ரயில் மறியல்: ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கைது!
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி அக்டோபர் 17, 18ஆம் தேதிகளில் (இன்றும் நாளையும்) 2 நாட்கள் 48 மணி நேர ரயில் மறியல் போராட்டம் நடத்த தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் முடிவு செய்தது. இந்த போராட்டத்துக்கு அ.தி.மு.க., பா.ஜ.க. தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
தி.மு.க, தே.மு.தி.க., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, சீமானின் நாம் தமிழர் ஆகிய 10 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. மேலும் வெள்ளையன் மற்றும் விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்கங்களும் ரயில் மறியலுக்கு ஆதரவு தெரிவித்தன.
தமிழ்நாடு முழுவதும் 200 இடங்களில் ரயில்களை மறித்து போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ரயில் நிலையங்களில் இன்று அதிகாலை முதலே பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
என்றாலும் திட்டமிட்டப்படி இன்று தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டங்கள் நடந்தன. அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் திரளாக வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
குறிப்பாக, காவிரி பாசனப் பகுதிகளில் ரயில் மறியல் போராட்டம் மிகத் தீவிரமாக காணப்பட்டது. விவசாயிகள் அலை அலையாக வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதையடுத்து பல்லாயிரக்கணக்கானவர்களை தமிழகம் முழுவதும் போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் நடந்த போராட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கைதானார். போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அவர் காலை 8.50 மணிக்கு பெரம்பூர் மேம்பாலம் பகுதிக்கு வந்தார். அங்கிருந்து 9 மணிக்கு அவர் தலைமையில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் கைகளில் தி.மு.க. கொடி ஏந்தி பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு சென்றனர்.
9.10 மணிக்கு ஸ்டாலினும் தி.மு.க. நிர்வாகிகளும் ரெயில் மறியலில் ஈடுபட உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை ரயில் நிலையம் முன்பு அரண்போல நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இதையடுத்து ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அனைவரும் ரயில் நிலையம் முன்பு திரண்டு நின்றனர். மத்திய அரசை கண்டித்து மு.க.ஸ்டாலின் கோஷம் எழுப்ப, தி.மு.க. தொண்டர்கள் அந்த கோஷத்தை திருப்பி எழுப்பினார்கள்.
”போராட்டம், போராட்டம் – விவசாய மக்களை மீட்டெடுக்கப் போராட்டம்”, “கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் – காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கிறோம்”, “பறிக்காதே, பறிக்காதே – காவிரி நீர் உரிமையை பறிக்காதே”, “தமிழா, தமிழா – ஒன்றுபடு தமிழா”, “விட மாட்டோம், விட மாட்டோம் – மோடி அரசை விட மாட்டோம்”, “கூட்டு, கூட்டு – சட்டசபையை கூட்டு”, “கருகுதே, கருகுதே – பயிரெல்லாம் கருகுதே”, “அடிக்காதே, அடிக்காதே – விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே” என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.
சுமார் 30 நிமிடங்கள் கோஷமிட்ட நிலையில் அவர்களை கைது செய்வதாக போலீசார் அறிவித்தனர். மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ப.ரங்கநாதன், தாயகம் கவி, ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, தி.மு.க. நிர்வாகிகள் கிரிராஜன், தேவஜவகர், ஜெயின், தமிழ்வேந்தன், நாகராஜ், சாமிக்கண்ணு, ஜோசப் சாமுவேல், ராஜகோபால், அம்பத்தூர் ஆஸ்டின், முரளி, ஜி.எம்.தேவன், துளசிங்கம், விஜயகுமார், வேலு உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை போலீசார் அங்கு தயாராக நிறுத்தி வைத்திருந்த மாநகர பஸ்களில் ஏற்றினார்கள். முதலில் தி.மு.க. தொண்டர்கள் செல்லட்டும் என்று மு.க.ஸ்டாலினும், நிர்வாகிகளும் சற்று தள்ளி நின்றுகொண்டிருந்தனர்.
போலீசார் கவனம் தி.மு.க.வினரை பஸ்களில் ஏற்றுவதில் இருந்தபோது, மு.க.ஸ்டாலின், ரெங்கநாதன்,. சேகர்பாபு உள்பட சுமார் 100 பேர் போலீசாரின் அரணை உடைத்துக்கொண்டு பெரம்பூர் ரயில் நிலையத்துக்குள் சென்றனர். அங்கு அவர்கள் தண்டவாளத்தில் நின்று போராட்டம் செய்தனர்.
கையில் தி.மு.க. கொடி ஏந்தி வந்த மு.க.ஸ்டாலின் மத்திய அரசை எதிர்த்து கோஷமிட்டார். அப்போது அந்த வழியாக சென்ட்ரலில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில் வந்தது.
அந்த மின்சார ரயிலை மு.க.ஸ்டாலினும் தி.மு.க.வினரும் மறித்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த ரயில் சுமார் 20 நிமிடங்கள் அங்கேயே நின்றது.
இதையடுத்து மு.க.ஸ்டாலினையும், தி.மு.க. நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர். அவர்கள் அனைவரும் ஓட்டேரியில் உள்ள ஹேமராஜ்பவன் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
வைகோ – ஜி.ராமகிருஷ்ணன்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு தொண்டர்கள் காலை 9 மணி முதலே சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள அல்லிக்குளம் பகுதியில் திரண்டனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 10.50 மணிக்கு அல்லிக்குளம் மார்க்கெட் பகுதிக்கு வந்தார். இதையடுத்து நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் ராமகிருஷ்ணன், பாஷ்யம், சுந்தர்ராஜ், இந்திய கம்யூனிஸ்டு தலைவர்கள் சுப்பராயன், வீரபாண்டியன் ஆகியோர் சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக நடந்து சென்றனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மங்களூர் ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து அவர்கள் மறியல் செய்தனர்.
அப்போது, காவல்துறை அதிகாரிகளுக்கும், வைகோவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. “நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று வைகோ கூறினார். தொடர்ந்து வைகோ முழக்கங்கள் எழுப்பினார். அப்போது, மறியலில் பங்கேற்றவர்களும் முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை. இந்திய ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்கிறது” என்று குற்றம்சாட்டினார்.
இதைத் தொடர்ந்து வைகோ, ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பேசின் பிரிட்ஜில் தொல்.திருமாவளவன் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.