”நான் பேசும் அரசியல் தான் நான்”: ‘ப்ளூ ஸ்டார்’ சக்சஸ் மீட்டில் இயக்குநர் பா.இரஞ்சித்!

லெமன் லீஃப் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் நீலம் புரொடக்‌ஷன்ஸ்  தயாரிப்பில் வெளியாகிய “ப்ளூ ஸ்டார்” திரைப்படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் கணேஷமூர்த்தி, சவுந்தர்யா, இயக்குநர் பா.இரஞ்சித், நடிகர்கள் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, ப்ருத்வி பாண்டியராஜன், லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி, அருண்  பாலாஜி, இயக்குநர் எஸ்.ஜெயக்குமார், ஒளிப்பதிவாளர் தமிழ் அ. அழகன்,  கலை இயக்குநர் ஜெயரகு, படத்தொகுப்பாளர் ஆர்.கே.செல்வா, வசனகர்த்தா தமிழ் பிரபா,  பாடலாசிரியர் அறிவு,  சண்டைப்பயிற்சி இயக்குநர் STUNNER சாம்,  நடன இயக்குநர் ஸ்ரீக்ரிஷ்,  ஆடை வடிவமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம்,  சவுண்ட் டிசைனர் சுரேன்.ஜி,  விளம்பர வடிவமைப்பாளர் கபிலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

0a1b

நடிகர் ப்ருத்வி பாண்டியராஜன் பேசும்போது,

”இப்படி ஒரு வெற்றிக்காகத்தான் நான் 18 ஆண்டுகளாக காத்துக் கொண்டு  இருந்தேன்… எல்லோரும் என்னை பாண்டியராஜனின் பையன்  என்று சொல்லும்போது ஆரம்பத்தில் சந்தோசமாக  இருந்தது. பின்னர் எனக்கென்று ஒரு அடையாளம் இல்லையே என்று கவலைப்பட்டேன். ஆனால் இன்று “ப்ளூ ஸ்டார்” படத்தைப் பார்த்துவிட்டு, எல்லோரும் என்னை என் பெயரைக் கூட சொல்லிக் கூப்பிடாமல் என் கதாபாத்திரத்தின் பெயரான “சாம், சாம்” என்று சொல்லிக் கூப்பிடும் போது மிகவும் சந்தோசமாகவும் பெருமையாகவும் இருந்தது. இந்த வெற்றியை எனக்குக்  கொடுத்த இயக்குநர் ஜெயக்குமாருக்கும் என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுக்கும் லெமன் லீஃப் புரொடெக்ஷன்ஸ் கணேஷமூர்த்தி மற்றும் சவுந்தர்யா அவர்களுக்கும் நன்றிகள்.

அசோக்செல்வன் ஒரு தன்னலம் அற்ற கதாநாயகன். தான் மட்டும் ஸ்கோர் செய்தால் போதும் என்று நினைக்காமல் தன்னோடு சேர்ந்து நடிப்பவர்களும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நடிகர் எனக்குத் தெரிந்து அசோக் மட்டும் தான். ஆரம்பத்தில் இருந்தே என்னிடம், “இப்படம் கண்டிப்பாக உனக்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும், அவசரப்படாமல் பொறுமையாக இரு..” என்று கூறினான் . அவனுக்கு மீண்டும் நன்றி. இப்படத்தில் நான் இன்று இருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் என் நண்பன் சாந்தனு தான்.  அவன் தான் இப்படத்தின் ஆடிஸன் போய்க் கொண்டிருப்பதை என்னிடம் தெரிவித்தான். அவனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இப்படத்தை வெற்றிப்படமாக்கிய மக்கள், பத்திரிக்கை, ஊடக மற்றும் மீடியா நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்“ என்று பேசினார்.

நடிகர் சாந்தனு பேசும்போது,

”இந்த வெற்றிக்காக நான் 15 ஆண்டுகளாக காத்துக்  கொண்டிருந்தேன். இன்னும் கூட என்னால் இதை நம்பமுடியவில்லை. இப்படி ஒரு நல்ல விசயம் என் வாழ்வில் நடக்கிறதா..? என்னால் நம்பமுடியவில்லை என்று என் மனைவியிடம் நேற்றுகூட பேசிக் கொண்டிருந்தேன்… சக்சஸ் மீட்டில் சந்திப்போம்  என்று பலமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருக்கிறோம். ஆனால் சக்சஸ் மீட் என்பது இதுதான் என்  வாழ்வில் முதல்முறை.

