ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற திடீர் அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று நேற்று இரவு அறிவித்தார்.
கால அவகாசம் எதுவும் அளிக்காமல் திடீரென நள்ளிரவு முதலே இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்ததால், நாடு முழுவதும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சாதாரண மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்களைக்கூட வாங்க முடியாமல் அவர்கள் திண்டாடி தவிக்கிறார்கள்.
இந்நிலையில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மோடியின் திடீர் அறிவிப்புக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சங்கம்லால் பாண்டே என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
“மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பு பொது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை அளித்துள்ளது. அறிவிப்பை செயல்படுத்த கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும். எனவே, எனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என தனது மனுவில் சங்கம்லால் பாண்டே கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இதே கோரிக்கையை வலியுறுத்தி மும்பை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.