தண்டவாளத்தில் நாற்று நட்டு, உணவு சமைத்து விவசாயிகள் நூதன போராட்டம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழகத்தை வஞ்சிக்கும் நரேந்திர மோடியின் பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரியும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் இன்று, நாளை (திங்கள், செவ்வாய்) ஆகிய 2 நாட்கள் 48 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையொட்டி தஞ்சை ரயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து, உணவு சமைத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான தஞ்சாவூரில் மட்டும் பல்வேறு இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி குடமுருட்டி ரயில் நிலையத்தில் திரண்ட விவசாயிகள், ரயில் தண்டவாளத்தில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர்.