“எமது அடையாளத்தை அழித்து இந்தியை முன்னிறுத்தும் பாஜகவின் முயற்சிகள் உறுதியுடன் எதிர்க்கப்படும்!” – முதல்வர் மு.க.ஸ்டாலின்
“எமது அடையாளத்தை அழித்து இந்தியை முன்னிறுத்தும் பாஜகவின் முயற்சிகள் உறுதியுடன் எதிர்க்கப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
காலனியத்தின் தளைகளில் இருந்து விடுவிக்கிறோம் என்ற பெயரில் செய்யப்படும் மறுகாலனியாக்கம். பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சன்ஹிதா, பாரதிய ரக்ஷ்ய சன்ஹிதா என்ற பெயர்களில் மத்திய பாஜக அரசு ஒட்டுமொத்தமாக மாற்றிக் கொண்டுவந்துள்ள சட்ட வரைவுகளில் மொழியாக்கத்தின் முடை நாற்றம் எடுக்கிறது.
இது இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் அராஜக முயற்சியாகும். இந்திய ஒற்றுமையின் அடிப்படையையே இது அவமதிக்கிறது. பாரதிய ஜனதா கட்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இனி ‘தமிழ்’ என்று உச்சரிக்கக்கூட தார்மிக உரிமையில்லை.
வரலாற்றில் இப்படி எத்தனையோ அடக்குமுறைகளால் புடம்போடப்பட்டு அடக்குமுறைகளை எதிர்ப்பதில் முன்கள வீரர்களாக நிற்பவைதான் தமிழகமும் திமுகவும். இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள், எமது மொழி அடையாளத்தைக் காப்பது என இந்தி திணிப்பின் கொடும்புயலை எதிர்கொண்டவர்கள் நாங்கள். மீண்டும் அசைக்கமுடியாத உறுதியுடன் அதனை எதிர்கொள்வோம்.
இந்தி காலனியாக்கத்துக்கு எதிரான தீ மீண்டும் ஒருமுறை பரவுகிறது. எமது அடையாளத்தை அழித்து இந்தியை முன்னிறுத்தும் பாஜகவின் முயற்சிகள் உறுதியுடன் எதிர்க்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.