கருப்பு பண விவகாரம்: “ரூ.150 டிக்கெட்டை ரூ.2 ஆயிரத்துக்கு விற்று சம்பாதித்தவர் ரஜினி!” – அமீர்
சென்னை காமராஜர் அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோருடன் திரைப்பட இயக்குனர் அமீரும் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் அமீர் பேசும்போது நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக சாடினார். ரூபாய் நோட்டு செல்லாது என்ற நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு ரஜினி ஆதரவு அளித்தத்தை குறிப்பிட்டு, பல கேள்விகளை எழுப்பினார்.
“இந்த நாட்டில் எத்தனையோ அக்கிரமங்கள் நடந்திருக்கும்போது, எதற்குமே வாய் திறக்காத ரஜினிகாந்த், ரூபாய் நோட்டு விவகாரத்துக்கு மட்டும் வாய் திறக்க வேண்டிய அவசியம் என்ன? காரணம் நீண்ட கால கள்ள நட்பு. “புதிய இந்தியா பிறந்துவிட்டது” எனச் சொல்கிறார்.
புதிய இந்தியா பிறந்துவிட்டது என்று சொல்கிறீர்களே, பழைய இந்தியாவில் ‘கபாலி’ என்ற ஒரு படம் வெளியானதே, அதற்கு திரையரங்க டிக்கெட் விலை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அரசு நிர்ணயித்த விலையில் டிக்கெட் விற்பனை செய்தார்களா? உங்களுடைய சம்பளம் என்ன? அந்த படத்தின் மொத்த வியாபாரம் என்ன? அத்தனையும் கணக்கில் வந்திருக்கிறது என யாராவது காட்ட முடியுமா?
இப்படி இருக்கும்போது கறுப்புப் பணத்தின் அளவு என்பது என்ன இங்கே? எதை வைத்து முடிவு செய்கிறீர்கள்? 150 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்று சம்பாதிக்கக் கூடிய ரஜினி, கறுப்புப் பணத்தை ஒழிக்க ஆதரவு கொடுக்கிறார் என்று சொன்னால் என்ன அநியாயம் இது” என்று அமீர் குறிப்பிட்டார்.
‘கபாலி’க்கு முன்பாக ரஜினி நடிப்பில் வெளியான ‘லிங்கா’ தலைப்பை வழங்கியவர் இயக்குநர் அமீர். அப்போது அதற்கு படக்குழு சார்பில் நன்றி தெரிவித்தார்கள். மேலும், அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியை மிகவும் புகழ்ந்து பேசினார் அமீர் என்பது நினைவுகூரத்தக்கது.