பம்பர் – விமர்சனம்

நடிப்பு: வெற்றி, ஹரீஷ் பெராடி, ஷிவானி நாராயணன், கவிதா பாரதி, ஜி.பி.முத்து, அருவி மதன், ஆதிரா, தங்கதுரை, டிட்டோ வில்சன், சீமா ஜி.நாயர் மற்றும் பலர்

இயக்கம்: எம்.செல்வகுமார்

ஒளிப்பதிவு: வினோத் ரத்தினசாமி

படத்தொகுப்பு: மு.காசி விஸ்வநாதன்

பாடலிசை: கோவிந்த் வசந்தா

பின்னணி இசை: கிருஷ்ணா (மசாலா கஃபே)

தயாரிப்பு: ‘வேதா பிக்சர்ஸ்’ எஸ்.தியாகராஜா & டி.ஆனந்தஜோதி

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

கேரளாவில் லாட்டரிச்சீட்டு விற்று, ஏழ்மை நிலையில் இருந்தாலும் அறத்துடன் வாழும் இஸ்லாமிய முதியவருக்கும், தூத்துக்குடியில் சிறு சிறு குற்றச்செயல்கள் செய்து அறமற்று வாழும் இந்து இளைஞருக்கும் இடையிலான வாழ்க்கைப் பயணமே இப்படத்தின் கதை.

தூத்துக்குடியில் பூதம் (தங்கதுரை) உள்ளிட்ட தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறி, அடிதடி என சிறு சிறு குற்றச்செயல்கள் செய்து வாழ்ந்து வருகிறார் புலிபாண்டி (வெற்றி). அவருக்கு தன் மாமாமகள் ஆனந்தியை (ஷிவானி நாராயணன்) திருமணம் செய்ய ஆசை. ஆனால், அவரது tஹுர்நடத்தைகளே அதற்கு தடையாக இருக்கின்றன.

இந்நிலையில், அந்த ஊருக்கு புதிதாக பொறுப்புக்கு வருகிறார் காவல்துறை அதிகாரி பெஞ்சமின் (அருவி மதன்).  மிகவும் கண்டிப்பான அதிகாரியான அவர் ரவுடிகளையும் கிரிமினல்களையும் வேட்டையாடுகிறார். அவரது கடுமையான நடவடிக்கைக்கு பயந்து, அவசர அவசரமாக தன் நண்பர்களுடன் அய்யப்பனுக்கு மாலை போட்டுக்கொண்டு, சபரிமலைக்குச் செல்கிறார் புலிபாண்டி.

சபரிமலையில் லாட்டரிச் சீட்டு விற்கும் இஸ்லாமியப் பெரியவரான இஸ்மாயிலிடம் (ஹரீஷ் பெராடி) கேரள அரசின் லாட்டரிச் சீட்டு ஒன்றை வாங்குகிறார் புலிபாண்டி. ஆனால் அதை மறதியாக அங்கேயே விட்டுவிட்டு சொந்த ஊருக்கு கிளம்பிப் போய்விட, அது மறுபடியும் இஸ்மாயில் கைக்கு வருகிறது.

குலுக்கலில் புலிப்பாண்டி வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பத்து கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுகிறது. அந்த பரிசுப்பணம் முறைப்படி அந்த சீட்டை வாங்கியவருக்குத் தான் போய் சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இஸ்மாயில், அந்த பரிசு சீட்டுடன் தூத்துக்குடிக்கு கிளம்புகிறார்.

அந்த சீட்டை வாங்கிய இளைஞர் தூத்துக்குடிகாரர் என்பதை தவிர அவரை பற்றி வேறு எந்த விவரமும் இஸ்மாயிலுக்குத் தெரியாது. அவர் புலிபாண்டியை கண்டுபிடித்தாரா? பத்து கோடி ரூபாய் பணம் புலிபாண்டி கைக்கு வந்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘பம்பர்’ படத்தின் மீதிக்கதை.

0a1f

வித்தியாசமான கதைகளை கவனமுடன் தேர்வு செய்து, நடித்து, வெற்றி பெற்று வரும் வெற்றி, இந்த படத்தில் புலிபாண்டி எனும் நாயக கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வெற்றிவாகை சூடியுள்ளார். காவல்துறையை டீல் செய்வது, காதலியிடம் பழகுவது, நண்பர்களிடம் நட்பு பாராட்டுவது என எல்லா இடங்களிலும் யதார்த்தமான நடிப்பில் பிரமாதமாக ஸ்கோர் செய்துள்ளார்.

நாயகனின் மாமாமகள் ஆனந்தியாக வரும் ஷிவானி நாராயணனுக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் அழுத்தமான நடிப்பை வழங்கி மனதில் தங்குகிறார்.

லாட்டரி வியாபாரி இஸ்மாயிலாக வரும் ஹரீஷ் பெராடி, தோற்றத்திலும், நடிப்பிலும் அனைவரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார். தமிழ் படங்களில் அவரை முரட்டு வில்லனாகப் பார்த்து பழகிப்போன கண்களுக்கு, இந்த இஸ்மாயில் ரொம்ப வித்தியாசமாக, நெஞ்சுக்கு நெருக்கமாக திகழ்கிறார். இந்த படத்துக்காக அவருக்கு விருதுகள் கிடைத்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

வெற்றியின் நண்பர் பூதமாக வரும் தங்கதுரை, போலீஸ் ஏட்டு மாடசாமியாக வரும் கவிதா பாரதி, கந்துவட்டிக்கார்ர் துப்பாக்கி பாண்டியனாக வரும் ஜி.பி.முத்து, போலீஸ் அதிகாரி பெஞ்சமினாக வரும் அருவி மதன், நாயகனின் அம்மாவாக வரும் ஆதிரா உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் அனைவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

சாதி, மதம், மொழி, இனம் போன்றவற்றை எல்லாம் கடந்து, நேர்மை தான் உயர்ந்தது என்ற அருமையான கருத்தை உள்ளடக்கிய இப்படத்தை அருமையாக இயக்கியிருக்கிறார்  இயக்குனர் செல்வகுமார். பொருத்தமான நடிப்புக் கலைஞர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து, அவர்களை வேலை வாங்கியிருக்கும் விதமே அவரது வெற்றியை உறுதிப்படுத்தியிருக்கிறது. தெளிந்த நீரோடை போல திரைக்கதை அமைத்து சுவாரஸ்யமாக படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கடலோர தூத்துக்குடியையும், மலைகள் சூழ்ந்த கேரளத்தையும் அழகாக காட்டியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசையும் கதையின் விறுவிறுப்புக்கு உதவியுள்ளது.

‘பம்பர்’ – குடும்பத்துடன் கண்டு களிக்கத் தக்க தரமான படம்!