ஹைடெக்காக கார் திருடும் நால்வரின் கதை ‘போங்கு’!
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகிய மூவரும் இணைத்து தயாரிக்கும் படம் ‘போங்கு’.
‘சதுரங்க வேட்டை’ வெற்றிப்படத்தில் நடித்த நட்ராஜ் சுப்ரமணியன் (நட்டி) இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ருஹி சிங் நடிக்கிறார். இவர் 2014ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஹிந்தியில் இரண்டு படங்களிலும் மற்றும் சில படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடித்த ‘காலண்டர் கேர்ள்ஸ்’ என்ற படத்தை இயக்கியவர் மதூர் பண்டார்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் அதுல் குல்கர்னி, முண்டாசுப்பட்டி ராம்தாஸ், அர்ஜுன், வில்லன் ஷரத் லோகித்தஷ்வா, ராஜன், பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் தாஜ். இவர் பிரபல கலை இயக்குனர் சாபுசிரிலிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
படம் பற்றி இயக்குனர் தாஜ் கூறுகையில், “இது ஹைடெக்காக கார் திருடும் நால்வரின் கதை. அவர்கள் ஏன் திருடர்கள் ஆனார்கள்? அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? சவால்கள் என்ன? என்பதை சுவாரஸ்யமாகவும், பரபரப்பாகவும் திரைக்கதையில் சொல்லி இருக்கிறோம்.
“படத்தில் ஹீரோ நட்ராஜின் தோற்றம் இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்டைலாக இருக்கும். படத்திற்காக கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி ஒன்றை ஒரு வெட்டவெளிப் பொட்டலில் படமாக்கியுள்ளோம். அங்கு கடுமையான வெயில் மற்றும் புழுதி காற்று அதிகமாக வீசியது. மிகவும் கஷ்டப்பட்டு கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கினோம்.
“இப்படத்தில் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு நடத்த ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமைத் தேடி இந்தியா முழுவதும் அலைந்தோம். கடைசியில் அகமதாபாத்தில் உள்ள ஒரு ஷோரூமில் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தினோம். அந்த கார் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக இருக்கும். படப்பிடிப்பு சென்னை, அகமதாபாத், மதுரை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது” என்றார் இயக்குனர் தாஜ்.
இசை – ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள் – கபிலன், தாமரை, மதன்கார்க்கி
எடிட்டிங் – கோபிகிருஷ்ணா
கலை – ராஜமோகன்
ஸ்டன்ட் – சுப்ரீம் சுந்தர்
நடனம் – கல்யாண் , பாப்பி
தயாரிப்பு மேற்பார்வை – ஏ.பி.ரவி
ஊடகத்தொடர்பு – மௌனம் ரவி