தற்கொலையை “கொலை”யாக ஜோடித்து மத கலவரத்தை தூண்ட முயன்ற 2 பாஜக.வினர் கைது!

திருப்பூரில் பாஜக பிரமுகர் எஸ்.பி.மாரிமுத்து கடந்த 27ம் தேதி அதிகாலை மாட்டு தொழுவத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரது உடல் அருகே மோடியின் படத்துக்கு செருப்பு மாலை போட்டும், தேசியக் கொடி தலைகீழாக பறக்க விடப்பட்டும் இருந்தது. மேலும் பி.ஜே.பி. மற்றும் இந்து முன்னணி கொடியுடன் கறுப்புக் கொடி ஒன்று ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. TPR12345 என எழுதப்பட்டு, அதில் 3 என்ற எண் அடித்து விடப்பட்டிருந்தது. இதனால் திருப்பூரில் பதற்றமான சூழல் உருவானது. பி.ஜே.பி. நிர்வாகி மர்ம சாவு, மோடி படத்துக்கு செருப்பு மாலை, தேசியக்கொடி தலைகீழாக பறக்கவிடப்பட்டது போன்றவற்றால் பெரும் பதற்றம் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

உடனடியாக திருப்பூர் வந்த தமிழிசை சவுந்திரராஜன், “பி.ஜே.பி.திருப்பூர் வடக்கு மாவட்டத் துணைத்தலைவர் மாரிமுத்து மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளார். இதில் சமூக விரோதிகள் ஈடுபட்டிருக்கலாம். தமிழகத்தில் பி.ஜே.பி. நிர்வாகிகள் கொல்லப்படுவது தொடர்கிறது. சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதை தடுக்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார். இதனை பயன்படுத்தி திருப்பூரில் பாஜக கடையடைப்பு எனவும் அறிவித்தது. கடைகளையும் அடைக்கச் செய்தனர்.

0இதற்கிடையே, மாரிமுத்துவின் உடலை பரிசோதனை செய்ய திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோவையை சேர்ந்த மருத்துவ குழுவினர் உடலை பரிசோதனை செய்தனர். இதை வீடியோ பதிவாகவும் எடுக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனால் மாரிமுத்துவின் தற்கொலையை கொலையாக மாற்றி நாடகமாடியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து  திருப்பூர் போலீசார் மாரிமுத்து தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரித்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கள்ளக்காதல் தொடர்பான குடும்ப தகராறில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதற்கிடையே, மாரிமுத்துவின் தற்கொலையை மறைத்து, அதை கொலையாக ஜோடித்து மத கலவரத்தைத் தூண்டுவதற்காக அவரது உடல் அருகே பிரதமர் மோடியின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்தது பாஜகவை சேர்ந்த அவரது உறவினர்கள் 2 பேர் என தெரிய வந்தது. அந்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

இதன் மூலம் பாஜகவின் மத கலவர சதித்திட்டம் மீண்டும் ஒருமுறை அம்பலமாகியிருக்கிறது.