“நான் உண்மையான இந்தியன் தான்! இரத்த பரிசோதனையில் தெரிந்தது!!”
இன்று காலை ரத்த பரிசோதனை நிலையம் சென்று, “நான் உண்மையான இந்தியனா?” என்று பரிசோதிக்கக் கேட்டேன்.
ஏற இறங்க பார்த்த பரிசோதகர், செருப்பை அகற்றிவிட்டு உள்ளே வரப் பணிந்தார்.
பின்னர் என்னை அங்கிருந்த இந்திய நாற்காலியில் (அதை “பிளாஸ்டிக் சேர்” என தேசதுரோகிகள் அழைப்பர்) அமர வைத்து, வந்தேமாதரம் பாடலை ஒலிக்க விட்டு, “யார் எழுதியது?” என்றார் .
எழுந்து நின்று, “ஏஆர்.ரஹ்மான்” என்றேன்.
அடுத்து, டோனி சிக்சர் அடிக்கும் காட்சியை ஓட விட்டு, அமைதியாக என்னைப் பார்த்தார். என்னால் தான் என் தேசப்பற்றை அடக்க முடியவில்லை. மறுபடியும் எழுந்து நின்று, “பாரத் மாதா கி ஜே” என கத்தினேன்.
பிறகு அவர், “உங்களுக்கு சுகர் இருக்கா? BP இருக்கா? கொலஸ்ட்ரால் இருக்கா? கடன் இருக்கா? மானம், ஈனம், சூடு, சொரணை எதாவது இருக்கா?” என்று வெறி பிடித்தாற்போல் கேட்டார்.
“அதெல்லாம் தெரியாது. என்னிடம் மோடிஜி அளித்த ஆதார் அட்டை இருக்கிறது, ஐயா” என்றேன்.
“வாழ்த்துக்கள் ஜி! இன்றிலிருந்து நீங்கள் உண்மையான இந்தியன்!”
எல்லோரும் கை தட்டினார்கள்.
“ஃபீஸ் எவ்வளவுங்க?” – பெருமிதத்துடன் கேட்டேன்.
“ஏற்கனவே 15 லட்சம் உங்களுக்காக கட்டப்பட்டு விட்டது” என்று புன்னகைத்தனர்.
வெளியே வந்தபோது இந்திய வெயில் அடித்துக்கொண்டிருந்தது .நான் இந்திய துண்டை எடுத்து தலையில் போட்டுக் கொண்டேன்…!
(படித்ததில் பிடித்தது)