“இந்தியா அண்டை நாடு என தமிழர்கள் எண்ணும் நிலை உருவாகும்”: சீமான் எச்சரிக்கை!

“மத்திய அரசானது, தமிழ்த்தேசிய இன மக்களின் உரிமைக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அளித்த மனுவை திரும்பப் பெற்று, மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முன்வர வேண்டும். இதனைச் செய்யாத பட்சத்தில், ‘இந்தியக் குடிமகன்’ என்ற உணர்வே தமிழர்களுக்குப் பட்டுப்போய், இந்தியாவானது அண்டை நாடோ எனத் தமிழர்கள் எண்ணுகிற நிலை உருவாகும் என எச்சரிக்கிறேன்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தின் தார்மீக உரிமையை நிலைநாட்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரசும், தற்போது ஆட்சியிலிருக்கும் பாஜகவும் இதனை நிறைவேற்றாது நீண்டகாலம் இழுத்தடித்து வந்தன. இந்நிலையில், காவிரிச்சிக்கல் குறித்துக் கடந்த செப்டம்பர் 30 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தைச் அக்டோபர் 4ஆம் தேதிக்குள் அமைக்க உத்தரவிட்டது. மேலும், வாரியத்திற்குத் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகளை நியமிக்கவும் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி அரசுகளானது தங்கள் மாநிலப் பிரதிநிதிகளை நியமித்தது. ஆனால், கர்நாடகா அரசானது தங்களது பிரதிநிதியை நியமிக்க மறுத்ததோடு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் எதிர்ப்புத் தெரிவித்தது.
இந்நிலையில், தீர்ப்பன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக்கொண்ட மத்திய அரசானது தற்போது கால நீடிப்பு கேட்டு மனு தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து அவமதித்துவரும் கர்நாடக அரசின் அடாவடித்தனத்தைக் கண்டிக்க வேண்டிய மத்திய அரசு, அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவது கர்நாடகத்தின் கைப்பாவையாக மத்திய அரசு மாறிவிட்டது என்பதைத்தான் காட்டுகிறது.
இவ்விவகாரத்தில் ‘நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலிருப்பதால் காவிரி விவகாரம் தொடர்பாகக் கருத்து தெரிவிக்க முடியாது’ எனத் திருவாய் மலர்ந்தருளிய பிரதமர் மோடி அவர்கள் இன்று நீதிமன்றத் தீர்ப்பையே செயல்படுத்த ஏன் மறுக்கிறார்? வாரியத்தை உடனடியாக அமைக்கக்கோரி நீதிமன்றமே கூறிவிட்டநிலையில், நீதிமன்ற தீர்ப்பைச் செயல்படுத்துவதில் பாஜக அரசுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகாவில் நடக்கவிருக்கிற பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு அது பின்னடைவை ஏற்படுத்தும் என்பதாலா? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் காவிரியாற்றின் குறுக்கேயுள்ள அணைகள் மீதான நிர்வாகமெல்லாம் வாரியத்திற்குச் சென்று தமிழகத்தைக் கர்நாடகம் வஞ்சிக்க முடியாது என்பதாலா? ‘காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்னரே அமைக்க முடியும்’ எனத் தனது தரப்பை நியாயப்படுத்த சப்பைக்கட்டும் மத்திய அரசு இவ்வளவு நாட்களாகச் சட்டமியற்றாமல் என்ன செய்துகொண்டிருந்தது? அதனை நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்பாகச் சொல்ல வேண்டிய நிர்பந்தம் என்ன? நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றினால் மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் என விதிகள் ஏதுமில்லையே? என இதுதொடர்பாக எழும் கேள்விகளும், ஐயங்களும் காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடகாவின் பின்புலத்தில் மத்திய அரசு இருப்பதை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டியிருக்கிறது.
காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீதும், அவர்களது உடமைகள் மீதும் தாக்குதலைத் தொடுத்து கன்னட வெறியர்கள் கோரத்தாண்டவமாடியபோது வேடிக்கைப் பார்த்தது கர்நாடக அரசு. இத்தோடு உச்ச நீதிமன்றத்தைத் தீர்ப்பை பலமுறை அவமதித்தும், அதனை எதிர்த்துச் சட்டசபையில் தீர்மானம் போட்டும் அரசியலமைப்பைக் கேலிக்குள்ளாக்கி வருகிறது. ஆனால், தமிழகமோ தனது தார்மீக உரிமையைக் கேட்டு சட்டப்பூர்வமாகவும், அறவழியிலும் போராடி வருகிறது. தமிழர்கள் அறநெறியாளர்கள் என்பதற்குச் சான்றாகத் தமிழகத்தில் வாழும் கன்னடர்கள் மீது சிறுதாக்குதலும் தொடுக்கப்படவில்லை. இப்படி அரசியமைப்புச்சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டும், அறவழியில் போராடியும் வரும் தமிழகத்தை மத்திய அரசானது வஞ்சிப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தை (Principle of Federal Structure) முன்மொழிந்து, அதற்கு வழமையான அரசியல் சாசனத்தை உருவாக்கி அதனடிப்படையில் 1950ல் குடியரசாக இயங்கத்தொடங்கியது. இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் போன்ற பேரறிஞர்களும், வல்லுநர்களும், மத்திய மாநில அரசுகளின் அதிகாரம், உரிமை, எல்லை மற்றும் அதற்கிடையான நீர் நில சிக்கல்களை மனதில் வைத்தே பல்வேறு வழிமுறைகளை விவாதித்து, அரசியல் சாசன சரத்துகளை வடித்தனர். 1947க்குபின் ஜனநாயக குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இந்தியா, பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டதால், அதன் அடிநாதமாக ‘அடிப்படை கட்டமைப்பு’ கோட்பாடு (Basic Structure Doctrine) இருக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. அனைத்து அரசுகளும் சமத்துவம் பேணவேண்டும், எல்லா மக்களையும் சமமாக நடத்தவேண்டும், ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் உருவாக வேண்டும் என்பவையே அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டிற்கான அடித்தளமாகக் கருதப்பட்டது. இந்நாட்டின் ஒருமைப்பாடும், மக்களின் ஒற்றுமையும், அரசு இயந்திரத்தின் மதச்சார்பின்மையும், பாதுகாத்து உறுதிப்படுத்தும் இந்திய அரசியல் சாசனத்தின் மீது சத்தியம் செய்த ஒரு மாநில அரசு மேற்சொன்ன எந்த நியதியயையும் பின்பற்றாமல், அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டிற்கு எதிராகவும், கூட்டாட்சித் தத்துவத்தைக் கேலிக்கூத்தாக்குவது போலவும் செயல்படுவதும், மத்திய அரசு அதை ஆதரித்து நிற்பதும் இந்திய தேசியத்தின் பொய்மையைத் தோலுரித்துக் காட்டுகிறது.
அற்ப அரசியல் காரணங்களுக்காகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழ்த்தேசிய இனத்தின் தார்மீக உரிமையைப் பலிகொடுக்கத் துணை நிற்கும் பாஜக அரசின் இந்தச் செயலானது தமிழ்த்தேசிய இனத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். மத்திய அரசானது, தமிழ்த்தேசிய இன மக்களின் உரிமைக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்து மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அளித்த மனுவை திரும்பப்பெற்று, மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முன்வர வேண்டும். இதனைச் செய்யாதபட்சத்தில், ‘இந்தியக் குடிமகன்’ என்ற உணர்வே தமிழர்களுக்குப் பட்டுப்போய், இந்தியாவானது அண்டை நாடோ எனத் தமிழர்கள் எண்ணுகிற நிலை உருவாகும் என எச்சரிக்கிறேன்.