தீராத பழியோடு விடை பெற்ற அடிப்படைவாதி பிரனாப் முகர்ஜி!

தனது அரசியல் வாழ்க்கையின் உச்சத்தைப் பெற்ற பிரனாப் தற்போது விடை பெற்றுள்ளார்.

இந்திராவின் சீடன் என்கிற வகையில் துணிச்சலான முடிவுகளை எடுத்து நாட்டை நல்வழிப் படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டவர், தமது ஜனாதிபதி பதவிக் காலத்தில் நடந்த அத்தனை சீர்கேடுகளையும், எளிய மக்களின் மீதான தாக்குதல்களையும் வேடிக்கை பார்த்த கையாலாகாத மனிதர் போல் நின்றிருந்தார்.

எந்தப் பதவியின் தகுதியும் அதன் பெயரினால் மட்டும்  அலங்கரிக்கப்படுவதில்லை. செயல்பாடுகளினால் மட்டுமே  ஓர் உயர்ந்த பதவி உயர்வும் தாழ்வும் எய்துகிறது. அந்த வகையில் கே ஆர் நாராயணனுக்குப் பிறகு ஜனாதிபதி பதவி உயர்வெய்தவே இல்லை.

மக்களிடையே அரசியல் விழிப்புணர்ச்சியை உருவாக்க அரசியலின் மிக உயர்ந்த ஜனாதிபதிப் பதவியை கே.ஆர். நாராயணன் அவர்களால் மட்டுமே பயன்படுத்த முடிந்தது.

• குஜராத் கலவரத்தின்போது மத்திய அரசோடு நேரடியாகவே அவர் மோதினார்.

• தூக்கு தண்டனை கோப்புகளில் கையெழுத்திடுவதை தவிர்த்தார்.

• கிளிண்டனை நேரடியாகவே எச்சரித்தார்.

• ஜனநாயக நடவடிக்கைகளுக்கும், மக்களுக்கும் எதிரான அரசின் நடவடிக்கைகள் வந்தபோது முதல் ஆளாய் குரல் கொடுத்தார்.

• நீதித்துறையில் பெண்களுக்கும், தலித்துகளுக்கும், மத சிறுபான்மையினருக்கும் பிரதிநிதித்துவம் தராமல் இருப்பதைக் கண்டித்து, நீதிபதி நியமன கோப்புகளில் கையெழுத்திட மறுத்தார். இதன் விளைவாய் உச்ச மற்றும் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் அமர முடிந்தது.

• ஜனாதிபதி பதவி ரப்பர் ஸ்டாம்பு பதவி அல்ல, அதை வைத்து மக்களுக்கு உயர்ந்த தரத்தில் அரசியல் பணியாற்ற முடியும் என்று காட்டினார்.

இப்படி ஏராளமான சாதனைகளை சுட்டிக்காட்ட முடியும்.

ஆனால், அவருக்குப் பின் வந்த கலாம் ஜனாதிபதி பதவியின் அரசியல் உள்ளீட்டை முற்றிலும் ஒழித்துக் கட்டினார். பிரதீபாவோ ஒரு உயர்சாதி நடுத்தர வர்க்கத்து பெண்மணி செய்யும் எல்லா கேட்டையும் செய்து அந்தப் பதவியை வீணடித்தார்.

இந்த இருவரின் வரிசையில் இப்போது பிரனாப்பும் விடை பெற்றார். எல்லா தீங்குகளையும் வேடிக்கை பார்த்த ஓர் அடிப்படைவாதியாக அவர் விளங்கினார் என்பதைத் தவிர வேறு சாதனை ஏதுமில்லை.

வரலாற்றினை மக்கள் எழுதும்போது, உங்களை  மன்னிக்கும்  வாசகங்கள் அங்கே இருக்காது, பிரனாப் அவர்களே…!

GOWTHAMA SANNA