எஸ்.பி.பி. தயாரிப்பில், எஸ்.பி.சரண் இயக்கத்தில் ‘அதிகாரம்’ – புதிய இணைய தொடர்!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2020/01/0a1a-7.jpg)
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ‘கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ்’ நிறுவனம் தேசிய விருது வென்ற ‘ஆரண்யகாண்டம்’ மற்றும் ’நாணயம்’, ’சென்னை 28’, ’திருடன் போலீஸ்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் தற்போது ‘அதிகாரம்’ மூலம் முதன்முறையாக இணையத் தொடர் தயாரிப்பில் தடம் பதிக்கிறது.
இன்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குத்து விளக்கேற்றி துவக்கி வைக்க, இதன் படப்பிடிப்பு இனிதே நடைபெற்று வருகிறது.
பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான எஸ்.பி.சரண் முதன்முறையாக இந்த இணையத் தொடரைத் தயாரித்து, இயக்குகிறார்.
அன்பும் அதிகாரமும் எதிர்மறை விகிதாச்சார இயல்புடையதாக இருக்க, ‘அதிகாரம்’ அரசியலை மையமாகக் கொண்ட ஒரு பரபரப்பான கதைகளத்துடன் தயாராகிறது.
இத்தொடர், அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்ள ஒரு பக்கம் காய்களை நகர்த்திக் கொண்டிருக்க, அவர்களை வீழ்த்தி அதிகாரத்தை அடையத் துடிக்கும் சாதாரண இளைஞன் ஒருவனைப் பற்றிய கதை.
தேசிய அளவில் முதன்முறையாக சமகால அரசியலையும், அதன் போக்கையும் மிகத் தீவிரமாய் பேசப் போகிறது அதிகாரம் என்கிறார் இத்தொடரின் ஆக்கம் எழுத்து மற்றும் வசனகர்த்தாவாகிய கேபிள் சங்கர்.
இத்தொடரில் ’வெள்ளைப்பூக்கள்’ தேவ், ஏ.எல்.அழகப்பன், இளவரசு, ‘பிக்பாஸ்’ புகழ் அபிராமி, ஜான் விஜய், அரவிந்த் ஆகாஷ், வினோதினி வைத்யநாதன், ‘சூது கவ்வும்’ சிவகுமார், கஜராஜ், ராஜேஷ், வின், வினோ ஆகியோர் நடிக்கிறார்கள்.
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பைக் கவனிக்க, இசை தீனா தேவராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கலை இயக்குனராக ரெமியனும், சண்டைப்பயிற்சிக்கு ஸ்டண்ட் செல்வாவும் பொறுப்பேற்று இருக்கிறார்கள்.