத்தும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு, இந்தியாவின் ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் நீண்ட காலத்துக்கு காக்கவல்லது. பாஜகவின் அதிகார குவிப்பை எதிர்த்து இந்தியாவின் பன்முகத்தன்மையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி கூட்டாட்சியை முன்னிறுத்துவது அரசியல் சாசனத்தின் அடிப்படை வடிவமாகும். மேலும் ஆங்கில வழிக் கல்விக்கான காங்கிரஸின் ஆதரவு, விளிம்புநிலை சமூகங்களுக்கு அதிகாரமளிக்கும் முற்போக்கு நிலைப்பாடாகவும் பார்க்கப்படும். ஒரே நாடு ஒரே மொழி என்ற பாஜகவின் அரசியலுக்கு எதிராக மாநில மொழிகளின் முக்கியத்துவத்தை ஏற்கும் தன்மையாகவும் அது புரிந்து கொள்ளப்படும்.
தலித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்த்தியிருப்பது, அமைப்புக்குள்ளிருக்கும் விளிம்புநிலை சமூகங்களுக்கு அதிகாரமளிக்கவும் பிரதிநிதித்துவம் வழங்கவும் கட்சி முனைப்பு கொள்வதை காட்டுகிறது. ஆனாலும் இந்த புதிய திசை நோக்கிய காங்கிரஸ் கட்சியின் பற்றுதலை 2024ம் ஆண்டு நடக்கவிருக்கும் பொது தேர்தலுக்கு முன் அது நிரூபிக்க வேண்டியிருக்கும். அப்போதுதான் விளிம்புநிலை சமூகங்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் அக்கட்சி பெற்று பாஜகவின் திட்டத்துக்கு சவால் விடுக்க முடியும்.
– கே. ஜோதி சிவஞானம்
(தமிழில்: ராஜசங்கீதன்)
Courtesy: the aidem.com