பொது வாக்கெடுப்பு முடிவு: கேட்டலோனியா தனி நாடு ஆக 90% பேர் ஆதரவு!
ஸ்பெயினிடமிருந்து தனி நாடு கோரி கேட்டலோனியா மாகாண மக்கள் பொதுவாக்கெடுப்பு நடத்தினர். இதில் 90 சதவீத மக்கள் தனி நாட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கில் கேட்டலோனியா மாகாணம் அமைந்துள்ளது. அதன் மக்கள் தொகை 75 லட்சம். அந்த நாட்டின் பொருளாதாரத்தில் 20 சதவீதம் கேட்டலோனியாவின் பங்களிப்பு ஆகும்.
கடந்த 2008 பொருளாதார தேக்கநிலையின்போது கேட்டலோனியா கடுமையாக பாதிக்கப்பட்டது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. ஆனால் ஸ்பெயின் அரசு கேட்டலோனியாவின் வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. கேட்டலோனியா மாகாண மக்கள் கேட்டலான் என்ற மொழியை பேசுகின்றனர். அந்த மொழியை புறக்கணித்து ஸ்பானிஷ் மொழியை மட்டுமே பேச வேண்டும் என்று மத்திய அரசு நிர்பந்தம் செய்து வருகிறது. இதன் காரணமாக கிளர்ச்சி ஏற்பட்டு நேற்று முன்தினம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பு நடைபெற்றபோது ஸ்பெயின் போலீஸார் அதனைத் தடுக்க முற்பட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திடீர் திருப்பமாக கேட்டலோனிய தீயணைப்புப் படை வீரர்கள் பொதுமக்களுக்கு ஆதரவாக களமிறங்கி அவர்களுக்கு பாதுகாப்பு அரண் அமைத்தனர். இதனால் வாக்கெடுப்பு அமைதியாக நடைபெற்றது.
ஒட்டுமொத்தமாக 20 லட்சத்து 26 ஆயிரம் பேர் வாக்களித்தனர். இதில் 90 சதவீத பேர் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இது குறித்து ஸ்பெயின் பிரதமர் மரியானோ கூறியபோது, பொது வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்றார். இந்த பிரச்சினை தொடர்பாக ஸ்பெயின் அமைச்சரவையின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. தற்போதைய குழப்பத்தால் ஸ்பெயினில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.