“இடைஞ்சல் தர நினைத்தால்…?”: ஆர்.என்.ரவிக்கு எதிராக தனி தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் ஆவேசம்
”ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார். சட்டமன்றத்துக்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர நினைத்தால், அதனை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாகத் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் “எண்ணித் துணிக” என்று நிகழ்வில் கலந்துரையாடினார். அப்போது ஆளுநரின் பணி குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆர்.என்.ரவி பதில் அளித்தார். அதில், சட்டமன்ற அதிகாரம் முதல் ஸ்டெர்லைட் வரை மக்கள் விரோத – தமிழ்நாடு விரோத பல கருத்துகளை அவர் பேசி இருந்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆர்.என்.ரவியை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வரும் 12-ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆர்.என்.ரவியின் செயல்பாடு தொடர்பாக அரசு சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்.என்.ரவிக்கு எதிரான தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,”தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் 2வது முறையாக ஆளுநர் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும். அதை உணர்த்தும் நாளாக இது இருக்கும். தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நண்பராக இருப்பதற்கு தயாராக இல்லை என்று, பதவியேற்ற நாளில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி செய்யும் செயல்கள் வெளிப்படுத்தி வருகிறது.
ஆளுநர் பேசி வந்த கருத்துகளுக்கு பதிலுக்கு பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக மாற்ற விரும்பவில்லை. அதேநேரத்தில் சட்டமன்றத்துக்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர நினைத்தால், அதனை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். நாள்தோறும் ஒரு கூட்டம், நாள்தோறும் ஒரு விமர்சனம் என்ற நிலையில், ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆட்டுக்கு தாடி, நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என அண்ணா கூறிய போதிலும், அதனை கருணாநிதி வழிமொழிந்த போதிலும், அவர்களின் பதவி இருக்கும் வரை அவருக்கான மரியாதை வழங்க அரசு தவறியதில்லை. அரசியல் சட்டத்தின் தந்தை அம்பேத்கர், ஆளுநர் என்பவர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடாதவராக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஆளுநர் திறந்த மனத்துடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல. அரசியல் சட்டம் ஆளுநருக்கு தெரியவில்லை என்று கூறமாட்டேன். ஆனால் அவருக்கு இருக்க வேண்டிய “அரசியல் சட்ட விசுவாசத்தை”, “அரசியல் விசுவாசம்” அப்படியே விழுங்கி விட்டது என்றே அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை, அவரின் செயல்பாடுகளைத் தான் விமர்சிக்கிறோம்.
சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்புடையதாக இல்லை. சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட வேண்டும் என ஆளுநருக்கு, குடியரசுத்தலைவரும், மத்திய அரசும் உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.”
இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்த தீர்மானத்தின் மீது, தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி சட்டன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், மதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமார், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, அவை முன்னவர் துரைமுருகன் உள்ளிடோர் பேசினர். இதனைத் தொடர்ந்து, அரசின் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.