புரூஸ் லீ – விமர்சனம்
எவரையும் சுண்டி இழுக்கக் கூடிய, காந்த சக்தி வாய்ந்த பெயர் புரூஸ் லீ. இப்பெயரை தலைப்பாகக் கொண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்…
நாயகன் ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்தே பயங்கர பயந்தாங்கொள்ளி. ஆனால், புரூஸ் லீயின் படம் பார்க்கும்போது மட்டும் வீரனாகி விடுகிறார். இதனால் அவரது அம்மா இவருக்கு புரூஸ் லீ என பெயர் வைக்கிறார்.
புரூஸ் லீ என்ற பெயருடன் எவருக்கும் அஞ்சாமல் தைரியமாக சுற்றித் திரியும் ஜி.வி.பிரகாஷ், ஒருநாள் ஒரு ரவுடியிடம் சிக்கி செமத்தையாக அடி வாங்குகிறார். அதன் பிறகு, எந்த பிரச்சனையிலும் அமைதி வழியில் பயணிக்கிறார்.
நாயகி கீர்த்தி கர்பந்தாவும், ஜி.வி.பிரகாஷும் காதலிக்கிறார்கள். ஒருநாள் அமைச்சர் மன்சூர் அலிகானை பிரபல தாதா முனீஸ்காந்த் கொலை செய்ய, அமைச்சரான மன்சூர் அலிகானை கொலை செய்கிறார். அதை ஜி.வி.பிரகாஷ், நாயகி கீர்த்தி கர்பந்தா, ஜி.வி.பிரகாஷின் நண்பர் பாலசரவணன் ஆகிய மூவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்து விடுகிறார்கள்.
இதனால் முனீஸ்காந்த் மூலம் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள் என்பது மீதிக்கதை.
நாயகனாக வரும் ஜி.வி.பிரகாஷ் தனது வழக்கமான நடிப்பை கொடுத்திருக்கிறார். காமெடி என்ற பெயரில் இவர் செய்யும் சேட்டைகள் எப்போதாவது சிரிப்பை வரவழைக்கின்றன. நடிப்பில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் பாஸ்!
அறிமுக நாயகி கீர்த்தி கர்பந்தா மிகவும் அழகாக இருக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருக்கிறார். சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரலாம்
பாலசரவணன் காமெடி கலந்த முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் முழுக்க ஜி.வி.பிரகாஷ் கூடவே வருகிறார். இவர் செய்யும் ஒரு சில காமெடிகளை ரசிக்க முடிகிறது. மொட்டை ராஜேந்திரன் வழக்கமான காமெடியில் ரசிக்க வைக்கிறார்.
சமீபகாலமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் முனீஸ்காந்தை இன்னும் கொஞ்சம் கூடுதலாக வேலை வாங்கியிருக்கலாம். மன்சூர் அலிகான் சிறிது நேரமே வந்தாலும், தனது தனித்துவமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்.
உலகப் புகழ்பெற்ற புரூஸ் லீயின் பெயரை படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கும் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ், சண்டை காட்சியில் போதுமான கவனம் செலுத்த தவறிவிட்டார். அதுபோல் காமெடி படம் என்று சொல்லிவிட்டு, சிரிக்க வைக்க மெனக்கெடாமல் கோட்டை விட்டுவிட்டார்.
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை அருமை. பாடல்களிலும் அவர் அதிக கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது. பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
‘புரூஸ் லீ’ – ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுக்கு பிடிக்கும்!