பொம்மை – விமர்சனம்

நடிப்பு: எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி தமிழரசன் மற்றும் பலர்

இயக்கம்: ராதா மோகன்

ஒளிப்பதிவு: ரிச்சர்ட் நாதன்

இசை: யுவன் சங்கர் ராஜா

தயாரிப்பு: “ஏஞ்சல் ஸ்டூடியோஸ்’ வி.மருதுபாண்டியன், டாக்டர் ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர் தீபா, டி.துரை

பத்திரிகை தொடர்பு: சதீஷ் – சதீஷ்குமார் – சிவா (டீம் எய்ம்)

பெரிய துணிக்கடைகளில் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக காட்சிக்கு வைக்கப்படும் அழகான பெண் பொம்மைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அந்த பொம்மைகளுக்கு அழகாய் கண், புருவம், உதடு வரைவது அவரது வேலை.

ஒரு நாள் ஒரு பெண் பொம்மையை தனது இளவயது தோழியாகப் பார்க்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அவரது கண்களுக்கு தனது தோழியாக – உயிருள்ள பிரியா பவானி சங்கராக – தெரியும் அந்த பெண் பொம்மையையே காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். தினம் தினம் அ ந்த பொம்மையுடன் பேசி, சிரித்து, மகிழ்கிறார். அதை யாருக்கும் விற்றுவிடாதபடி கண்ணும் கருத்துமாக பாதுகாக்கிறார்.

ஒரு நாள் அவர் இல்லாத நேரத்தில் அந்த பொம்மையை நிறுவனத்தின் பொறுப்பாளர் விற்பனை செய்துவிடுகிறார். பொம்மையைக் காணாமல் துடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இது தொடர்பாக நடந்த தகராறில் அந்த பொறுப்பாளரை அவர் கொன்றுவிடுகிறார்.

ஒவ்வொரு துணிக்கடையாக தேடி அலைந்து, பெரும்பாடு பட்டு, அந்த பொம்மை இருக்கும் கடையைக் கண்டுபிடித்துவிடுகிறார் எஸ்.ஜே.சூர்யா. அந்த கடையிலேயே வேலையில் சேர்ந்து அந்த பொம்மையோடு பொழுதைக் கழிக்கிறார்.

அவர் செய்த கொலை குறித்து காவல்துறை விசாரணை செய்கிறது. அவர் பிடிபட்டாரா? தண்டிக்கப்பட்டாரா? பொம்மை மீதான அவரது காதல் பிரமை என்ன ஆனது? என்பது ‘பொம்மை’ திரைப்படத்தின் மீதிக்கதை.

மன பேதலிப்புக்கு ஆளாகி, பெண் பொம்மையைக் காதலிக்கும் அருமையான, வித்தியாசமான கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ஒவ்வொரு காட்சியையும் ரசித்து, உள்வாங்கி, சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காவல்துறை அதிகாரியின் முன் அவர் வாக்குமூலம் அளிக்கும் காட்சியில் திரையரங்கமே அப்ளாசில் அதிர்கிறது.

உயிர்பெற்ற பெண் பொம்மையாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், அழகாக இருக்கிறார். அற்புதமாக நடித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவை “ராஜகுமாரா…” என அன்பொழுக அழைத்து அவர் காதலிப்பது ரசிக்கத் தக்கதாக இருக்கிறது.

துணிக்கடையில் பணிபுரியும் ‘சேல்ஸ் கேர்ள்’ ஆகவும், எஸ்.ஜே.சூர்யாவை ஒருதலையாய் காதலிக்கும் பெண்ணாகவும் வரும் சாந்தினி தமிழரசன் தன் பங்குக்கு சிறப்பு சேர்க்கிறார். அவரது அழகும், நடிப்பும், கதாபாத்திரமும் அவர் இன்னும் சில காட்சிகள் கூடுதலாக வந்திருக்கலாம் என்று எண்ண வைக்கின்றன.

மெல்லிய உணர்வுகளை படம் பிடித்துக் காட்டுவதில் நிபுணத்துவம் பெற்றவரான ராதா மோகன், அதை எழுத்திலும், இயக்கத்திலும் இந்தப்படத்திலும் நிரூபித்திருக்கிறார். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, அவற்றை அழகாக வடிவமைத்து, பொருத்தமான நடிப்புக் கலைஞர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து, அவர்களை சரியாக வேலை வாங்கி, தன் கடமையை செவ்வனே செய்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுகள்.

ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் இயல்பாக அமைந்திருக்கின்றன. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அருமை. ரீ-மிக்ஸ் பாடலான ”தெய்வீக ராகம்” இனிமையிலும் இனிமை. பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.

‘பொம்மை’ – சிறந்த பொழுதுபோக்கு!