சைத்ரா – விமர்சனம்

நடிப்பு: யாஷிகா ஆனந்த், அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, கண்ணன், ரமணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: எம்.ஜெனித்குமார்

ஒளிப்பதிவு: சதீஷ் குமார்

படத்தொகுப்பு: எலிஷா

இசை: பிரபாகரன் மெய்யப்பன்

தயாரிப்பு: ’மார்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ கே.மனோகரன்

பத்திரிகை தொடர்பு: மணவை புவன்

தனித்திருக்கும் மிகப் பெரிய பங்களா. அதன் உச்சியில், கதையின் நாயகி யாஷிகா ஆனந்த் (’சைத்ரா’) கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறவர் போல மொட்டை மாடியின் குறுக்குச் சுவரின் மீது நின்றுகொண்டிருக்கிறார். அவரது உடலும் குரலும் நடுங்கிக்கொண்டிருக்க, “நான் சாகப்போறேன். அவங்க என்னை கொன்றுவாங்க” என்பதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார். பின்னர், ஆடியன்ஸை பார்த்து, “நான் ஏன் இப்படி ஆனேன் தெரியுமா? முன்பெல்லாம் பேய் இல்லைன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். இப்ப, இருக்குன்னு நம்புறேன். ஏன்னா, எனக்கு ஏற்பட்ட அனுபவம் அப்படி” என்று கூறிவிட்டு தன் கதையை சொல்லத் தொடங்குகிறார். இப்படித்தான் ஆரம்பமாகிறது இந்த படம்.

அவிதேஜும் (’கதிர்’) யாஷிகா ஆனந்தும் கணவன் – மனைவி. அவிதேஜின் நண்பர் (’சிவா’) ஓர் உதவி கேட்டு போனில் அழைக்க, மனைவி தூங்கிக்கொண்டிருப்பதால் அவரிடம் சொல்லாமல் கிளம்பிப் போகிறார் அவிதேஜ்.

இதற்கிடையில், யாஷிகா ஆனந்தின் தோழி பூஜாவும் (’மதுமிதா’), அவரது கணவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பைக்கில் வந்துகொண்டிருக்கிறார்கள். அப்போது எதிர்பாராத விதமாக பைக் தடுமாறி கீழே சரிய, இருவரும் சாலையோர பள்ளத்தில் விழுகிறார்கள். பைக்கை ஒழுங்காக ஓட்டத் தெரியவில்லை என்று கணவரை திட்டுகிறார் பூஜா. மண்ணில் விழுந்ததால் அழுக்காகிவிட்ட இந்த டிரஸ்ஸில் நான் நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். பின்னர், பக்கத்தில் ஃபிரண்டு வீடு இருக்கிறது; அங்கே போய் சுத்தம் செய்துகொண்டு கிளம்பிப் போகலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.

யாஷிகா ஆனந்தின் வீட்டுக்கு வரும் பூஜாவும் அவரது கணவரும் காலிங் பெல்லை பலமுறை அடிக்கிறார்கள். யாரும் வந்து கதவைத் திறக்கவில்லை. பிறகு தற்செயலாக கதவைத் தள்ளியபோது, சும்மா சாத்தியிருந்த கதவு திறந்துகொள்கிறது. வீட்டின் கீழ்த்தளத்தில் யாருமில்லை. முதல் தளத்தில் போய் பார்த்தால், கட்டிலில் ஒரு நபர் படுத்திருப்பது போல தலையணைகள் அடுக்கப்பட்டு போர்வையால் போர்த்தப்பட்டிருக்கிறது. ஆள் யாருமில்லை. அப்போது அச்சமூட்டும் வகையில் ஓர் அமானுஷ்ய குரல் கேட்க, அது வரும் திசை நோக்கி போகிறார்கள். மொட்டை மாடியில் கீழே குதிக்கத் தயாராக இருக்கும் யாஷிகா ஆனந்தை முதுகுப்புறமாக பார்க்கிறார்கள். பயத்தில் பதறியடித்து கீழே இறங்கி ஓடுகிறார்கள்…

