மோடி அரசை கண்டித்து ரயில் மறியல்: வைகோ, திருமா, சீமான் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நரேந்திர மோடியின் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து அக்டோபர் 17, 18 தேதிகளில் தமிழகம் முழுவதும் 48 மணி நேர தொடர் மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர்,  தமாகா உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.

அதன்படி, முதல் நாளான நேற்று காலை 6 மணி முதலே ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பூங்கோதை, எம்எல்ஏக்கள் சேகர்பாபு, ப.ரங்கநாதன், தாயகம் கவி, ரவிச்சந்திரன் உட்பட 1,700 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று முதல் நாள் போராட்டத்தின்போது, சென்னை மற்றும் புறநகரில் 5,491, வேலூர், திருவண்ணாமலை யில் 2,230, கோவை, திருப்பூரில் 1,915, திருநெல்வேலி, தூத்துக்குடியில் 738, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 1,916, திருச்சி, கரூர், அரியலூரில் 2,249, தஞ்சாவூரில் 1,992, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 314, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 2,512, தருமபுரி, கிருஷ்ணகிரியில் 1,490 என தமிழகம் முழுவதும் மொத்தம் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இரண்டாவது நாளான இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வாரணாசியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலை மறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தமிழக விவசாயிகளை மத்திய அரசு வஞ்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். இதனால் எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஸ்தம்பித்தது. வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தனது ஆதரவாளர்களுடன் ரயில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பதே அனைத்துக் கட்சிகளின் கோரிக்கை. கர்நாடகாவில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழக விவசாயிகளை வஞ்சிக்க வேண்டாம் என மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

தஞ்சாவூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமாகாவினரை போலீஸார் கைது செய்தனர். அப்போது பேசிய வாசன், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்” என்றார்.

திருச்சி ரயில் நிலையத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் சார்பில் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

விழுப்புரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர், சென்னையில் இருந்து குருவாயூர் நோக்கிச் சென்ற குருவாயூர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த ரயில் சுமார் முக்கால் மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது.

அதேபோல் திருச்சி அருகே புல்லம்பாடி ரயில் நிலையத்தில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த வைகை விரைவு ரயிலை விவசாயிகள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மறியலில் ஈடுபட்ட 300 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் ரயில் மறியல் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அர்ஜூனன் தலைமையில் மறியல் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.