சிவகார்த்திகேயன், பி.சி.ஸ்ரீராம் பங்கேற்கும் ‘கேமரா அருங்காட்சியகம்’ திறப்பு விழா!
உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, சென்னை ஸ்னோ கிங்டம் விஜிபி-யில், சர்வதேச அளவில் அரியவகை கேமராக்களின் அருங்காட்சியக திறப்பு விழாவும், கேமராக்களின் வரலாறுகள் குறித்த ஆவண படங்கள் திரையிடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வருகிற 18ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்த அருங்காட்சியகத்தை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் திறந்து வைக்க, ஆவண படங்களை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்.
சென்னையில் மிக பிரபலமான விஜிபி ஸ்னோ கிங்டம் வளாகத்தில், பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் கைவண்ணத்தில், நிரந்தர கேமரா மியூசியம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் உலகின் அதிநீளமான மம்மோத் கேமரா, 11 கிராம் எடையளவே கொண்ட மிகச் சிறிய கேமரா, முதல் 3டி கேமரா, பிஸ்டல் கேமரா, வாக்கிங் ஸ்டிக் கேமரா என பல அரியவகை ஆயிரக்கணக்கான கேமராக்கள் இடம் பெற்றுள்ளன.
இது தவிர அரியவகை புகைப்படங்கள், புகைப்பட கலை தொடர்பான சுவாரசிய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் இங்கு இருக்கும். புகைப்பட கலையையும் அதன் வரலாற்றையும் தெரிந்துக் கொள்ளும் விதமாக 3 ஆவண படங்களும் திரையிடப்பட உள்ளது.
புறா உடலில் கேமராவை பொருத்தி உலகப்போரின்போது பயன்படுத்தியது பற்றியும், சர்வதேச அளவில் துப்பறிவாளர்களால் பயன்படுத்தப்பட்ட மினாக்ஸ் கேமரா பற்றிய படமும், கேமராக்கள் பற்றிய வரலாறு பேசும் படமும் பார்வையாளர்களுக்கு தினமும் திரையிடப்பட உள்ளது.
மேலும் இந்த அருங்காட்சியகத்தின் முகப்பே ஒரு கேமராவின் தோற்றம் போலவும், நுழைவு வாயில் கேமராவின் லென்ஸ் போலவும் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்று.
இரவு பகலாக ஓவியர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தின் தோற்றங்களும், வடிவமைப்புகளும் பிரமாண்டமாக பிரமிப்பை தருகிறது.
19ஆம் நூற்றாண்டு தொடங்கி 21ஆம் நூற்றாண்டு வரையிலான புகைப்பட கலையின் நீண்ட வரலாறை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருப்பது ஆசிய அளவில் வேறு எங்கும் பார்க்க முடியாது என்பது இதன் சிறப்பம்சம்.
உலக புகைப்பட தினத்தில் இந்த அருங்காட்சியகத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் திறந்து வைக்கிறார். கேமரா வரலாறுகள் குறித்த ஆவண குறும்படங்களை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்.
இந்த கேமரா அருங்காட்சியகம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.