ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை: ‘லைக்கா’ சுபாஷ்கரன் வழங்கினார்
லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகிவரும் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட லைக்கா சுபாஷ்கரன், ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15-ம் தேதியன்று வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை புறநகரில் அமைந்திருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பட குழுவினருடன் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன், திருமதி பிரேமா சுபாஷ்கரன், சுபாஷ்கரனின் தாயார் ஞானாம்பிகை ஆகியோரும் கலந்துகொண்டனர். பாடல்கள், நடனம் என கோலாகலமாக இவ்விழா நடைபெற்றது.
விழாவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தமிழ் குமரன் பேசுகையில், ” ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்காக லைக்கா தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்குகிறார்” என்றார்.
ராகவா லாரன்ஸ் பேசுகையில், ” மிகவும் சந்தோஷம். என்னுடைய மாணவர்களை அனைத்து மேடைகளிலும் நடனமாட வைக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் ஒரு சில நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னிடம் உங்களுடைய மாணவர்களுக்கு தொடர்ச்சியாக மேடை ஏறி நடனமாடும் வாய்ப்பை அளித்தாலும், ஒரே மாதிரியான நடனங்களைத் தானே ஆடுகிறார்கள். இது பார்வையாளர்களுக்கு போரடிக்காதா என கேட்பார்கள். அவர்களிடத்தில், திரிஷா, நயன்தாரா நடனம் ஆடினாலும், அவர்களும் ஒரே நடனத்தைத் தானே ஆடுகிறார்கள். அதை மட்டும் திரும்பத் திரும்ப பார்க்கிறீர்களே… அதனால் இதையும் திரும்பத் திரும்ப பார்க்கலாமே எனச் சொல்வேன்.
நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு மேடை ஏறும் வாய்ப்பை வழங்குவதால் அவர்களுடைய குடும்பத்திற்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு இந்த நடனத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. இவர்களுடைய நடனத்தில் கவர்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு வலி இருக்கிறது. இவர்களுடைய ஆட்டத்தில் அழகு இருக்கிறதோ இல்லையோ, கடவுள் இருக்கிறார். இதனால் இந்த குழுவினருக்கு வாய்ப்பளியுங்கள்.
என்னை நம்பி நிறைய குடும்பங்கள் இருக்கிறது. அதில் சிலரை தான் நீங்கள் இங்கு பார்க்கிறீர்கள். இந்தக் குழந்தைகளுக்கு அண்ணனாகவும், அப்பாவாகவும் என்னுடைய கடமையை செய்துகொண்டிருக்கிறேன்.
என்னுடைய மாணவர்களின் நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு சிலர் உதவி செய்வார்கள். ஆனால் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அதுவும் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கிய சுபாஷ்கரனுக்கு நன்றி. வாழ்கிறவன் மனிதன், வாழ வைப்பவன் கடவுள் என்று சொல்வார்கள். எங்கள் மாணவர்களை வாழ வைத்த சுபாஸ்கரன் எங்களுக்கு கடவுள்.
என்னுடைய அறக்கட்டளைக்கு யாரும் நிதி உதவி வழங்க வேண்டாம் என்று ஓராண்டிற்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தேன். ஏனெனில் நான் தற்போது நன்றாக சம்பாதித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு கிடைக்கும் வருவாயில் அறக்கட்டளைக்கு தேவையான நலத்திட்டப் பணிகளை செய்துகொண்டிருக்கிறேன். வேண்டாம் என்று சொல்லும்போது கடவுள் கொடுப்பார் என்று சொல்வார்கள். அதுபோல் தற்போது சுபாஷ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறார். அவருடைய மனம் பெரியது. இதன் மூலம் நிறைய பேரின் பசி தீர்க்கப்படும்.
இந்த மாணவர்கள் தங்குவதற்கும், நடனப் பயிற்சி மேற்கொள்வதற்கும் கட்டிடம் ஒன்றை கட்ட வேண்டும் என்று விரும்பினார்கள். நீங்கள் வழங்கும் அந்த நன்கொடையில் இந்த மாணவர்களுக்காக ஒரு இடத்தை வாங்கி, அவர்களுக்கான கட்டிடம் ஒன்றை கட்டி, அதற்கு உங்களின் தாயாரின் பெயரை சூட்டுவோம். இவை அனைத்தும் இன்னும் ஒரு வருடத்தில் நிறைவேறும் என உறுதியளிக்கிறேன்.