ப்ருத்வி பேசிய அனைத்தும் எனக்கும் பொருந்தும். இப்படத்தின் வெற்றி எப்படிப்பட்ட படத்தை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்தது.  மேலும் என் அப்பா அம்மாவை சந்தோசப்படுத்திப் பார்க்கும் வாய்ப்பை எனக்கு இந்த ப்ளூ ஸ்டார் கொடுத்திருக்கிறது.

ராஜேஷ் என்னும் இந்த கதாபாத்திரம் இன்று இந்த அளவிற்கு பேசப்படுகிறது என்றால் அதற்கு முழு முதற் காரணம் வசனம் எழுதிய எழுத்தாளர் தமிழ் பிரபா மற்றும் இயக்குநர் ஜெயக்குமார் இருவரும் தான். அவர்களுக்கு பெரிய நன்றி.  மிகப்பெரிய வேலையை அவர்கள் இருவரும் செய்து முடித்துவிட்டார்கள். அதைப் பேசி நடித்ததால் தான் இன்று அக்கதாபாத்திரம் கொண்டாடப்படுகிறது. எழுத்தாளர் ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் முதலில் என் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.. இப்பொழுது ப்ளூ ஸ்டார் படத்தின் மூலம் அது மீண்டும் நிருபணமாகி இருக்கிறது.

என் அப்பா, எத்தனையோ நடிகர்களுக்கு நான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்  கொடுத்திருக்கிறேன்… ஆனால் என் மகனுக்கு என்னால் அப்படி ஒரு வெற்றியைக்  கொடுக்க முடியவில்லையே என்று கண்கலங்கி இருக்கிறார்.  ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி அந்தக் கண்ணீரைத் துடைத்திருக்கிறது. அதற்காகவும் இப்படக்குழுவினருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இசையமைப்பாளர், உதவி இயக்குநர்கள், ஓளிப்பதிவாளர் அனைவருக்கும் நன்றி. ஆல்பா பாய்ஸ் கிரிக்கெட் அணியினருக்கும், ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் அணியினருக்கும் நன்றி.  இப்படத்தை வெற்றிப்படமாக்கிய மக்கள், பத்திரிக்கை தொலைக்காட்சி மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றிகள்.

இந்த வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்து என் அப்பா இயக்குநர் கே.பாக்யராஜ் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதை இங்கு வாசிக்க விரும்புகிறேன்” என்று கூறி சாந்தனு அக்கடிதத்தை வாசித்தார்.  அதில் கே.பாக்யராஜ் கிரிக்கெட் வீரராக ஆக வேண்டும் என்று எண்ணிய தன் மகன் சாந்தனுவை, முதன்முறையாக நடிக்க வைத்து நடிப்புக்குள் கொண்டு வந்த கணத்தை நினைவு கூர்ந்திருந்ததோடு, “ப்ளூ  ஸ்டார்” படத்தில் அதே கிரிக்கெட் விளையாடும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வெற்றியை பதிவு செய்திருக்கும் சாந்தனுக்கும் , இந்த வெற்றியை அவருக்குக் கொடுத்த இயக்குநர் ஜெயக்குமார், தயாரிப்பாளர் பா.இரஞ்சித், மற்றும் சாந்தனுவோடு நடித்த சக கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகளைக் கூறி இருந்தார்.

இயக்குநர் பா.இரஞ்சித் பேசும்போது,

0a1c

”எல்லோருக்கும் வணக்கம். ரொம்ப சந்தோஷம். ப்ளூ ஸ்டார் படத்தை வெற்றிப்படமாக அங்கீகரித்த மக்களுக்கு நான் முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்… வசூல் வர்த்தக ரீதியை தாண்டி, மக்கள் மனதில் ஒரு படம் எந்த அளவிற்கு தங்குகிறது, அவர்கள் அதை எப்படி வரவேற்கிறார்கள், ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது மிக முக்கியம் என்று நான் நினைக்கிறேன். படத்தில் இருக்கும் கதாபாத்திரங்களை மக்கள் அணுகும் விதம், அதில் இருக்கும் அரசியலை அவர்கள் புரிந்து கொள்ளும் விதம், இப்படத்தை கொண்டாடும் விதம் சந்தோஷம் அளிக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்கள் ஒரு படத்தில் இருக்கும் பல கதாபாத்திரங்களை கொண்டாடி ஏற்றுக் கொள்வது ப்ளூ ஸ்டார் படத்திற்கு நடந்திருக்கிறது.  ஒரு படத்தை வெற்றிப்படம் என்று அதைத் தயாரித்த தயாரிப்பாளர்கள், அப்படத்தோடு தொடர்புடையவர்கள் கூறலாம். ஆனால் மக்கள் அதைக் கூறுவது ரொம்ப ரொம்ப கடினம். அது ப்ளூ ஸ்டார் படத்திற்கு நடந்திருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. ஜெயக்குமாருக்கும் என் வாழ்த்துக்களையும் நன்றிகளையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

