விஜய்யின் தவெக கொடிக்கு எதிர்ப்பு: தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மனு!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னத்தை நடிகர் விஜய் பயன்படுத்தியிருப்பதற்கு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இதற்கு விஜய் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து கொடியில் உள்ள தங்கள் யானை உருவத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் நேரடி அரசியலில் கால் பதித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்துள்ள அவர் சமீபத்தில் கட்சிக் கொடி மற்றும் கட்சிப் பாடலை அறிமுகம் செய்தார். 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று அறிவித்து கட்சி பணிகளை படிப்படியாக மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி கட்சியின் கொடி வரை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில், கட்சியின் மாநில மாநாடு ஒன்றையும் நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். இந்த நிலையில் விஜயின் கட்சிக் கொடியில் பயன்படுத்தப்பட்டுள்ள யானை, தங்கள் கட்சிக் கொடியின் அடையாளம் என்றும், எனவே அதனை விஜய் தனது கொடியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் அதுபற்றி தமிழக வெற்றிக் கழகம் பதில் எதுவும் கூறாமல் இருந்தது.
இந்த நிலையில், அரசியல் நாகரீகம் இல்லாமலும், சட்ட விரோதமாகவும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை தனது புதிய கட்சி கொடியில் பயன்படுத்தியிருக்கும் நடிகர் விஜய் மீது தக்க நடவடிக்கை எடுத்து குழப்பங்களுக்கு தீர்வு காணும்படி தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மனு அளித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் என்ன முடிவை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மத்தியில் மட்டும் இன்றி அரசியல் வட்டாரத்திலும் ஏற்பட்டுள்ளது.