பிளட் மணி – விமர்சனம்
நடிப்பு: பிரியா பவானி சங்கர், சிரிஷ், கிஷோர், ஸ்ரீலேகா ராஜேந்திரன்
இயக்கம்: சர்ஜூன்
தயாரிப்பு: இர்ஃபான் மாலிக்
வெளியீடு: ஜீ 5 ஓ.டி.டி தளம்
மரண தண்டனை விதிக்கப்பட்டு, அந்த மரண தண்டனையை நிறைவேற்ற சிறைத்துறை தயாரான நிலையில், மரண தண்டனைக்கு எதிரான மனித உரிமை ஆர்வலர்கள் மேற்கொண்ட சீரிய முயற்சிகளால் அந்த தண்டனை ரத்து செய்யப்பட்டு உயிர் பிழைத்த நிஜ அப்பாவித் தமிழர்களை உள்ளடக்கியது சமீபத்திய தமிழ்நாட்டு வரலாறு. அது போன்றதொரு உருக்கமும், பதைபதைப்பும் மிகுந்த கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது ‘பிளட் மணி’ திரைப்படம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிஷோரும், அவரது தம்பியும் குவைத்தில் வேலை பார்க்கிறார்கள். அங்கே பணிபுரியும் தமிழீழத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தமிழ்ப்பெண் ஒருவரின் உயிரிழப்புக்கு கிஷோரும், அவரது தம்பியும் தான் காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது என்ற தகவல் அறிந்து, தமிழ்நாட்டிலுள்ள கிஷோரின் தாய் ஸ்ரீலேகா ராஜேந்திரனும், கிஷோரின் மகளும் துடிதுடித்துப்போகிறார்கள். இது குறித்து ஒரு வீடியோவில் கண்ணீரும் கம்பலையுமாய் உருக்கமாகப் பேசி, அதை யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்கிறார்கள்.
இணையத்தில் இந்த வீடியோவைப் பார்க்கும் தமிழ் செய்திச்சேனல் பத்திரிகையாளரான பிரியா பவானி சங்கர் இந்த விவகாரத்தை கையிலெடுத்து கடுமையாக களமாடுகிறார். தூக்கில் தொங்கவிடப்பட இன்னும் 36 மணி நேரமே இருக்கிறது என்ற நிலையில் அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் என்ன? எதிர்கொள்ளும் தடங்கல்கள் என்ன? அவரது முயற்சிகளுக்கு பலன் கிடைத்ததா? கிஷோரும், அவரது தம்பியும் தூக்குக்கயிறிலிருந்து தப்பினார்களா? என்பது மீதிக்கதை.
கொலை செய்யப்பட்ட ஒருவரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை கொலையாளி கொடுத்து விட்டால், அதை பெற்றுக்கொண்ட குடும்பம் மன்னித்துவிட்டதாக முறைப்படி எழுதிக் கொடுத்துவிட்டால், கொலையாளி மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுவார் என்பது குவைத் நாட்டு நடைமுறை. இவ்விதம் கைமாறும் பணத்துக்கு ‘பிளட் மணி’ என்று பெயர். இதை அடிப்படையாக வைத்து பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத புதுமையான கதையை கட்டியெழுப்பி, அதை சிறப்பாக படமாக்கியிருக்கும் இயக்குனர் சர்ஜூன் பாராட்டுக்கு உரியவர்.
மரண தண்டனைக் கைதிகள் குவைத்தில் இருக்கிறார்கள்; அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என முயலுபவர்களும், கதறுபவர்களும் இந்தியாவில் – தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். விடுவிக்கத் தேவையான கடிதம் கொடுக்க வேண்டியவர்களோ ரத்தபூமியாய் சிதைந்துபோன தமிழீழத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறார்கள். கைவசம் இருப்பது 36 மணி நேரம் மட்டுமே. இத்தனை அகண்ட கதைக்களத்தில் சிக்கலோ, குழப்பமோ சிறிதும் இல்லாமல், அத்தனை பதைபதைப்பையும் பார்வையாளர்களுக்குள் சுலபமாக கடத்தியிருக்கும் இயக்குனர் சர்ஜூனுக்கு தமிழ்த்திரையுலகில் நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கிறது.
நடிப்புக் கலைஞர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் இயக்குனருக்கு பக்கபலமாக நின்று பிரமாதமாக ஒத்துழைப்பு நல்கியிருக்கிறார்கள்.
36 மணி நேரத்தில் நிகழும் சம்பவங்களாலான ‘பிளட் மணி’ படம் ஓடும் நேரம் 90 நிமிடங்கள் தான்; என்றாலும் – அந்த 90 நிமிடங்களும் திக் திக் திக் 90 நிமிடங்கள்!