கேர் ஆஃப் காதல் – விமர்சனம்
பள்ளிக் காலம், பதின்ம வயது, நடுத்தர வயது, 40 வயதுக்கு மேல் என நான்கு பருவங்களில் நடக்கும் காதல் கதைகள். இதில் எந்தக் காதல் கை கூடியது, எது தோல்வியடைந்தது என்பதே ‘C/O காதல்’. காதல் என்பதைத் தாண்டிய பொதுவான விஷயம் ஒன்று இந்த நான்கு காதல்களுக்கு இருக்கிறது. அதுவே படத்தின் முக்கியமான திருப்புமுனை.
ஒரு காதலைத் தவிர மற்ற மூன்று காதல் கதைகளிலும் ஏதோ ஒரு விஷயம் கண்டிப்பாக நம்மைப் பாதிக்கிறது. பள்ளி நாட்கள் காதல் கதையில் சிற்பி கதாபாத்திரத்தின் முடிவும், நடுத்தர வயதுக் காதலில் சலீமா கதாபாத்திரத்தின் முடிவும் அதிர்ச்சியைத் தர, 40 வயதைக் கடந்த இருவர் காதலிக்கும் கதையில் அதன் வெகுளித்தனமும், நடக்கும் சம்பவங்களின் நகைச்சுவையும் ஆச்சரியத்தைத் தருகிறது.
குணசேகரனின் ஒளிப்பதிவு மதுரையை அழகாகவும், யதார்த்தமாகவும் காட்சிப்படுத்தியுள்ளது. ஸ்வீகர் அகஸ்தி இந்த நான்கு கதைகளுக்கும் தன்னால் முடிந்த ஆழத்தைச் சேர்த்திருக்கிறார். ஆந்தாலஜி போல இல்லாமல் அடுத்தடுத்துச் சொல்லப்படும் கதைகளைத் தெளிவாகவும், சுவாரசியமாகவும் அடுக்கியிருக்கிறார் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்.
மதுக் கடையில் வேலை செய்யும் ஒருவனுக்கும், பாலியல் தொழிலாளியாக இருக்கும் பெண்ணுக்கும் இடையே மலரும் காதல் அவ்வளவு சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. தன் காதலிக்காகக் காதலன் எடுத்துக்கொள்ளும் அக்கறை, காதலைச் சொல்லும் விதம், காதலி போடும் நிபந்தனைகள் என அத்தனையும் அழகு. வெற்றியும், மும்தாஜ் சர்காரும் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றனர்.
இந்த நான்கு கதைகளில் பியூனாக இருக்கும் 49 வயது பழனியும், 42 வயது உயரதிகாரி ராதாவுக்கும் இடையேயான காதல் கதைதான் சதமடிக்கிறது. பழனியாக நடித்திருப்பது ‘முதல் மரியாதை’ தீபன். இவ்வளவு வருடங்கள் நடிக்காமல் போனதற்கு மொத்தமாகச் சேர்த்து வைத்து ஈடுகட்டுவது போல நடித்திருக்கிறார். அவரது நடிப்பில், குரலில் இருக்கும் அப்பாவித்தனம், சோனியா கிரியின் கூச்சம் கலந்த உடல் மொழி என இந்தக் கதையின் இயல்புத்தன்மைக்கு வலு சேர்க்கின்றனர். நகைச்சுவையும் கொஞ்சம் கை கொடுக்கிறது.
தெலுங்கில் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்ற ‘கேர் ஆஃப் கன்ச்சரபாலெம்’ படத்தின் ரீமேக். அசலிலிருந்த அந்த ஊரின் வாழ்வியல், மக்கள் ஆகியவை தமிழ் ரீமேக்கில் இருந்தாலும் அதன் அழுத்தம் சுத்தமாக இல்லை. பள்ளிக் காதல் கதையிலும், பதின்ம பருவக் கதையிலும் நடிகர்கள் தேர்வில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
நிஷேஷ், ஸ்வேதா என இரண்டு குழந்தைகளுமே நடிப்பதற்குச் சற்று சிரமப்படுகின்றனர். இன்னொரு பக்கம் பார்கவியாக வரும் ஜாரா மிகையாக நடித்து மனதில் ஒட்ட மறுக்கிறார். நிஷேஷ், ஸ்வேதா கதையை விட நிஷேஷின் அப்பாவுக்கு என்ன ஆனது என்பதில்தான் அதிக அழுத்தம் சேர்கிறது. இந்த இரண்டு கதைகளிலும் கிஷோர் குமார் மற்றும் கார்த்திக் ரத்னம் என இருவரது நடிப்பும் சிறப்பு.
படத்தின் ஓட்டத்தில் நமக்குள் எழும் சந்தேகங்கள், கேள்விகள் என அத்தனையையும் இறுதிக் காட்சியில் ஒரே வசனத்தில் தீர்க்கிறார் இயக்குநர் ஹேமாம்பர் ஜஸ்தி. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியான ஒரு திருப்பம் இது. ஒட்டுமொத்தப் படத்தையும் இந்தத் திருப்பம் தூக்கிப் பிடித்துவிடுவது இந்தக் கதை சொல்லப்பட்ட விதத்தின் சிறப்பு. அசல் கதையை எழுதிய வெங்கடேஷ் மஹாவுக்கும் பாராட்டுகள்.
மதுரை மக்களின் வாழ்வியலைச் சொல்வதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். தேவையில்லாத கானா பாடலைத் தூக்கியெறிந்திருக்கலாம். ஆனால் இப்படியான சின்ன சின்ன குறைகளைத் தாண்டி நேர்த்தியான, இயல்பான ஒரு படைப்பு இந்த ‘C/O காதல்’.