விவசாயிகள் போராட்டம் பற்றி நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து: பாஜக மூத்த தலைவர் கண்டனம்

பாஜக எம்.பியும் நடிகையுமான கங்கனா ரனாவத்துக்கு சர்ச்சைகள் புதிது இல்லை. எம்.பி ஆவதற்கு முன்பும் சரி, எம்.பி ஆனதற்கு பிறகும் சரி, தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

கடந்த வாரம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறித்து தவறாக சித்தரிக்கும் படத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். அதன்பிறகு, “பாலிவுட்டில் யாருக்கும் மூளையே இல்லை. அவர்களுடன் நான் பழகுவதே இல்லை” என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார். அதுபோல இந்த வாரமும் புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். ஏற்கெனவே இவர் விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசிய விவகாரத்தில் சண்டிகர் விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் பெண் ஊழியர் பளார் என்று அறை விட்டிருந்தார். இருந்தபோதும் கங்கனா திருந்தவில்லை. பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்தை மீண்டும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

இது குறித்து கங்கனா ரனாவத் தன் எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில், “பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் தொல்லைகளும், கொலைகளும் நடந்தன. அதிர்ஷ்டவசமாக மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. இல்லையென்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருப்பார்கள். அது சார்ந்த திட்டங்களை அவர்கள் வைத்திருந்தனர்.

விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க பிரதமர் மோடி தலைமையில் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இல்லையென்றால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள். அங்கு நடைபெற்ற அதே சூழ்நிலை இங்கும் நடந்திருக்கும். வெளிநாட்டில் இருந்து இதற்கான சதித்திட்டம் நடந்த்து. நாடு யாரின் கைகளில் சென்றாலும் அதைப்பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை. விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து இந்த நாடு அறியாது. படுகொலை செய்து தூக்கிலிடப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது” என்று கூறியுள்ளார்.

அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், பாஜகவினரே அவரைக் கண்டிக்க தொடங்கியுள்ளனர். முக்கியமாக பஞ்சாப் மாநில பாஜக மூத்த தலைவர் ஹர்ஜித் கரேவல் கங்கனாவை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் ஹர்ஜித், “விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா ரனாவத் பேச வேண்டிய அவசியமே இல்லை. கங்கனா பேசியிருப்பது அவரின் தனிப்பட்ட கருத்து. பிரதமர் மோடியும், பாஜகவும் எப்போதும் விவசாயிகளின் நண்பர்களாக உள்ளோம். ஆனால் எதிர்க்கட்சிகள் பாஜக விவசாயிகளுக்கு எதிரானவர்கள் போன்ற பிம்பத்தை கட்டமைத்து வருகின்றனர். அதைத்தான் கங்கனா ரனாவத்தின் கருத்தும் பிரதிபலிக்கிறது. மதம், விவசாயிகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் கங்கனா கருத்து சொல்லாமல் இருப்பது ரொம்பவே நல்லது” என்று கூறியுள்ளார்.

இதேபோல விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கங்கனாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.