இந்த தி.மு.க. விளம்பரங்களின் வெற்றி யாதெனில்….

உண்மையாகவே அ.தி.மு.க. எதிர்ப்பு மனநிலையில் தான் இருந்தேன். ஆனால், சில தினங்களாக தினசரி பத்திரிகைகளில் வெளிவரும் தி.மு.க. விளம்பரங்களைப் பார்த்து வெறுத்துப் போயிருக்கிறேன். அம்மையாரின் ஸ்டிக்கர் செயல்பாட்டுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல இந்த விளம்பர வெளியீடு. தினசரி பேப்பர்களில் ஒட்டிய திமுகவின் ஸ்டிக்கர் மாதிரிதான் தெரிகிறது.

அ.தி.மு.க.வின் மோசமான ஆட்சி செயல்பாடும், அம்மா புகழாரமும் மக்களை முகம் சுளிக்க வைத்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. இயல்பாகவே அ.தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் தான் நடுநிலையான மக்கள் இருக்கிறார்கள். ஆனால், அதேநேரம் அ.தி.மு.க.வின் அவலங்களைச் சுட்டிக்காட்டக் கூடிய கடமையைக்கூட மக்கள் இன்னமும் தி.மு.க.வின் கையில் கொடுக்கவில்லை. தி.மு.க. மீதான கோபம் மக்களுக்கு குறையவே இல்லை.

அப்படியிருக்க, மக்களின் மனநிலை அறிந்து, அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்றபடி களத்தில் நிற்பதே தி.மு.க.வை கரை சேர்க்கும். ஆனால், மக்களிடம் இறங்கிவந்து பேசாது, அவர்களின் உணர்வுகளை அறியாது, ஏதோ ஒரு வெளிநாட்டு விளம்பர நிறுவனத்தைப் பிடித்துக்கொண்டு, ஸ்டாலின் அவர்களின் மருமகன் சபரிசன் அவர்களின் திட்டப்படி வெளியாகும் விளம்பரங்கள் மக்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பையே உண்டாக்கி வருகின்றன.

இந்த விளம்பரங்களை முழுப்பக்க அளவுக்கு வெளியிட வைக்க எத்தனை கோடிகளை தி.மு.க. செலவிடும் என்கிற மலைப்பிலேயே மக்கள் இருக்கிறார்கள். ‘இவங்க மட்டும் யோக்கியமா?’ என சும்மா இருந்தவர்களையும் தி.மு.க.வை நோக்கி சொடக்குப் போட்டு பேச வைத்ததுதான் இந்த விளம்பரங்களின் வெற்றி.

சபரிசன் போன்றவர்களுக்கு கட்சியைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ என்ன தெரியும்? ஒரு கிலோ வெங்காயத்தின் விலை என்னவென்று தெரியாத இவர்கள் எல்லாம் வியூகம் வகுத்து தி.மு.க.வை வெற்றி பெற வைத்துவிட முடியுமா?

ஒவ்வொரு வாக்காளனும் மனம் பொறுக்காத அளவுக்கு கடுமையான கோபத்தில் இருக்கிறான். எந்தக் கட்சியையும் குதறுகிற கோபம் அது. அதைப் பக்குவமாக தன் பக்கம் திருப்ப வேண்டிய தி.மு.க., ஏதோ இப்போதே ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போல் கோடிக்கணக்கில் செலவு செய்து விளம்பரங்களை அள்ளிவிடுகிறது. அதுவும் மக்களைக் கோபப்படுத்தும் விதமாக….!

தி.மு.க.வின் முன்னணித தலைவர்கள் எப்படி இந்த கோமாளிக் கூத்துகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? அ.தி.மு.க. வெளியிடும் சாதனை விளம்பரங்களுக்கும் திமுகவின் இந்த விளம்பரங்களுக்கும் என்ன வித்தியாசம்?

சீண்டுபவர்கள் ஜெயித்ததாக தமிழக அரசியலில் சரித்திரம் இல்லை. அ.தி.மு.க. மீதான அதிருப்தியைக்கூட அறுவடை செய்யத் தெரியாத சிறுபிள்ளைத்தனத்துக்கு, இன்னும் ஐந்து வருடங்கள் தி.மு.க. காக்க வேண்டிய நிலை தான் வரும்.

சொந்தக் காசில் சூனியம் வைப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது தான் பார்க்கிறோம், மிஸ்டர் சபரிசன்!

(அரசியல் குறித்த பதிவுகளை சில வரிகளில் மட்டுமே போடுவது என் வழக்கம்; என் தயக்கம். ஆனாலும், என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கலாம் என்கிற அளவுக்கு கடுப்பேத்திட்டாங்க… மை லார்ட்…!)

 – அனு ராதா