ஒரு மனிதனின் உலகப் பார்வை அப்படியே சிலையாக நிற்பதில்லை!
வி.பி.சிங்…
பிரதமர் பதவியை இழப்போம் என்று தெரிந்த பிறகும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமுல்படுத்தி சமூகநீதி காத்த வீரர். இதனாலேயே தமிழக மக்கள் பெரும்பாலோரினால் இன்று வரை நேசிக்கப்படுபவர்.
அப்போது அவரை முற்போக்காளர்கள் புகழ்ந்தபோது, பலர் அவருடைய சமூகப் பின்னணியையும், பழைய அரசியல் வரலாற்றையும் தூசி தட்டி எடுத்துத் தாக்கினர். அவர் உத்திரப் பிரதேசத்தின் உயர்சாதி தாக்கூர் இனத்தைச் சேர்ந்தவர். நிலப்பிரபு. மாண்டா பகுதியின் ராஜா. எமர்ஜென்சியின்போது இந்திரா காந்தியை ஆதரித்தவர். நல்ல வேளை… அப்போது டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் இல்லை. இருந்தால் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டு அவரைத் தாக்கியிருப்பார்கள்.
ஒரு மனிதனின் உலகப் பார்வை அப்படியே சிலையாக நிற்பதில்லை. மாறி வரும் சூழலுக்கு ஏற்ப, புதிதாக அறிய நேர்ந்த உண்மைகளைக் கணக்கில் கொண்டு சிந்தனையிலும் மாற்றம் வரும். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
ஒருவரின் அரசியல் வாழ்வில் எடுக்கும் முடிவுகளில் எது வரலாற்றில் நிலை பெறுகிறது, எது அழிகிறது என்பதுதான் முக்கியம்.
அதுதான் பகுத்தறிவுப் பார்வை. மீதியெல்லாம் குறை குடத்தின் கூத்துதான்.
Vijayasankar Ramachandran