இப்போது தான் ‘சைத்ரா’ படத்தின் புது கண்டெண்ட்டை சொல்லப் போகிறோம். அது என்னவென்றால், பதறியடித்து ஓடிய பூஜாவும், அவரது கணவரும் இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு சாலை விபத்தில் சிக்கி இறந்துபோனவர்கள். மனித உருவில் உள்ள பேய்கள். இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவென்றால், தாங்கள் இறந்துபோனவர்கள், பேயாக வாழ்பவர்கள் என்ற உண்மை அந்த பேய்களுக்கே தெரியாது. அவர்கள் யாருடைய கண்களுக்கெல்லாம் தென்படுகிறார்களோ, அவர்களெல்லாம் இறந்துபோவார்கள்…

அவர்கள் ஏன் யாஷிகா ஆனந்தை தேடி வருகிறார்கள்? அவர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று யாஷிகா ஆனந்த் ஏன் அஞ்சி தற்கொலை செய்துகொள்ள முயலுகிறார்? அவர்களிடமிருந்து அவர் காப்பாற்றப்பட்டாரா, இல்லையா? அவர்களைப் பார்த்த யார் யாரெல்லாம் உயிரை விடுகிறார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கு திடுக்கிட வைக்கும் பல திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘சைத்ரா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாம் ஏற்கெனவே பல முறை பார்த்து சலித்த வழக்கமான பேய் பட டெம்பிளேட்டில் இல்லாமல், புத்தம் புது கான்செப்ட்டை உருவாக்கி, பேய் நம்பிக்கை இல்லாதவர்களையும் கதி கலங்கச் செய்யும் வண்ணம் கதை, திரைக்கதை அமைத்து, பார்வையாளர்கள் அனைவரையுமே பயமுறுத்தும் வகையில் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குநர் எம்.ஜெனித்குமார் பாராட்டுக்குரியவர். மேலும், நாயகி யாஷிகா ஆனந்த் (’சைத்ரா’), அவரது கணவராக வரும் அவிதேஜ் (’கதிர்’), நாயகியின் தோழியாக வரும் பூஜா (’மதுமிதா’), அவரது கணவர்,  அவிதேஜின் நண்பர் (’சிவா’), அவரது காதலி சக்தி மகேந்திரா (’திவ்யா’), அவரது அண்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், ஒரு கான்ஸ்டபிள், பேயோட்டும் ஆனைமலை சாமியார், அவரது சீடன் (மொசக்குட்டி), ஒரு டாக்டர், கம்பவுண்டர் என படத்தின் நடிப்புக் கலைஞர்கள் அனைவரையுமே பேய்கள் கொன்று விடுவதாக கதை பண்ணியிருக்கும் இயக்குனர், இது எங்கும் சொதப்பிவிடாமல் கவனமாக, பிரமாதமாக செதுக்கியிருக்கிறார். கடைசியில் ஆடியன்ஸையும் கொல்லப் போவதாக பேய் மிரட்டியிருப்பது சூப்பர்.

படத்தின் தலைப்பான ‘சைத்ரா’ என்ற பெயரில் நாயகியாக வரும் யாஷிகா ஆனந்த், இயல்பாகவும், சிறப்பாகவும் நடித்திருக்கிறார். அவரைப் போலவே ஏனைய நடிகர் – நடிகைகளும் தத்தமது பாத்திரம் உணர்ந்து அளவாக, கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சதீஷ் குமார், படத்தொகுப்பாளர் எலிஷா, இசையமைப்பாளர் பிரபாகரன் மெய்யப்பன் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இயக்குனருக்கு உறுதுணையாக உழைத்து படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

‘சைத்ரா’ – புதுமை விரும்பும் அமானுஷ்ய பட ரசிகர்களுக்கு செம விருந்து!