பாட்டல் ராதா – விமர்சனம்
நடிப்பு: குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான் விஜய், மாறன், பாரி இளவழகன், ஆண்டனி, அபி ராமையா, வசந்த் மாரிமுத்து, ஜெய பெருமாள், ஆறுமுகவேல், ஜே.பி.குமார், மாலதி, அசோக், நவீன், சுஹாசினி, சஞ்சீவ், அனீஷா, சாய் சரண், கருணா பிரசாத், சேகர், செந்தில் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: தினகரன் சிவலிங்கம்
ஒளிப்பதிவு: ரூபேஷ் ஷாஜி
படத்தொகுப்பு: இ.சங்கத்தமிழன்
இசை: ஷான் ரோல்டன்
தயாரிப்பு: பா. இரஞ்சித் & டி.என்.அருண் பாலாஜி
பத்திரிகை தொடர்பு: குணா
மது பாட்டிலை நீங்கள் பிடித்திருக்கும் வரை நீங்கள் குடிப்பழக்கம் உள்ளவர் மட்டுமே. ஆனால், பாட்டில் உங்களைப் பிடித்துக்கொண்டால், அதன்பிறகு நீங்கள் குடியடிமை; குடி நோயாளி. ஒரு குடியடிமை தன் உடல்நலம், பணநலம் ஆகியவற்றை கெடுத்துக்கொள்வது மட்டுமின்றி, தன்னை நம்பி வந்த மனைவி மற்றும் தன்னால் இவ்வுலகுக்குக் கொண்டு வரப்பட்ட குழந்தைகள் ஆகியோரின் மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கையை எப்படி சீரழிக்கிறார் என்பதை கொஞ்சம் காமெடியாகவும், கொஞ்சம் கண் கலங்கும்படியாகவும் சொல்வது தான் ‘பாட்டல் ராதா’ திரைப்படம்.
சென்னையைச் சேர்ந்தவர் பாட்டல் ராதா என்கிற ராதா மணி (குரு சோமசுந்தரம்). புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் டைல்ஸ் ஒட்டும் கூலித் தொழிலாளியாக பணியாற்றும் இவர், தன் மனைவி (சஞ்சனா நடராஜன்) மற்றும் ஒரு மகன், ஒரு மகளுடன் வாழ்ந்து வருகிறார். வீடு, பொது இடம், பணியிடம் என எல்லா இடங்களிலும் மதுவும், மது போதையுமாகவே உலா வருகிறார். மகன் மற்றும் மகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாமலும், குடும்பத்தை சுமுகமாக நடத்திச் செல்ல முடியாமலும் தவிக்கிறார். அவரது தொடர் குடிப்பழக்கத்தால் வேலை, குடும்ப சந்தோஷம், பொருளாதாரம் போன்றவை பாதிப்பிற்கு உள்ளாகின்றன. இவற்றால் பொறுமையிழக்கும் அவரது மனைவி, அவரைப் குடியடிமைகள் மறுவாழ்வு மையத்தில் பிடித்துக் கொடுக்கிறார்.
அசோக் (ஜான் விஜய்) என்பவர் நடத்தும் அந்த குடியடிமைகள் மறுவாழ்வு மையத்திலும் இருக்கப் பிடிக்காமல், அங்கிருந்து திருட்டுத்தனமாக தப்பியோடி வந்துவிடுகிறார். அப்படி வந்த பிறகும் குடிப்பழக்கத்தைத் தொடர்கிறார். இது திருந்தாத ஜென்ம்ம்; இதை திருத்தவே முடியாது என்ற முடிவுக்கு வரும் அவரது மனைவி, தாலியை அறுத்துக் கொடுத்துவிட்டு, மகன் மற்றும் மகளுடன் காணாமல் போய்விடுகிறார். ராதா தன்னந்தனியனாக வாழ இயலாமல் தவிக்கிறார்.
குடிப்பழக்கத்திலிருந்து ராதா மீண்டாரா? தன் மனைவி, மக்களுடன் சேர்ந்தாரா? புது வாழ்க்கை தொடங்கினாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு எமோஷனலாக விடை அளிக்கிறது ‘பாட்டல் ராதா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
பாட்டல் ராதா என்கிற ராதா மணியாக குரு சோமசுந்தரம் நடித்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்பதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். தொடர் போதையால் தள்ளாடும் உடல்மொழி, குடும்பத்தின் மீதான பாசம், கெத்தைக் காட்டச் செய்யும் போலி ரவுடிஸம் எனத் தன் சிறப்பான நடிப்பால் கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார் குரு சோமசுந்தரம்.
பாட்டல் ராதாவின் மனைவியாக சஞ்சனா நடராஜன் நடித்திருக்கிறார். குடும்பத்தையும், பொல்லாத சுற்றத்தையும் சமாளித்து, தன் கணவனை நல்வழிப்படுத்தப் போராடும் பெண் கதாபாத்திரத்திற்கு ரத்தமும் சதையுமாக உயிர்கொடுத்திருக்கிறார் சஞ்சனா நடராஜன். இறுதிக்காட்சியில் மேடையில் பேசும் இடம் க்ளாஸ்!
குடியடிமைகள் மறுவாழ்வு மையத்தின் காப்பாளர் அசோக்காக ஜான் விஜய் நடித்திருக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம். அதன் இயல்பை உணர்ந்து, அதற்கு தன் நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார். இப்படிக்கூட தன்னால் நடிக்க முடியும் என்று நிரூபித்து வியக்க வைத்துள்ளார்.
கிடைக்கும் இடங்களிலெல்லாம் சிரிக்க வைக்கிறார் மாறன். அவர் மறுவாழ்வு மையத்தில் பேசும் பன்ச் வசனங்கள் படத்துக்கு மிகப் பெரிய பலம்.
‘ஜமா’ பாரி இளவழகன், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி உள்ளிட்டோரும் இயல்பாக நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் தினகரன் சிவலிங்கம். குடியைக் கெடுக்கும் குடியின் கோரமுகத்தை இயக்குநர் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். போதைக்கு அடிமையானவர்களைப் புறந்தள்ளாமல், அதை ஒரு நோயாக அணுகி, அவர்களின் குடும்பங்கள் அனுபவிக்கும் புறக்கணிப்புகளையும், இன்னல்களையும் பேசியிருக்கிறார். கதாநாயகன் அறிமுகம், குடும்பச் சூழல் என உண்மைக்கு மிக நெருக்கமான உலகைக் காட்டத் தொடங்கும் படம், மறுவாழ்வு மையத்திற்குள் நுழைந்தவுடன் சுவாரஸ்யத்தோடு கலகலப்பையும் கொண்டு வருகிறது. வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த மனிதர்களைக் கொண்ட மையத்தில் நடக்கும் காட்சிகளும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் படத்தின் மையக்கருவிற்குப் பலம் சேர்க்கின்றன. இறுதிக்காட்சிக்கு முந்தைய எமோஷனல் காட்சிகள் நடிகர்களின் நடிப்பால் க்ளிக் ஆகியிருக்கின்றன.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மனதை ஈர்த்துள்ளன. கதை மற்றும் கதைக்களத்துக்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி மிக நேர்த்தியாகப் படமாக்கியுள்ளார்.
சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்டுள்ள படம்; அதே நேரத்தில் வறட்டுத்தனமாக இல்லாமல், கலகலப்பாகவும், எமோஷனலாகவும் நகர்த்திச் செல்லப்பட்டுள்ள படம்; அனைவரும் பார்த்து ரசிக்கலாம்!
ரேட்டிங்: 3/5.