எந்த கட்சியையும் சேராத சுயேச்சையான பாஜக எதிர்ப்பு அணி பாஜக.வை தோற்கடிக்கும்!

ஆளும் பாஜகவை எதிர்க்கும் கட்சிகளுக்கு ஏராளமான அடைமொழிகளைக் கொடுக்கலாம். ‘ஊழல்’, ‘முறைவாசல்’, ‘பலவீனம்’, ‘துணிச்சலற்ற’, ‘சுவாரசியமற்ற’, ‘உயிரற்ற’, ‘சோம்பல் மிகுந்த’, ‘திறமையற்ற’ – எதிர்க்கட்சி என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பட்டப்பெயர் சூட்டிவிடலாம். கடைசியாகச் சொன்ன இரு அம்சங்கள், கடந்த சில வாரங்களில் அதிகமாகவே வெளிப்பட்டன.

மத்திய பிரதேச மாநிலத்தின் மந்த்சவுர் மாவட்டத்தில் கொள்முதல் விலையை அதிகரிக்கச் சொல்லிப் போராட்டம் நடத்திய விவசாயிகளை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ராகுல் காந்தி அங்கு சென்றார். மிகவும் ‘சோம்பேறியான’ தலைவராக இருந்தால்கூட அங்கேயே முகாமிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருப்பார்.

மிகப்பெரிய ஆளுமை

தவறு செய்த அதிகாரிகளை மத்திய பிரதேச அரசு தண்டிக்காதவரை – இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்குக் கணிசமான இழப்பீடு வழங்காதவரை அந்த இடத்தை விட்டு அகன்றிருக்க மாட்டார். விவசாயிகளின் துயர்களையும் பிற நடவடிக்கைகளை உடனே எடுக்க வைத்திருப்பார். ராகுல் காந்தி மந்த்சவுர் சென்றார். இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். டெல்லிக்குத் திரும்பி உடனடியாக விடுமுறையில் ஐரோப்பா சென்றுவிட்டார்.

அடுத்ததாக, ‘எதைச் செய்வதற்கும் லாயக்கற்ற’ எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களின் சார்பாகப் போட்டியிடக்கூடிய பொது வேட்பாளரை அடையாளம் காண்பதிலும் அவரை அறிவிப்பதிலும் தேவையற்ற காலதாமதத்தை மேற்கொண்டன. மிகச் சிறந்த படிப்பாளியும் ராஜீயத் துறையில் சேவையாற்றியவருமான கோபால கிருஷ்ண காந்தி உட்பட பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. எந்த விஷயத்திலும் இணங்கிச் செல்ல மறுக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலருமான சீதாராம் யெச்சூரியும்கூட ஏற்கும் அளவுக்கு கோபால கிருஷ்ண காந்தி ஆளுமை மிக்கவர்.

சரிபாதி வாய்ப்பு

எதிர்க்கட்சிகளிலேயே மிகப் பெரியதான காங்கிரஸ் கட்சி கோபால கிருஷ்ண காந்தியின் பெயரை உடனடியாக ஏற்று, அவர்தான் வேட்பாளர் என்று முதலில் அறிவித்திருக்குமானால், ஆளும் பாஜகவே இன்னொருவர் பெயரைக் கூற முடியாமல் பின்வாங்கியிருக்கும். தங்களுக்கிருக்கும் வாக்கு வலிமை காரணமாக பாஜக ஒரு வேட்பாளரை நிறுத்தி, அவர் வெற்றி பெறுவது சாத்தியம்தான் என்றாலும் போட்டி கடுமையாகியிருக்கும். இந்தத் தேர்தல் தொடர்பான விவாதம் 2019 மக்களவை பொதுத் தேர்தலுக்கு ஒரு முன்னோடியாக அமைந்திருக்கும்.

காங்கிரஸ் கட்சியின் செயலற்ற போக்கும் மெளனமும் மோடி – ஷா கூட்டணி தங்களுடைய வேட்பாளரை அறிவிக்கவும், விவாதங்களைத் தங்களுக்கு ஆதரவாகத் திருப்பவும் வழிவகுத்துவிட்டன. இனி வரும் ஆண்டுகளில் பாஜகவுக்குப் பெரிய சவாலாக உருவெடுப்பது என்பது நம்முடைய எதிர்க்கட்சிகளின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது அத்தனை எளிதாகத் தெரியவில்லை.

இதே கதி தொடர்ந்தால், அடுத்த மக்களவைத் தேர்தலையும் பாஜகதான் அறுதிப் பெரும்பான்மையுடன் வெல்லும் என்று சொல்லத் தோன்றுகிறது. வடக்கு, மேற்கு இந்தியாவில் பெரிய மாநிலங்களை பாஜக ஆள்கிறது. கிழக்கிலும் தெற்கிலும்தான் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அசாமில் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக, அடுத்து ஒடிஷாவையும் கைப்பற்றக் கூடும். கர்நாடகத்தைப் பொறுத்தவரை 2018 சட்டப் பேரவைப் பொதுத்தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வர சரிபாதி வாய்ப்பு உள்ளது.

தேர்தல் கணக்குகள்

தேசிய தேர்தல் களத்தில் பாஜகவே ஆதிக்கம் செலுத்துகிறது. அது மேலும் வளரக்கூடும். அடுத்த பத்தாண்டுகளில் அதன் ஆட்சி நீடித்தால் இந்திய சமூகத்தையும், அரசியலையும் தான் விரும்பும் பாணியில் வார்க்க அது முயற்சி மேற்கொள்ளும். பாஜகவை இன்றைய நிலைக்கு உயர்த்திய பிரதமர் மோடி, தலைவர் அமித் ஷா தொடர்ந்து முன்னணியில் இருப்பார்கள். இதெல்லாம் தேர்தல் கணக்குகள். ஆனால், இதனால் ஜனநாயகத்துக்கும் நாட்டுக்கும் ஏற்படக் கூடிய நலன்கள் என்ன?

தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பதில் இருவருக்கும் உள்ள அக்கறை, ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதில் கிடையாது. இதை குஜராத்திலும் பிறகு தேசிய அளவிலும் நிரூபித்திருக்கின்றனர். சட்டமன்ற, நாடாளுமன்ற அமைப்புகள் மீதோ செய்தி ஊடகங்கள் மீதோ அவர்களுக்குப் பெரிய மதிப்பு ஏதும் கிடையாது.

இவ்விரு அமைப்புகளும்தான் அரசுகளையும் அரசியல்வாதிகளையும் தாங்கள் செய்யும் செயல்களுக்குப் பொறுப்பேற்க வைப்பன. நாடாளுமன்றத்தை உரிய வகையில் மதிக்கத்தவறும் மோடியும் ஷாவும் இந்திய ஜனநாயகத்துக்கு அணிகலன்களாகத் திகழும் இதர அமைப்புகளின் மதிப்புகளையும் குலைக்கின்றனர். நீதித் துறை மட்டுமல்ல; ராணுவமும் அதில் அடக்கம். ஆர்பிஐ (இந்திய ரிசர்வ் வங்கி), சிபிஐ போன்றவற்றைத் தங்களுடைய கட்சியின் கையடக்க ஆயுதங்களாக மாற்ற முயல்கின்றனர்.

ஆனால், ஒன்று நிச்சயம்..

ஜனநாயகம், ஜனநாயக நடைமுறை பற்றிய புரிதலையே பலவீனமானதாக்கிவிட்டனர் மோடி-ஷா கூட்டணி. குஜராத் கலவரத்துக்குப் பிறகு மோடி மாறிவிட்டார் என்று கூறுகிறவர்கள், பாஜக ஆளும் மாநிலங்களில் மாடுகளை விலைக்கு வாங்கி கறவைக்காக ஓட்டிச் சென்றாலும்கூட முஸ்லிம்கள் தடுத்து அடித்துக் கொல்லப்படுவது குறித்து அவர் பெரிதும் மெளனம் சாதிப்பதைக் கவனிக்க வேண்டும்.

ஆனால், ஒன்று நிச்சயம்.. செய்தி ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் பாஜக எவ்வளவுதான் நேரம், உழைப்பு, பணம் ஆகியவற்றைச் செலவிட்டாலும், சுயேச்சையான சிந்தனைகளையும் அறிவுபூர்வமான விவாதங்களையும் கட்டுப்படுத்த முடியாது. கோடிக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாக இந்துக்கள் தங்கள் நாடு ‘இந்து பாகிஸ்தான்’ ஆக உருவெடுத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர். எதைச் சாப்பிட வேண்டும், எப்படி உடை உடுத்த வேண்டும், யாரை நேசிக்க வேண்டும், யாரை வெறுக்க வேண்டும் என்றெல்லாம் கூறப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.

உண்மையான எதிர்க்கட்சிகள்

எழுபதாண்டு கால சுதந்திர வாழ்க்கை, பெரும்பான்மையினவாதத்தையும் எதேச்சாதிகாரத்தையும் எதிர்க்க வேண்டும் என்ற உணர்வை உயிரணுவிலேயே ஊட்டியிருக்கிறது. இவ்வாறாக எந்தக் கட்சியையும் சேராத, சுயேச்சையான, பாஜக எதிர்ப்பணி வடிவம் பெற்று ஒரு கட்சியாகவோ பல கட்சிகளாகவோ வடிவெடுக்கும்போது 2024 மக்களவைப் பொதுத்தேர்தலில் பாஜகவை நிச்சயம் தோல்வி அடைய வைக்கும். ஜனநாயகம் என்பது ஒரு வாழ்க்கைமுறை, அறங்கள் சார்ந்தது, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தலின்போது மட்டும் என்றில்லாமல் அன்றாடம் கடைப்பிடிக்கப்பட வேண்டியது.

ஏராளமானோருக்குள்ளும் இந்த உணர்வு உண்டு. அதனால்தான் ஒரே கட்சி மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றினாலும்கூட அதன் கொள்கைகளையும் அரசியல் தலைவர்களையும் காட்டமாக விமர்சிக்கும் மரபு தொடர்கிறது. மோடி – அமித் ஷா ஜோடியால் சோனியா, ராகுல் போன்றோரை வேண்டுமானால் வெற்றிகொள்ள முடியும்.

நம்முடைய குடியரசுக்கு ஜனநாயகத் தன்மையையும் பன்மைத்துவக் களத்தையும் அளித்த நேரு, அம்பேத்கர் போன்றோர் விட்டுச்சென்ற பாரம்பரியத்தை வெற்றிகொள்ள முடியாது. சுயேச்சையான சிந்தனையும் சுதந்திர உணர்வும் மிக்க இந்தியர்கள் தொடர்ந்து ஆட்சியாளர்களை விமர்சிப்பார்கள், கேள்வி கேட்பார்கள், கண்டிப்பார்கள், தவறுகளுக்குப் பொறுப்பேற்கச் செய்வார்கள். அவர்களே மோடி-ஷாவுக்கு உண்மையான எதிர்க்கட்சிகள்!

ராமச்சந்திர குஹா

தமிழில்: சாரி

(Tamil.thehindu.com)