சந்திரமுகி 2 படத்தின் கதையை முதலில் தமிழ்குமரன் கேட்டார். அதன் பிறகு தமிழ்குமரன் என்னை தொடர்புகொண்டு, சுபாஸ்கரன் சென்னைக்கு வருகிறார். அவரை ஒருமுறை சந்திக்கலாமா என கேட்டார். சரி என்று ஒப்புக்கொண்ட பிறகு, என்னுடைய மனதில் சுபாஷ்கரன் பெரிய தொழிலதிபர், ‘2.0’, ‘இந்தியன் 2’ என பிரமாண்டமான பட்ஜெட்டில் படங்களைத் தயாரித்துவரும் தயாரிப்பாளர் என கற்பனையாக ஒரு அணுகுமுறையை எதிர்பார்த்திருந்தேன். அவரை சந்திக்க அவரது அறைக்குள் நுழைந்ததும், அவர் ஆசையுடன் தம்பி என்று சொல்லிக்கொண்டே என்னை ஆரத் தழுவிக்கொண்டார். அவருடைய கட்டிப்பிடித்தலிலேயே அவருடைய அன்பை முழுவதுமாக உணர்ந்தேன். அந்தத் தருணத்தில் அங்கு வருகை தந்த மற்றவர்களிடமும் அதே விருந்தோம்பலையும், அன்பையும் செலுத்தினார். அப்போதுதான் எனக்கு ஒரு விசயம் புரிந்தது. அவர் வயது வித்தியாசம் எதுவுமின்றி அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்.
அப்போதுதான் எனக்கு வள்ளலார் சொன்னது.. பட்டினத்தார் சொன்னது.. நபிகள் நாயகம் சொன்னது.. ஜீசஸ் சொன்னது.. நினைவுக்கு வந்தது. இந்த உலகத்தைக் கட்டிப் போட வேண்டும் என்றால், அதனை அன்பால் மட்டும் தான் முடியும். இத்தகைய அன்பை சுபாஷ்கரனிடம் அன்றும் பார்த்தேன். இன்றும் பார்த்தேன். உங்களின் நட்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. உங்களின் பிரமாண்டமான லைக்கா நிறுவனத்தில் நானும் நடித்ததை பாக்கியமாக கருதுகிறேன்” என்றார்.
வடிவேலு பேசுகையில், “முதல்ல ஒரு விசயத்தை சொல்லிடுறேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்ன வரவிடாம கதவை பூட்டு போட்டு சாவிய தூக்கிட்டு போயிட்டாங்க. உனக்கு சினிமாவில் நடிக்கிறதுக்கு தகுதியே இல்லன்னாங்க. அதுக்கு என்ன காரணம்கிறது எல்லாருக்கும் தெரியும். அந்தக் கதவை உடைத்து புது சாவிய கொடுத்து வாழ்க்கையை தொடங்கி வைத்தவர் எங்க அண்ணன் சுபாஷ்கரன். நான் குலதெய்வமா கும்பிடுவது அய்யனாரு, கருப்பன். அந்த ரெண்டு தெய்வத்துக்கு பிறகு தெய்வமா நான் அண்ணன் சுபாஷ்காரன தான் வணங்குறேன். யாரு என்ன சொன்னாலும்.. என்ன மறுபடியும் சினிமால நடிக்க வைத்தவர் அண்ணன் சுபாஷ்கரன் தான். இதற்கு அன்புத்தம்பி தமிழ் குமரன் ரொம்ப உதவியா இருந்தாரு” என்றார்.
இயக்குனர் பி.வாசு பேசுகையில், ”சுபாஷ்கரன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிக பெரும் பொக்கிஷம். ஏனெனில் அனைத்து இயக்குநர்களையும், அவர்களின் கனவுகளையும் அவர் பிரம்மாண்டமாக சாத்தியப்படுத்துபவர். நல்ல மனதுடையவர்.
நான் எப்போதுமே ஓம் என்று எழுதி தான் எந்த காரியத்தையும் தொடங்குவேன். ஓம் என்ற எழுத்தில் வரும் புள்ளிதான் லைக்கா சிஇஓ தமிழ் குமரன். அந்த புள்ளி இல்லையென்றால் ஓம் இல்லை. அந்த புள்ளிதான் அனைத்தையும் அழகுபடுத்தி காட்டும். அதேபோல் தமிழ் குமரன் பலருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்” என்றார்.
இதனிடையே, ராகவா லாரன்ஸின் ஆதரவுடன் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் கொண்ட நடன குழுவினருடன் மேடையில் சம்மணமிட்டு அமர்ந்து, அவர்களுக்கு தன் ஆதரவையும், அன்பையும் லைக்கா சுபாஷ்கரன் தெரிவித்தபோது அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.