செக்கச் சிவந்த வானம் – விமர்சனம்
இயக்குனர் மணிரத்னம் தொடர் தோல்விகளால் சரிந்துவரும் தனது மவுசைத் தூக்கி நிறுத்தும் முயற்சியாக, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், அரவிந்தசாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெயசுதா உள்ளிட்ட இந்நாள் – முன்னாள் நட்சத்திரங்களை மொத்தமாய் அள்ளிப்போட்டு ஒரு ‘மல்ட்டி ஸ்டாரர் மூவி’யாக எடுத்திருக்கும் படம் தான் ‘செக்கச் சிவந்த வானம்’.
கல்வித் தந்தை, அரசியல்வாதி உள்ளிட்ட பன்முகங்கள் கொண்ட பெரிய தாதா பிரகாஷ்ராஜ். அவரது திருமண நாளன்று சில மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்த, பிரகாஷ்ராஜும் அவரது மனைவி ஜெயசுதாவும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இவர்களின் மூத்த மகன் அரவிந்த்சாமியும், அவரது மனைவி ஜோதிகாவும் அதே ஊரில் இருப்பதால் அவர்கள் பிரகாஷ்ராஜையும், ஜெயசுதாவையும் அருகிலிருந்து பார்த்துக்கொள்ள, துபாயிலிருந்து இரண்டாவது மகன் அருண் விஜய்யும், செர்பியாவிலிருந்து மூன்றாவது மகன் சிம்புவும் கிளம்பி வருகிறார்கள். அப்பாவுக்குப் பிறகு அவரது தாதா வாரிசாக அடுத்து வரக்கூடிய தாதா யார் என்ற போட்டி மூன்று மகன்களுக்கு இடையே அப்போதே ஆரம்பித்து விடுகிறது
இதற்கிடையில் பிரகாஷ்ராஜ் இறந்துவிட, வாரிசுப் போட்டி தீவிரமடைகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற மூன்று மகன்களும கைத்துப்பாக்கிகள் சகிதம் கொலைவெறியுடன் களம் இறங்குகிறார்கள். அதற்குப் பிறகு நடப்பது என்ன? தாதா வாரிசுக்கான போட்டியில் வெல்பவர் யார்? இவர்களால் ஏற்படும் வன்முறைகளை போலீஸ் எப்படி கையாளுகிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது மீதிக்கதை.
மூத்த தாதாவாகவும், மூன்று முரட்டு மகன்களின் தந்தையாகவும் அனாயசமாக, எவ்வித ஓவர்-ஆக்ட்டிங்கும் இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவரது மூத்த மகனாக வரும் அரவிந்த்சாமிக்கு வழக்கமான கதாபாத்திரம் தான் என்றாலும், அதை இம்மி பிசகாமல் செய்திருக்கிறார். இரண்டாவது மகனாக வரும் அருண் விஜய், மூன்றாவது மகனாக வரும் சிம்பு ஆகியோர் தங்களுக்கென வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்குள் கச்சிதமாகப் பொருந்தி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தின் மிகப் பெரிய சர்ப்ரைஸ் விஜய் சேதுபதி தான். சுவாரஸ்யமான நடிப்பால் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார். அவர் பேசும் வசனங்களும், அள்ளித் தெளிக்கும் நகைச்சுவையும் விஜய் சேதுபதியை தனித்துவத்துடன் காட்டுகின்றன.
பெண் கதாபாத்திரங்களில், ஜோதிகாவுக்கு மட்டும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எதிரிகளிடமிருந்து கணவனைக் காப்பாற்றப் போராடும் கதாபாத்திரம் என்றாலும் அதில் எந்த ஆழமும் அர்த்தமும் இல்லை. ஐஸ்வர்யா ராஜேஷ் சில காட்சிகளில் வந்துபோகிறார். அதுவும் அழ முடியாமல் கோபித்துக்கொள்ளும் இடத்தில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார். அதிதி ராவ் தாராளம் காட்டியிருக்கிறார். ஜெயசுதா கதாபாத்திரம் வலுவாக இல்லை.
தியாகராஜன் கதாபாத்திரம் பில்டப் செய்யப்பட்டது. ஆனால், அதற்கான நியாயத்தை அவர் செய்யவே இல்லை. மன்சூர் அலிகான், டயானா எரப்பா, கவுதம் சுந்தர்ராஜன், சிவா அனந்த் ஆகியோர் கதாபாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள்.
சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் படத்துடன் ஒத்திசைவாகப் பயணிக்கின்றன.. முதல் பாதியின் அலுப்பு தெரியாமல் விறுவிறு வேகம் காட்டிய விதத்தில் ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் நேர்த்தி.
தாதாவையும், தாதா குடும்பத்தையும் மையமாக வைத்து படம் எடுப்பது மணிரத்னத்துக்குப் புதிதில்லை. ஆனால், இந்தப்படத்தில் அவர் ரசிகர்களின் காசைப் பறிப்பதற்குத் தேவையான கமர்ஷியல் அம்சங்களைப் புகுத்த கவனம் செலுத்திய அளவுக்கு கதைக்காகவும், திரைக்கதைக்காகவும் மெனக்கெடவில்லை. அதனால் எக்கச்சக்கமான லாஜிக் மீறல்கள். போதாக்குறைக்கு நமக்கு நெருக்கமில்லாத துப்பாக்கிச் சண்டைகள் படம் முழுக்க நிரம்பி வழிந்து நமக்கு அலுப்பூட்டுகின்றன.
‘செக்கச் சிவந்த வானம்’ – அன்னியம்!