தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெற்ற நன்கொடை ரூ.6,986 கோடி: தேர்தல் ஆணையம் தகவல்

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.6,986.5 கோடி, திரிணமூல் காங்கிரஸ் ரூ.1,397 கோடி, காங்கிரஸ் ரூ.1,334.35 கோடி பெற்றுள்ளன. தமிழகத்தை பொருத்தவரை திமுக ரூ.656.5 கோடியும், அதிமுக ரூ.6.05 கோடியும் பெற்றுள்ளன.

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் நடைமுறை கடந்த 2017-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, 2018 ஜனவரியில் அமல்படுத்தப்பட்டது.

இதன்படி ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வெளியிட்டது. இந்த பத்திரங்களை நிறுவனங்கள், தனிநபர்கள் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கினர்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, இத்திட்டத்தை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ரத்து செய்தது. இதுவரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த முழு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு ஸ்டேட் வங்கிக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்படி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ கடந்த 12-ம்தேதி சமர்ப்பித்தது. தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் இந்த விவரங்களை கடந்த 14-ம் தேதி வெளியிட்டது. அதில், நன்கொடை வழங்கிய நிறுவனங்கள், தனிநபர்களின் பெயருடன் ஒரு பட்டியல், கட்சிகள் பெற்ற நன்கொடை விவரத்துடன் ஒரு பட்டியல் என 2 பட்டியல்கள் இடம்பெற்றன. எந்த நிறுவனம், யாருக்கு எவ்வளவு நன்கொடை வழங்கியது என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை.

இதையடுத்து, தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ முழுமையாக வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ மார்ச் 18-ம் தேதி (இன்று) விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, சில கட்சிகள் தாங்கள் பெற்ற நன்கொடை விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. இந்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் வழங்கியது. இவற்றையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் ஊடக பிரிவு இணை இயக்குநர் அனுஜ் சந்தக் நேற்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே 2019 ஏப்ரலுக்கு பிந்தைய தேர்தல் பத்திர விவரங்களை இணையதளத்தில் வெளியிட்ட தேர்தல் ஆணையம், 2019 ஏப்ரலுக்கு முந்தைய விவரங்களை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கட்சிகள் வழங்கிய புள்ளிவிவரங்களும் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம்:

புதிய புள்ளிவிவரங்களின்படி தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.6,986.5 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது. பாஜகவுக்கு அடுத்து திரிணமூல் காங்கிரஸ் ரூ.1,397 கோடி, காங்கிரஸ் ரூ.1,334.35 கோடி பெற்றுள்ளன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.442.8 கோடி, தெலுங்கு தேசம் ரூ.181.35 கோடி பெற்றுள்ளன.

திமுகவுக்கு ரூ.656.5 கோடி கிடைத்துள்ளது. இதில் ரூ.509 கோடியை லாட்டரி அதிபர் சான்டியாகோ மார்ட்டினின் பியூச்சர் கேமிங் நிறுவனம் வழங்கியுள்ளது. திமுகவின் ஒட்டுமொத்த தேர்தல் பத்திர நிதியில் மார்ட்டினின் நன்கொடை மட்டுமே 83 சதவீதம் ஆகும்.

திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு மார்ட்டின் ரூ.1,368 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக வழங்கியுள்ளார். இதில் 37 சதவீதம் திமுகவுக்கு கிடைத்துள்ளது.

அதிமுகவை பொருத்தவரை, லட்சுமி மிஷின் ஒர்க்ஸ் லிமிடெட் ரூ.1 கோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.5 கோடி, கோபால் நிவாசன் ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.6.05 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது.

பிஜு ஜனதா தளத்துக்கு ரூ.944.5 கோடி, பிஆர்எஸ் கட்சிக்கு ரூ.1,322 கோடி, சமாஜ்வாதிக்கு ரூ.14.05 கோடி, அகாலி தளத்துக்கு ரூ.7.26 கோடி, தேசிய மாநாட்டு கட்சிக்கு ரூ.50 லட்சம் நன்கொடை கிடைத்துள்ளது. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு ரூ.56 கோடி, மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ரூ.89.75 கோடி கிடைத்துள்ளது.