படம் ரீலிசாகி நான்கு நாட்களில் ஒரு பெரிய ஹீரோ அப்படத்தை இரண்டு முறைப் பார்த்துவிட்டு, போன் செய்து நாம் ஒரு படம் பண்ணலாம் என்று ஜெயக்குமாரிடம் பேசியிருக்கிறார். இது எனக்குக் கூட நடந்தது இல்லை.  ஜெயக்குமாருக்கு நடந்திருப்பது எனக்கு சந்தோசம்.

இப்படத்தினைத் தயாரிக்க முன்வந்த லெமன் லீஃப் புரொடெக்ஷன்ஸ்  கணேஷ மூர்த்தி மற்றும் செளந்தரியாவிற்கு ரொம்ப ரொம்ப நன்றி.  ஏனென்றால் நான் அடிக்கடி சொல்வேன். நம்மை நம்புபவர்கள் தான் நம்மிடம் வருவார்கள்.  ஏனென்றால் நாம் பேசும் அரசியல் அப்படி. என்னைப் பார்ப்பவர்கள் என்னை வெறும் இரஞ்சித் ஆகப் பார்க்க மாட்டார்கள். நான் பேசும் அரசியலோடு தான் என்னைப் பார்ப்பார்கள். என்னை Extremist ஆகப் பார்ப்பார்கள்.  அடையாள அரசியல் செய்வதாகக் கூறுவார்கள். அவரது சாதியைச் சேர்ந்த ஆட்களுடன் தான் இரஞ்சித் வேலை செய்வார் என்றெல்லாம் என்னைக் குறித்துப் பல கதைகள் பேசப்பட்டு வருகிறது.  இதையெல்லாம் நான் நம்புவது இல்லை. ஆனால் நான் எனக்கு என்ன பிடித்திருக்கிறதோ, எனக்கு என்ன தேவையோ அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய உழைப்பையும், நான் பேசும் அரசியலையும் மற்ற எல்லோரையும் விட நான் முழுமையாக நம்புகிறேன்.  நான் பேசும் அரசியல் தான் நான்.

இந்த அரசியலும் நான் நம்புகிற தத்துவமும் என்னை சரியாக வழிநடத்தும் என்று நம்புகிறேன்.. யாரைத் தேடியும் நான் சென்றதே இல்லை.  நான் பேசுகின்ற அரசியல் நிறைய பேரை என்னிடம் அழைத்து வந்திருக்கிறது. என்னையும் நான் பேசும் அரசியலையும் நம்புகிற ஒருவர் மட்டும் தான் என்னுடன் சேர்ந்து பணியாற்ற முடியும்…  பிற ஆட்கள் என்னுடன் வேலை செய்ய முடியாது. ஏனென்றால் நான் வெளிப்படையாக இருக்கிறேன். அதே வெளிப்படைத் தன்மையுடன் என் அரசியலைப் புரிந்துகொண்டு என்னுடன் பயணிப்பவர்கள் தான் இந்த மேடையில் இருப்பவர்கள்.  இவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். தயாரிப்பாளர்கள் கணேஷ மூர்த்தி, சவுந்தர்யா இருவரும் வேறொரு நிலப்பரப்பில் இருந்து வேறொரு கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களுடன் வந்தவர்கள். ஆனால் நாம் பேசும் அரசியலை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அது சரியாக இருக்கும் என்று நம்புகிறார்கள். அதுதான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தயாரித்து வரும் பிற படங்களும் வெற்றிபெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சக்திவேலன் பிலிம் பேக்டரியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பல வருடங்களாக பேசிக் கொண்டிருந்தோம். இப்படத்தைப் பார்க்காமலே  இப்படத்தில் சேர்ந்து பணியாற்றுவோம் என்று நம்பிக்கையுடன் வந்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

சாந்தனு, ப்ருத்வி இருவரும் பேசியது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. இந்த மேடை அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது. நாம் பேசும் அரசியலுக்காக நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதற்காக மக்கள் வெற்றியைக் கொடுத்துவிட மாட்டார்கள்.  நான் செய்யும் வேலையின் மதிப்பை அங்கீகரித்துதான் மக்கள் அந்த வெற்றியைக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.  மக்கள், பத்திரிகை, ஊடகம் அனைவரும் இந்த வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள்.

