“சந்திரமுகி கதாபாத்திரத்தை நான் விரும்பி கேட்டு வாங்கி நடித்தேன்!” – கங்கனா ரனாவத்
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2023/08/0a1h-4.jpg)
லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் தயாராகிவரும் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர் பி. வாசு பேசுகையில், “அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான நடிகரை தேர்வு செய்தாகிவிட்டது, சந்திரமுகியை தவிர. சந்திரமுகியாக நடிக்கவிருப்பது யார் என்ற கேள்வி எங்களுக்குள் தொடர்ந்துகொண்டே இருந்தது. இந்த நேரத்தில் கங்கனாவை வேறொரு விசயத்திற்காக சந்திக்கச் சென்றேன். அப்போது சந்திரமுகி குறித்து கேட்டார். பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பதிலளித்தேன். சந்திரமுகியாக நடிப்பது யார் என கேட்டார். இன்னும் யாரையும் உறுதிப்படுத்தவில்லை; தேடிக் கொண்டிருக்கிறோம் என்றேன். ஆச்சரியமடைந்த அவர், ஏன் நான் அந்த பாத்திரத்தில் பொருத்தமாக இருக்க மாட்டேனா? நான் ஏன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க்க் கூடாது? என கேட்டார். அவர் இதுவரை யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டதே இல்லை. அதைவிட சிறப்பம்சம் என்னவென்றால் அவர் முதல் நாள் படப்பிடிப்புக்கு வரும்போது அவர் என்ன கெட்டப்பில் நடிக்கப் போகிறார் என்று அவருக்குத் தெரியாது. இதன்பிறகு தான் அவருக்கு நான் கதையை முழுவதுமாகச் சொன்னேன்” என்றார்.
நடிகை கங்கனா ரனாவத் பேசுகையில், ” அருமையான மாலை வேளை. பிரம்மாண்டமாகவும் அழகாகவும் நடைபெறும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, வண்ணமயமான அனுபவங்களை வழங்கியதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய வாழ்க்கையில் நான் இதுவரை யாரிடமும் எந்த கதாபாத்திரத்தையும் நடிப்பதற்காக விரும்பி கேட்டதில்லை. இயக்குநரிடம் சந்திரமுகியாக நடிக்க நான் பொருத்தமாக இருப்பேனா என கேட்டேன். சிறிதுநேர யோசிப்பிற்குப் பிறகு அவர் சரி என்று ஒப்புக்கொண்டார்.
படப்பிடிப்பு தளத்தில் சந்திரமுகி எப்படி நடப்பார் என்பது குறித்தும் அவர் துல்லியமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்த்து நடந்தேன்.
இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் என்னை வியப்பில் ஆழ்த்தியவர். திரைப்படத் துறையில் நடன கலைஞராக அறிமுகமாகி, நடன உதவியாளராகவும், நடன இயக்குனராகவும், பிறகு நடிகராகவும், பிறகு இயக்குநராகவும் கடினமாக உழைத்து முன்னேறியவர். அவர் எப்போதும் கனிவாக நடந்துகொள்ளக் கூடியவர். மென்மையான இதயம் கொண்டவர். படப்பிடிப்பு தளத்தில் முதன்முறையாக சந்தித்தபோது கங்கனா மேடம் என்றார். அதன்பிறகு இரண்டாவது நாள் கங்கனா என்றார். மூன்றாவது நாள் ஹாய் கங்கு என அழைத்தார்.
நான் வடிவேலு சாரின் மிகப்பெரிய ரசிகை. அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாது.
இந்தப் படத்தில் நான் மூன்று பாடலுக்கு நடனமாடியுள்ளேன். இதுவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது” என்றார்.
ராகவா லாரன்ஸ் பேசுகையில், “சந்திரமுகியாக கங்கனா நடிக்கப் போகிறார் என வாசு சார் சொன்னவுடன், அவர் மிகவும் துணிச்சல் மிக்கவர், சமூக வலைதளங்களில் தீவிரமாக தனது கருத்தை பதிவு செய்பவர், வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்.. என்பதால் எப்படி நடந்து கொள்வாரோ..! என்று எண்ணிக் கொண்டிருந்தேன். படப்பிடிப்பு தளத்தில் முதல் நாள் வருகை தரும் போது அவருடன் துப்பாக்கி ஏந்திய காவலர்களும் வந்தனர். அவர் ஒரு கலைஞர்தானே… எதற்கு அவருடன் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் வரவேண்டும்? என எண்ணினேன். இது தொடர்பாக வாசுசாரிடம் கேட்டபோது. ‘அவர் இப்படித்தான். அவருக்கு சில பாதுகாப்பு காரணங்களுக்காக ஆயுதம் எழுதிய காவலர்கள் உடன் வருவார்கள்’ என விளக்கம் சொன்னார். அப்போது அவரைப் பார்த்து வணக்கம் சொல்வதற்கு கூட பயமாக இருந்தது. அதன் பிறகு அவரிடம் என் எண்ணத்தை பகிர்ந்து கொண்டேன். அவர் உடனடியாக ஆயுதம் ஏந்திய காவலர்களிடம் பேசி அவர்களை சற்று தொலைவில் நிற்க வைத்தார். அதன் பிறகு கங்கனாவிடம் பழகத் தொடங்கி, கங்கனா என்றேன். அதன் பிறகு கங்கு என்றேன். படப்பிடிப்பு தளத்தில் அவரும் கலாட்டா செய்வார். மகிழ்ச்சியாக இருப்பார். உற்சாகத்துடன் இருப்பார். நான் பழகியதில் குழந்தை உள்ளம் கொண்ட நடிகை என கங்கனாவை சொல்லலாம். அவர் இந்த படத்தில் நடித்திருப்பது படத்திற்கு பலம் ” என்றார்.
நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் பேசுகையில், “ஸ்வகதாஞ்சலி..’ பாடலில் கங்கனா மேடத்தின் அர்ப்பணிப்புடன் கூடிய ஈடுபாட்டை பார்த்து வியந்தேன். உங்களிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என தோன்றியது. அவருடன் சக நடிகையாக பணியாற்றியதை பெருமிதமாக கருதுகிறேன். அவர் நிறைய தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகை சிருஷ்டி டாங்கே பேசுகையில், “கங்கனா ரனாவத் என்னுடைய ரோல் மாடல். நீங்கள் நடித்திருக்கும் படத்தில் நானும் நடித்திருப்பதை அதிர்ஷ்டமாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன்” என்றார்.