இந்து தீவிரவாத சர்ச்சை: கமலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் வழக்கு – நாளை விசாரணை!
நடிகர் கமல்ஹாசன் ஆனந்த விகடன் வார இதழில் எழுதி வரும் தொடர் கட்டுரையில், “முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்த பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கி விட்டனர்” என்று கூறி உள்ளார்.
மேலும், இந்து வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்து விட்டதாகவும், எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்றும் கமல்ஹாசன் அந்தக் கட்டுரையில் கூறியிருக்கிறார்..
கமல்ஹாசனின் இக்கருத்துக்கு இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளான பாரதிய ஜனதா, சிவசேனா ஆகியவற்றை சேர்ந்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்துத்துவ தீவிரவாதிகள் ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த போலீசார் இது தொடர்பாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அங்குள்ள பனாரஸ் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 500, 511, 298, 295(ஏ), 505(சி) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
இதுபோல் வாரணாசி முனிசிபல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர், “இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் பேசிய கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என நீதிபதி அறிவித்துள்ளார்