சென்சாரில் இப்படத்திற்கு பிரச்சனை இருக்காது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் இப்படம் வெளியாகக் கூடாது என்பது போன்ற கருத்து வெளியானது எனக்கு ஆச்சரியம் அளித்தது.  ஒருவர் மிகக் கடுமையாக படத்தை எதிர்த்தார் என்றார்கள். மூர்த்தி அண்ணனின் படம் இருப்பதை காரணமாக சொன்னார்கள். அவரை ரவுடி என்றார்கள்.  அவர் எங்களைப் படிக்க வைத்தவர்,  நிறைய பேர் எங்கள் ஊரில் படித்துக்  கொண்டிருப்பதற்கு அவர்தான் காரணம். அவர் பெரிய தலைவர், அவரை எப்படி நீங்கள் ரவுடி என்று சொல்லலாம் என்று கேட்டேன்..  பின்னர் ரிவைசிங் கமிட்டிக்கு திரும்பவும் அனுப்பினோம்…  சில கதாபாத்திரங்களின் பெயரையும், எதிர் கிரிக்கெட் அணியின் பெயரையும் மாற்றச் சொன்னார்கள்.  அதற்குப் பிறகுதான் சென்சார் சான்றிதழ் கொடுத்தார்கள்.

ஒரு படம் ஒற்றுமையைப் பேசுகிறது. ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. வேற்றுமைகளுக்கு எதிராக எல்லோரும் ஒன்று கூட வேண்டும் என்று சொல்லுகிறது..  இதை தடை செய்ய வேண்டும் என்று சொல்லும் நபர்கள் சென்சாரில் இருக்கிறார்கள். இவர்களை மீறித்தான் இப்படம் இப்போது வெளியாகி இருக்கிறது..

படத்தில் எனக்கு எப்போதும் இரண்டு மூன்று காட்சிகள் தான் திருப்தி கொடுக்கும். ப்ளூ  ஸ்டார் படத்தில் இரஞ்சித் தன் தாயை பேர் சொல்லி அழைத்த தருணத்தை சொல்லி கண்கலங்கும் இடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கண்கலங்கச் செய்தது.

அது போல் சுசீலா என்று பேர் சொல்லிக் கூப்பிட்ட ராஜேஷ், அடுத்து மனம் திருந்தி வரும்போது அம்மா என்று அழைப்பான். அவர்களும் ஒரு தாய் போல் வாஞ்சையுடன் அவனிடம் பேசுவார்கள். அது தான் எங்கள் அம்மா.. ஜெயக்குமாரின் அம்மா… அதுதான் ப்ளூ ஸ்டார்..

ப்ளூ ஸ்டார் பேசுவது பொதுவில் பங்கு கோருதல் தான்…  வேறுபாடுகள் அற்ற இடத்தில் நாம் வாழணும்… உங்கள் கோவில் தான் எங்கள் கோவில். உங்கள் தெய்வம் தான் எங்கள் தெய்வம். வாங்க, நாமெல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும், என்பது தான் இப்படம் பேசுவது.  அம்மாற்றத்தை விரும்புகிற மனிதர்கள் நாங்கள். இப்பிரச்சனை இப்போதும் இருப்பதால் தான் நாங்கள் பேசுகிறோம்…

இதைப் பேசியதாலே இப்படம் வெற்றியடையவில்லை. அதை மீறி படத்தின்  செய்நேர்த்தி, அந்த தத்துவத்தை சரியான மொழியில் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதனால் தான் இப்படம் வெற்றி பெற்றிருக்கிறது.

ஒரே சிந்தனை அரசியல் கொண்ட நபர்களைக் கூட இரஞ்சித் எதிர் திசையில் நிறுத்துவார். ஆனால் இயக்குநர் ஜெயக்குமார் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறுகிறார். அவருடைய அரசியல் சிறப்பானது என்று கூட ”ப்ளூ ஸ்டார்” படம் குறித்து சிலர் பேசியதையும் எழுதியதையும் கவனித்தேன்.. அதற்காகவும் ஜெயக்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்…..  நாங்கள் ஒரே விசயத்திற்காகப் போராடினாலும் என் மொழி வேறு; ஜெயக்குமாரின் மொழி வேறு..

இப்படத்தின் வெற்றி ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் வெற்றி.  அந்த வெற்றியைக்  கொடுத்த மக்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. ஜெய்பீம்” என்று பேசினார்.