தமிழக அமைச்சர்களின் துறைகள் மாற்றம்: பி.டி.ஆருக்கு ஐ.டி. துறை!
3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் அமைச்சரவையில் சில மாற்றம் மீண்டும் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அமைச்சரவையில் சரியாக செயல்படாத அமைச்சரை நீக்கிவிட்டு புதிதாக ஒருவரை அமைச்சரவைக்கு கொண்டுவரவும், இப்போது உள்ள அமைச்சர்கள் சிலரது துறைகளை மாற்றித் தரவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
நாசர் வகித்து வந்த பால்வளத் துறை மனோ தங்கராஜுக்கு இன்று ஒதுக்கப்பட்டுள்ளது.
மனோ தங்கராஜ் வகித்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வகித்து வந்த நிதித்துறை தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தங்கம் தென்னரசு வகித்து வந்த தொழில் துறை இன்று புதிய அமைச்சராக பொறுப்பேற்ற டி.ஆர்.பி.ராஜாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதுபோல், தங்கம் தென்னரசு வகித்து வந்த தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறையானது செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.