ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான. திருமகன் ஈவெரா காலமானதால் காலியான ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில், மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டு உள்ளார். தே.மு.தி.க.வின் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன், சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள்.

இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பாக அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என ஒரு படையே தேர்தல் பணியாற்றியது. அதேபோல் அ.தி.மு.க. சார்பாக முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்களும், கட்சி நிர்வாகிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றினர்.

இன்று (25.02.2023) காலை முதலே இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் ஈடுபட்டனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அனல் பறக்கும் வகையில் கடந்த சில தினங்களாக நடைபெற்ற பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

நாளை மறுநாள் (27.02.2023) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.